வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (14:31 IST)

விக்ரமும் பொன்னியின் செல்வனும் தமிழ் திரையுலகிற்கு செய்தது என்ன?

Ponniyin selvan review
வசூலில் சாதனை படைத்த விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில், 2022ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு ஓரளவுக்கு நல்ல ஆண்டாகவே அமைந்தது. இந்தப் போக்கு தொடருமா?

இந்த 2022ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கவனிக்கப்பட்ட மிக முக்கியமான ஐந்து திரைப்படங்கள் என்று பார்த்தால், பொன்னியின் செல்வனின் முதல் பாகம், விக்ரம், லவ் டுடே ஆகிய திரைப்படங்கள் இடம்பெறும். விஜய் நடித்த பீஸ்ட், அஜித் நடித்த வலிமை ஆகிய திரைப்படங்கள் 200 கோடி ரூபாயைத் தாண்டிய படங்கள் என்ற வகையில் கவனிக்கத்தக்கவையாக இருந்தன.

டிசம்பர் 16ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் திரையரங்கங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200ஐ நெருங்குகிறது. இது தவிர, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகள் தமிழ்த் திரையுலகிற்கு மிகவும் சோதனையான ஆண்டுகளாக அமைந்தன. கோவிட் பரவலின் காரணமாக இந்த இரண்டு ஆண்டுகளிலும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காலகட்டமான கோடை காலத்தில் திரைப்படங்களை வெளியிட முடியவில்லை.

இதனால், இந்த இரண்டு ஆண்டுகளிலும் பெரும் எண்ணிக்கையிலான திரைப்படங்கள் ஓடிடி தளங்களிலேயே வெளியாயின. கடந்த வருட இறுதியில் ரசிகர்கள், ஓடிடி தளங்களுக்குப் பழகிப் போயிருந்தார்கள்.

வீடு தரும் சௌகர்யத்தில் படங்களை விரும்பிய நேரத்தில் பார்க்கும் வசதியை ஓடிடி தளங்கள் தந்ததால், இந்த வருடத்திலும் பெரும் எண்ணிக்கையிலான படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியிடத் திட்டமிடப்பட்டன.

இந்தப் பின்னணியில் திரையரங்குகளின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்தன. இனிமேல், திரையரங்குகளில் படங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக எல்லோரும் டிவியிலும் மொபைல் போனிலும் படங்களைப் பார்ப்பார்களோ என்ற அச்சமும் எழுந்தது.

இந்த வருடத் துவக்கத்தில் வெளியான சில படங்கள் வந்த வேகத்திலேயே, தியேட்டர்களை விட்டு வெளியேறியது இந்த அச்சத்தை உறுதிப்படுத்துவதைப்போலத்தான் இருந்தது. ஆனால், பிப்ரவரி மாத இறுதியில் வெளிவந்த அஜித்தின் வலிமை, திரையரங்குகளின் வலிமையை மீண்டும் காட்டியது.

அந்தப் படம் குறித்து கடுமையான பல விமர்சனங்கள் வெளியானபோதும், திரையரங்குகளில் ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்தார்கள். படத்தின் ஒட்டுமொத்த வணிகம் 200 கோடியைத் தாண்டியது.

இதற்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த பீஸ்ட், கன்னட மொழிமாற்றுப் படமான கேஜிஎஃப் ஆகியவை மீண்டும் ஒரு பெரும் நம்பிக்கையை உருவாக்கின. விஜய் நடித்த பீஸ்ட் படமும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டாலும், வசூலில் 200 கோடியைத் தாண்டியது. மற்றொரு எதிர்பாராத நிகழ்வு, கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி. இந்தப் படத்தைப் பார்க்க இரண்டாவது முறையெல்லாம் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வந்தார்கள்.

ஆனால், ஜூன் மாதம் வெளிவந்த ஒரு திரைப்படம், ஒரு புதிய வரலாற்றைப் படைத்தது. காலை நான்கு மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டபோது, சாதாரணமாகக் காட்சியளித்த திரையரங்குகள், மூன்றாவது காட்சிக்குத் திணற ஆரம்பித்தன. முதல் நாளிலேயே, அதற்கு அடுத்த ஒரு வாரத்திற்கு திரையரங்குகள் அனைத்தும் முன்பதிவில் நிரம்பின. ஒவ்வொரு நாளும் அந்தப் படம் வரலாறு படைக்க ஆரம்பித்தது. முடிவில் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது. அந்தப் படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம்.

இனிமேல் எல்லாம் ஓடிடிதான் என பலரும் முடிவுகட்டியிருந்த நிலையில், அந்தக் கணிப்புகளையெல்லாம் மாற்றியது விக்ரம். ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகிற்கே புத்துணர்ச்சி அளித்தது இந்தப் படம். கச்சிதமான திரைக்கதை, தேர்ந்த நடிகர்கள், மிகச் சிறப்பான ஒளிப்பதிவு, அட்டகாசமான பின்னணி இசை என ஒரு வெற்றிப் படத்திற்கான இலக்கணத்தை வகுத்தது விக்ரம்.

விக்ரம் படம் ஏற்படுத்திய பரபரப்பு ஓய்வதற்குள்ளாகவே, அடுத்த பரபரப்பு தொற்ற ஆரம்பித்தது. இந்த முறை, பொன்னியின் செல்வன் வடிவத்தில். செப்டம்பர் 30ஆம் தேதி படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முந்தைய சில மாதங்களில் இருந்தே இந்தப் படம் தொடர்பான செய்திகளும், படத்தின் கதை தொடர்பான தகவல்களும் ஊடகங்களில் கொட்ட ஆரம்பித்தன.

வேறு எந்தத் திரைப்படத்திற்குள் இல்லாத அளவுக்கு, மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகி, வெற்றிபெற்றது பொன்னியின் செல்வன். நாவலைப் பல முறை படித்தவர்கள், எதிர்பார்த்ததைப் போல படம் இல்லையென்று சொன்னாலும், இந்த தலைமுறையினரிடம் பெரும் வரலாறு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியது இந்தப் படம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், விக்ரமும் பொன்னியின் செல்வன் படமும் சேர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக, தொய்விலிருந்த தமிழ்த் திரையுலகிற்கே பெரும் எழுச்சியை ஏற்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த வெற்றிகரமான படங்களைத் தவிர, விமர்சன ரீதியாக கவனிக்கப்பட்ட, கவனிக்கப்பட வேண்டிய பல திரைப்படங்களும் இந்த ஆண்டு வெளியாயின. குறிப்பாக, தமிழ் இயக்கத்தில் வெளிவந்த டாணாக்காரன், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த சாணி காயிதம், கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த கார்கி, கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அனல் மேலே பனித் துளி, மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த கடைசி விவசாயி, ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் வெளிவந்த ரத்த சாட்சி, தீபக் இயக்கத்தில் வெளிவந்த விட்னெஸ் ஆகியவை வெகுவாக கவனிக்கப்பட்டன.
Ponniyin Selvan

இதில் பல படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியானது, ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியது. அதாவது சிறிய பட்ஜெட்டில் நல்ல கதை - திரைக்கதையுடன் படமெடுப்பவர்கள், இனியும் திரையரங்குகளை நம்பியிருக்க வேண்டியதில்லை; ஓடிடி தளங்கள் இந்த திறமை மிகுந்த இளம் இயக்குனர்களுக்கான களங்களாக அமைந்திருக்கின்றன.

மாறாக, பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் இருந்தும் பல படங்கள் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. உதாரணமாக, மஹான், கோப்ரா, டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன்ஸ், பிரின்ஸ், காஃபி வித் காதல் போன்ற திரைப்படங்கள் இதற்கு உதாரணங்கள்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, எதிர்கால தமிழ் சினிமா எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான பாதையை இந்த 2022ஆம் ஆண்டு வகுத்துத் தந்திருக்கிறது. கதை, திரைக்கதை, படமாக்கும் விதம் ஆகியவையே ஹீரோ என்பதை வலுவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது இந்த ஆண்டு.

2023ஆம் ஆண்டிலும் பல மிகப் பெரிய படங்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன. துணிவு, வாரிசு, இந்தியன் - 2, ஜெயிலர், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் என ஒரு உற்சாகப் பாய்ச்சலுக்குக் காத்திருக்கிறது தமிழ் சினிமா. ஓடிடியில் உலகம் முழுவதும் வெளியாகும் சிறந்த திரைப்படங்களைப் தொடர்ந்து பார்த்துக்கொண்டியிருக்கும் ரசிகர்களும் தயாராக இருக்கிறார்கள்.