1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (08:47 IST)

பாம்பு கடித்த பின்பு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

(இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில் தொடராக பிபிசி தமிழ் வெளியிடுகிறது. இதன் 6 பாகங்கள் 2020இல் வெளியாகின. 9ஆம் பாகம் இது.)
 
பாம்பு கடித்த பின்பு கடிபட்ட இடத்தில் இருக்கும் தசையை வெட்டி எடுக்க வேண்டும் அல்லது கடிபட்ட இடத்திற்கு மேல் இறுக்கமாக கைக்கொண்டு கட்ட வேண்டும் என்றெல்லாம் நீங்கள் இதுவரை எங்காவது படித்து யாராவது சொல்லிக் கேட்டு இருக்க வாய்ப்புண்டு.
 
பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து உடனடியாக ரத்தத்தை உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்று கூட ஒரு மூட நம்பிக்கை உண்டு.
 
உங்கள் மனதுக்கு பிடித்த நடிகர்கள், திரைப்படங்களில் இவற்றைச் செய்வதைக் கூட பார்த்திருப்பீர்கள்.
 
இயற்கை மருத்துவம் எனும் பெயரில், பாம்பு கடித்த இடத்தின் அருகே கிடைக்கும் பச்சை இலை சாறை ஊற்ற வேண்டும் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இதுவரை இதற்கு அறிவியல்பூர்வமான நிரூபணம் எதுவும் இல்லை.
 
ஆனால், இவை யாவும் அறிவியலுக்குப் பொருந்தாதவை மட்டுமல்ல, உண்மையானவையும் அல்ல. இவற்றால் நேரம் வீணாகி பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவருக்கு உயிர் போகும் ஆபத்துதான் அதிகமாகும்.
 
எந்த வகை பாம்பு கடித்தது என்பதை, மருத்துவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அந்தப் பாம்பின் வகையை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும், முடிந்தால் அதை அடித்துக் கொன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் கூட உங்களை அறிவுறுத்தும் சமூக ஊடகப் பதிவுகளும் இணையதளக் காணொளிகளும் ஏராளம்.
 
இறுக்கமாகக் கட்டுவதால் "ஆபத்து"
 
"பாம்பு கடித்த இடத்தின் அருகே இறுக்கமான கயிறு உள்ளிட்டவற்றை கொண்டு கட்டுவதால் எந்த ஒரு பயனும் இருக்காது. ஒருவேளை அப்படி கட்டப்பட்டால், அந்தக் கட்டு அகற்றப்படுவதை நல்ல மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடைய பெரிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் செய்வதே நல்லது. ஏனென்றால், இறுக்கமாக கட்டப்பட்டிருந்த கட்டு பிரிக்கப்படும் பொழுது அந்த இடத்தில் இருந்து ரத்த ஓட்டம் அதிகமாகும். இதன் காரணமாக உடலின் பிற பாகங்களுக்கும் சென்றடைந்து பாதிப்பும் அதிகமாகும். நல்ல வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் இந்த பாதிப்பை குறைப்பதற்கான சிகிச்சைகளை எளிதில் செய்ய முடியும்," என்று தெரிவிக்கிறார் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தடயவியல் மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர் முத்துக்குமார்.
 
கடித்தது எந்த வகை பாம்பு என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்து நேரத்தைக் கடத்துவதை விட, விரைவில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில்தான் கவனத்தை செலுத்த வேண்டும். ஏனென்றால், எந்த வகைப் பாம்பு கடித்து இருந்தாலும் பாம்புக் கடிக்கு எதிராக வழங்கப்படும் மருந்து ஒன்றுதான் என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"பாம்புக்கடி பட்ட பின்பு கயிறு கட்டுவதால் பலனில்லை என்பதையும் தாண்டி, அந்த நச்சு கடிபட்ட இடத்திலேயே அதிகமாக தேங்கி இருப்பதற்கும் கயிறு கட்டப்படுவது வழிவகுக்கும். இதன் காரணமாக கடிபட்ட இடத்தில் அணுக்கள் பாதிக்கப்பட்டு, சீழ் பிடிக்கும் நிலை கூட உண்டாகலாம்," என்கிறார் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கண்காணிப்பாளராக உள்ள மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.
 
உண்மையில் பாம்பு கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை காண்போம்.
 
பாம்பு கடித்த உடன் என்ன செய்ய வேண்டும்?
 
நாக பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன். இந்த நான்கு வகைப் பாம்புகளே இந்தியாவில் அதிக பாம்புக்கடி மரணத்துக்கு காரணமாக உள்ளன.
 
ஒருவருக்கு பாம்பு கடித்தது தெரியவந்தாலோ அது கடித்து இருப்பது போல உணர்ந்தாலோ என்ன செய்ய வேண்டும் என்ற சில வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ளது.
 
எந்த இடத்தில் அந்த நபரை பாம்பு கடித்ததோ அங்கிருந்து உடனடியாக அவர் வெளியேற வேண்டும்.
பாம்பு கடித்த உடல் பாகத்தின் அருகே மோதிரம், வளையல், காப்பு, பிரேஸ்லெட் உள்ளிட்ட எதையேனும் அணிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். ஏனென்றால் கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றின் காரணமாக அபாயம் ஏற்படலாம்.
 
கடிபட்டவர் இயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும்.
பாரம்பரிய மருத்துவ முறை எனும் பெயரில் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கக்கப்படாத அல்லது ஆபத்தை விளைவிக்கக் கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையையும் செய்யக்கூடாது. மருத்துவ வசதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவரை இடது பக்கமாக ரெக்கவரி பொசிஷன்-இல் படுக்க வைக்கவும்.
 
மூச்சுப்பாதை தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய தலையும் கழுத்தும் நேராக இருக்கும் வகையில் படுக்க வைக்க வேண்டும்.
ஒரு கையை பக்கவாட்டில் மேல்நோக்கியும் இன்னொரு கையை மடித்து கன்னத்தின் அருகிலும் வைக்க வேண்டும்.
முதலுதவி செய்பவரின் எதிர் திசையில் இருக்கும் பாதிக்கப்பட்டவரின் முழங்காலை 90 டிகிரிக்கு மடிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபர் முதலுதவி செய்யும் நபரை நோக்கி இருக்கும் திசையில், அவரது உடலைத் திருப்ப வேண்டும்.
மடித்துக் கன்னத்தில் வைக்கப்பட்ட கை தலைக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்கமாகக் கட்டக் கூடாது. அப்படி இறுக்கமாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும்.
 
பாம்பு கடித்த இடத்தில் வீக்கத்தை உண்டாக்காமல் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மையுள்ள பாம்புகளின் கடிகளுக்கு மட்டும் கை அல்லது கால் விரல்களில் இருந்து கடிபட்ட இடம் மற்றும் அதற்கும் மேல் பேண்டேஜ் அல்லது எலாஸ்டிக் சுற்றி (Pressure immobilisation technique) நச்சு உடலின் பிற பாகங்களுக்கு பரவாமல் தடுக்கலாம். ஆனால், ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு மிகவும் இறுக்கமாக இருக்கக் கூடாது. தசைப் பிடிப்புக்கு ஒட்டப்படும் பேண்டேஜின் இறுக்கமே போதுமானது.