வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (14:57 IST)

விஜய் வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் என்ன நடக்கிறது? 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாகுமா?

Vijay

நாம் தமிழர் கட்சியைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாகவும் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேரடியாகவும் விமர்சித்துள்ளனர்.

 

 

ஆனால், அ.தி.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் த.வெ.க-வை இதுவரையிலும் விமர்சிக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 

தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி ஆகியவை த.வெ.க மீது கடும் விமர்சனத்தை முன்வைப்பது ஏன்? இதன் பின்னணி என்ன?

 

த.வெ.க மாநாடும் விமர்சனமும்
 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.

 

மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், "சாதி, மதம், இனம் என மக்களைப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பேன்" என்றார்.

 

தொடர்ந்து பேசிய விஜய், "மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் குடும்ப சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி" என்றார்.

 

'திராவிடமும் தமிழ்த் தேசியமும்' எனது இரு கண்கள் என்று விஜய் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு, நாம் தமிழர் கட்சியின் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.

 

"திராவிடமும் தமிழ்த் தேசியமும் வேறுவேறு. இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? இது நடுநிலை அல்ல. கொடுநிலை" என்றார் சீமான்.

 

மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலின்
 

திங்கள்கிழமையன்று சென்னை கொளத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், த.வெ.க-வை மறைமுகமாகச் சாடினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "புதிது புதிதாக கட்சி தொடங்குகிறவர்கள் எல்லாம் தி.மு.க ஒழிய வேண்டும், அழிய வேண்டும் எனப் பேசி வருகிறார்கள். நான்கு ஆண்டுகளைத் தொடப் போகும் இந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள். உங்களின் வசைச் சொற்களுக்கெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம்" என்றார்.

 

"தி.மு.க.வில் சேரலாம்" -ஹெச்.ராஜா

 

தமிழக பா.ஜ.க-வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்புக் குழு தலைவரான ஹெச்.ராஜா, "புதிதாக விஜய் தொடங்கிய கட்சியின் தீர்மானங்களைப் பார்க்கும் போது அவர் தி.மு.க.வில் சேரலாம்" என்றார்.

 

"மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறும் விஜய் எப்படி பா.ஜ.க.,வின் பி டீமாக இருப்பார்?" எனக் கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, "இத்தனை பி டீம்களை எங்கள் கட்சி தாங்காது" என்றார்.

 

தே.மு.தி.க கூறுவது என்ன?
 

"இப்போதுதான் மாநாடு நடத்திக் கொடியேற்றியிருக்கிறார். அவரின் செயல்பாடுகளைப் பொறுத்துதான் எல்லாம் இருக்கிறது" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

 

தேசியம், திராவிடம் குறித்துப் பேசிய பிரேமலதா, "தேசியத்தில்தான் திராவிடம் இருக்கிறது. திராவிடத்தில்தான் தமிழ்நாடு இருக்கிறது" என்றார்.

 

அதிமுக கருத்து
 

அ.தி.மு.க-வை நடிகர் விஜய் விமர்சிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதில் அளித்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இதில் மற்றவர்களுக்கு என்ன கஷ்டம்?" எனக் கேள்வி எழுப்பினார்.

 

மேலும், "அ.தி.மு.க ஆட்சியில் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். மற்ற கட்சிகளை ஏன் விமர்சிக்கவில்லை என ஆதங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

 

தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது?

 

தமிழக வெற்றிக் கழகம் குறித்த தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகள் பற்றி மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணியிடம் பிபிசி தமிழ் பேசியது.

 

"வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், 'தி.மு.க-வை எதிர்த்து வெற்றி பெறுவதற்கு விஜய் வந்திருக்கிறார்' என நினைப்பவர்கள் த.வெ.க-வை ஆதரிக்கின்றனர். இது அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் கணக்காக உள்ளது. இதன் பாதிப்புகளை உணர்ந்ததால்தான் விஜயை முதலைமைச்சர் விமர்சித்துப் பேசுகிறார். பா.ஜ.க.வை பொருத்தவரை ஹெச்.ராஜாவின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. லண்டனில் இருந்து அண்ணாமலை வந்த பின்னர்தான் நிலவரம் தெரியும்" என்கிறார்.

 

"தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான கொள்கைகள்தான் உள்ளன. விஜய் கட்சியின் செயல் திட்டங்களைப் பார்த்தால் பிற கட்சிகளுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

 

2026 சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாகுமா?
 

"தற்போதைய அரசியல் நகர்வுகளைப் பார்த்தால், 2026 தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராக அ.தி.மு.க, த.வெ.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் ஒரு புள்ளியில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் ஷ்யாம்.

 

தொடர்ந்து பேசிய அவர், "தி.மு.க எதிர்ப்பு, ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, குடும்ப ஆட்சி முறை ஆகியவற்றை இந்த மூன்று கட்சிகளும் எதிர்க்கின்றன. இவர்களின் இலக்கு என்பது, தி.மு.க எதிர்ப்பு வாக்குகளைத் திரட்டுவது; பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைப் பெறுவது; தமிழ், தமிழ்நாடு, நீட் எதிர்ப்பு, இலங்கைத் தமிழர் ஆதரவு வாக்குகளைக் கவர்வது போன்றவை" என்கிறார் அவர்.

 

வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறும் ஷ்யாம், "த.வெ.க பக்கம் அணி சேரும் கட்சிகளால் 35 சதவீத வாக்குகளைப் பெற முடியும் என்றால் அந்தப் பக்கம் மேலும் சில கட்சிகள் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.

 

திமுக அழிய வேண்டும் என்று தவெக கூறவில்லை

 

த.வெ.க முன்வைக்கும் சமத்துவக் கோட்பாடுகளால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்பதாலேயே சில கட்சிகள் விமர்சிப்பதாகக் கூறுகிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி.

 

"பிற கட்சிகளின் வாக்குகளைப் பிரிப்பதற்காக த.வெ.க வரவில்லை. மற்ற கட்சிகளை அழிப்பதும் நோக்கமல்ல. எங்கள் கொள்கையைப் பிடிக்காதவர்கள்தான் வன்மத்துடன் பேசுகிறார்கள்" என்கிறார் லயோலா மணி.

 

முதலமைச்சரின் விமர்சனம் குறித்துப் பேசிய அவர், "த.வெ.க தலைவரை ஒருமையில் விமர்சித்துப் பேசியது சரியல்ல. தி.மு.க அழிய வேண்டும் என எந்த இடத்திலும் த.வெ.க தலைவர் கூறவில்லை. விஜய் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதாகக் கூறுவது வருத்தம் அளிக்கிறது" என்கிறார்.

 

தி.மு.க-வுக்கும் விஜய்க்கும் பிரச்னையா?

 

இந்தக் கருத்தில் முரண்படும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன், "த.வெ.க தலைவரை முதலமைச்சர் ஒருமையில் விமர்சிக்கவில்லை. 'புதிதாக வருகிறவர்கள் எல்லாம் தி.மு.க-வை விமர்சிக்கிறார்கள்' என்றுதான் பேசினார்" என்கிறார்.

 

"தி.மு.க ஆட்சிக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க பிரிக்கலாம் அல்லது நாம் தமிழர் கட்சியின் பக்கம் செல்லலாம். இதில் த.வெ.க-வுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை" என்று கூறுகிறார் கான்ஸ்டன்டைன்.

 

மேலும், "நடிகர் விஜய்க்கும் தி.மு.க-வுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போது அவர் பேசி வரும் இதே கருத்தைப் பேசிய பலரும், எங்களுடன் கூட்டணி வைத்துள்ளனர்" என்றும் தெரிவித்தார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு