செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (12:46 IST)

2500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத இலக்கண புதிருக்கு விடை - இது என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

Sanskrit
கிமு 5ஆம் நூற்றாண்டு முதல் அறிஞர்களை பெரும்குழப்பத்தில் ஆழ்த்திவந்த ஒரு சமஸ்கிருத இலக்கணச் சிக்கலுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவர் ஒருவர் தீர்வு கண்டுள்ளார்.

27 வயதான ரிஷி ராஜ்போபட், சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால சமஸ்கிருத மொழி அறிஞர் பாணினி கற்பித்த இலக்கண விதியில் இருந்த புதிருக்கு தற்போது விடை கண்டுள்ளார்.

இந்தியாவில் சமஸ்கிருதம் ஏறக்குறைய 25,000 மக்களால் பேசப்படுவதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கேம்பிரிட்ஜில் எங்கும் செல்லாமல் 9 மாதங்கள் செலவழித்த பிறகு, திடீரென இந்தப் புதிருக்கான விடையைக் கண்டுபிடித்ததாக ராஜ்போபட் கூறினார்.

“ஒரு மாதத்திற்கு புத்தகத்தை ஓரம் வைத்துவிட்டு நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, சமையல் செய்வது, இறையை வேண்டுவது, தியானம் செய்வது என கோடைகாலத்தை அனுபவித்தேன். பின்னர், வெறுப்புடன் மீண்டும் புத்தகத்தை எடுத்தேன். பக்கங்களைப் புரட்டும்போது சில நிமிடங்களுக்கு உள்ளாகவே இதற்கான விடை கிடைத்து, அனைத்தும் புரியத் தொடங்கின” என்கிறார் ராஜ்போபட்.

நடுஇரவு உட்பட பல மணி நேரங்களை நூலகத்தில் செலவிட்டதாக கூறும் அவர், இந்த இலக்கண சிக்கல் குறித்து ஆராய இன்னும் இரண்டரை ஆண்டுகள் தனக்கு தேவைப்படும் என்றார்.

சமஸ்கிருதம் பரவலாக பேசப்படாவிட்டாலும்கூட, இந்து மதத்தின் புனித மொழியாக கருதப்படுகிறது. மேலும், இந்திய அறிவியல், தத்துவம், கவிதை மற்றும் பிற மதச்சார்பற்ற இலக்கியங்களில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.

அஷ்டாத்தியாயீ என்று அழைக்கப்படும் பாணினியின் இலக்கணம், ஒரு வார்த்தையையும் பின்னொட்டையும் இலக்கண முறைப்படி இணைத்து சரியான சொற்களாகவும் வாக்கியங்களாகவும் மாற்றுவதை அடிப்படையாகக் கொண்டது. எனினும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாணினியின் விதிகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பொருந்தி, முரண்களை ஏற்படுத்தும்.

பாணினி மற்ற விதிகளின் பயன்பாட்டை நிர்வகிக்கும் விதி ஒன்றையும் கற்பித்தார். இது, இரண்டு விதிகளுக்கு இடையே முரண் ஏற்பட்டால் இலக்கண வரிசையில் இரண்டாவதாக வரும் விதி பொருந்தும் என்று வழக்கமாக அறிஞர்களால் பொருள் கொள்ளப்படுகிறது. எனினும், இது பெரும்பாலும் இலக்கணப் பிழைகளுக்கே வழிவகுத்தது. ஆனால், பாணினியின் விதி தொடர்பான அறிஞர்களின் விளக்கத்தை ராஜ்போபட் நிராகரித்துள்ளார்.

முரண் ஏற்படும் போது, ஒரு வார்த்தையின் இடது மற்றும் வலது பக்கங்களுக்கு பொருந்தக்கூடிய விதிகளுக்கு இடையில், வலது பக்கத்திற்கு பொருந்தக்கூடிய விதியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பாணினி கூறியுள்ளதாக ராஜ்போபட் வாதிடுகிறார்.

இந்த முறையைப் பின்பற்றி, கிட்டத்தட்ட விதிவிலக்குகள் இல்லாமல் இலக்கண முறைப்படி சரியான சொற்களை உருவாக்க முடிவதை அவர் கண்டறிந்தார்.

"இந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், பெருமையையும், பெரிய சாதனைகள் படைக்க முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்" என்று ராஜ்போபட் கூறினார்.

"பல நூற்றாண்டுகளாக அறிஞர்களை குழப்பிய ஓர் இலக்கணச் சிக்கலுக்கு ராஜ்போபட் நேர்த்தியான தீர்வை கண்டுபிடித்துள்ளார்” என்கிறார் அவரது கேம்பிரிட்ஜ் மேற்பார்வையாளரும், சமஸ்கிருத பேராசிரியருமான வின்சென்சோ வெர்ஜியானி.

"சமஸ்கிருதம் மீதான ஆர்வம் அதிகரித்துவரும் இந்தச் சமயத்தில், இந்தக் கண்டுபிடிப்பு சமஸ்கிருதப் படிப்பில் புரட்சியை ஏற்படுத்தும்” என்றும் அவர் கூறினார்.