திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (22:18 IST)

அஜித் தோவல் முன் இந்திய முஸ்லிம்கள் குறித்து இஸ்லாமிய அமைப்பின் தலைவர் பேசியது என்ன?

இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குரல் எழுப்பி இருந்தார். ஒபாமாவின் இந்த பேச்சுக்கு பின் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை பற்றிய விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
 
இந்தியாவில் ‘பொது சிவில் சட்டம்’ கொண்டு வருவது குறித்தும் அண்மை காலமாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டம் குறித்த தங்களின் கவலைகளை முஸ்லிம் சமூகத்தினர் வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தான் முஸ்லிம் உலக லீக் அமைப்பின் பொதுச் செயலரும், செளதி அரேபியாவின் முன்னாள் சட்ட அமைச்சருமான முகமது பின் அப்துல் கரீம் அல்-இஷா ஆறு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக முஸ்லிம் உலக லீக் விளங்குகிறது.
 
செளதி அரேபியாவின் சட்ட அமைச்சராக அல் -இஷா பதவி வகித்தபோது பெண்களின் உரிமைகள், குடும்ப விவகாரங்கள் மற்றும் மனிதாபிமான விஷயங்கள் தொடர்பான சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். பல்வேறு நாடுகள், சமூகங்கள் மற்றும் பிரிவுகளுக்கு  இடையேயான உறவுகளை வலுப்படுத்தும்  நோக்கில் உலகம் முழுவதும் பல்வேறு பிரசாரங்களையும் இவர் முன்னெடுத்து வருகிறார்.
 
தனது இந்திய பயணத்தின் முக்கிய நிகழ்வாக பிரதமர் நரேந்திர மோதி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார்.
 
மற்றொரு முக்கிய நிகழ்வாக, டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாசார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அல்-இஷா பங்கேற்றார்.
 
சந்திரயான் -3: நாசா நான்கே நாட்களில் நிலவை அடையும் போது இஸ்ரோவுக்கு மட்டும் 40 நாட்கள் ஏன்?
 
அல்- இஷாவுக்கு நினைவு பரிசு வழங்கும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
 
இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் குறித்து அஜித் தோவலும், முகமது பின் அப்துல் கரீம் அல்- இஷாவும் இந்த நிகழ்ச்சியில் நிறைய பேசினர்.
 
பயங்கரவாதத்துக்கும், எந்த மதத்திற்கும் தொடர்பு இல்லை. இருப்பினும் வன்முறை பாதையில் பயணிப்போரை எதிர்ப்பது மதத் தலைவரின் தலையாய பொறுப்பு என்று அஜித் தோவல் பேசினார். “பயங்கரவாதம் எந்த மதத்துடனும் தொடர்புடையது அல்ல. ஆனாலும் சிலர் தவறான பாதையில் செல்கின்றனர். வன்முறை வழிகளைப் பின்பற்றுபவர்களை திறம்பட  எதிர்ப்பது அனைத்து மதம் மற்றும் ஆன்மிக வழிகளை பின்பற்றும் தலைவர்களுக்கும், அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றும் தலைமைகளுக்கும் தலையாய பொறுப்பாகும்” என்று அஜித் தோவல் பேசினார்.
 
பல்வேறு மதத் தலைவர்கள், அறிஞர்கள், தூதர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அஜித் தோவல் இவ்வாறு பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவின் ஒருமைப்பாடு குறித்தும், இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூகத்தினர் பற்றியும் அல்-இஷா பாராட்டி பேசினார்.
 
“தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றியும் இந்திய முஸ்லிம்கள் பெருமிதம் கொள்கின்றனர்’ என்று அல் - இஷா கூறினார்.
 
மோதியின் பிரான்ஸ் பயணம் – இரு நாடுகளுக்கிடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்த உதவுமா?
 
“இந்தியாவின் கலாசார பெருமைகள் குறித்தும் நாங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். பன்முகத்தன்மை கொண்ட சமூகங்கள் ஒன்றாக வாழ்வதற்கு இந்தியா ஒரு சிறந்த நாடு  என்பதையும் நாம் அறிவோம். இந்தியாவில் அனைத்து சமூகத்தினர் மத்தியிலும் ஒற்றுமை நிலவுகிறது என்பது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல; இதை களத்திலும் கண்கூடாகவும் நாம் காணலாம். அனைத்து சமூகத்தினரும் இணைக்கமாக இணைந்து வாழ்வதே நமது பொதுவான குறிக்கோள் என்பதும் தெரியும். இவற்றை கருத்தில் கொண்டு இந்தியா மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் வரவேற்கிறோம்” என்று அல் - இஷா பேசினார்.
 
அதற்கு “இஸ்லாம் மற்றும் உலகில் உள்ள பிற மதங்கள் குறித்த உங்களின் புரிதல், மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்திற்கு நீங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை. உங்களின் இந்த பாராட்டத்தக்க செயல்பாடுகள் மனித குலத்துக்கு சிறந்த பங்களிப்பை அளிப்பதோடு, இஸ்லாம் குறித்து சிறந்த முறையில் விளக்கமும், தீவிரவாதம் மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதையும் தடுக்க உதவுகிறது,” என்று அல்- இஷாவை அஜித் தோவல் வெகுவாக பாராட்டி பேசினார்.
 
மேலும் அவர் பேசும்போது, “ அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதால், இங்கு எந்த மதத்திற்கும் ஆபத்தில்லை. பல்வேறு மதங்கள், சமூகங்கள் மற்றும் கலாசார பின்னணி கொண்ட அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான இடமாக இந்தியா திகழ்கிறது. இருப்பினும்  இன்றைய காலகட்டத்தின் சவால்களை எதிர்கொள்ள சகிப்புத்தன்மை, சமாதான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.
 
200 மில்லியன் முஸ்லிம்கள் இந்திய குடிமக்களாக இருக்கும் போது, இவர்களில் சிலர் மட்டும் உலகளாவிய பயங்கரவாதத்துடன் தொடர்புப்படுத்தப்படுவது ஏதோ தற்செயலான நிகழ்வு அல்ல,” என்றும் அஜித் தோவல் தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
 
“இந்தியாவில் உள்ள பல மதங்களில் இஸ்லாம் தனித்துவமான மற்றும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. உலகில் அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இஸ்லாமிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 33 நாடுகளின் மக்கள் தொகையை சேர்த்தால், அது இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு சமமாக இருக்கும்” எனவும் இந்த நிகழ்ச்சியில் அஜித் தோவல் பேசினார்.
 
குஸ்ரோ அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மலேசியா, ஈரான், ஓமன், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் பங்கேற்றனர்.
 
பல்வேறு மதங்கள், கலாசாரங்களை சேர்ந்த, பல மொழிகளை பேசும் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் இடமாக இந்தியா திகழ்கிறது. மதம் மற்றும் கலாசார பாரபட்சமின்றி அனைத்து குடிமக்களுக்கும் சமமான வாய்ப்புகளை தருவதில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ‘அனைவருக்கும் சமூக உரிமை, சம வாய்ப்பு மற்றும் சமமான கடமை’ என்ற வரையறையின்படி நவீன இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டத்தால் இங்கு சமத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ஒரு  விஷயத்தில் கருத்து வேறுபாடு எழுந்தால், அது மற்றவர்களை புண்படுத்துவதாகவோ, அவர்களை எதிர்ப்பதாகவோ அர்த்தமில்லை. தங்களின் சிந்தனை மற்றும் சித்தாந்தங்களால் இந்தியாவில் யாருக்கும் எவ்வித ஆபத்தும்  கிடையாது.
 
இந்தியாவின் எல்லைகளை ஒட்டியும், எல்லைகளுக்கு வெளியேயும் எழும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இந்தியா உறுதியுடன் எதிர்கொண்டு வருகிறது. தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
 
1979 இல் மெக்காவில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தை ஒடுக்க, சௌதி அரச தனது வெளியுறவுக் கொள்கையில் முன்நோக்கி வர வேண்டியிருந்தது," என்றும் டெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜித் தோவல் விரிவாக பேசியிருந்தார்.
 
 
முகமது பின் அப்துல் கரீம் அல்-இஷா, இந்து அமைப்புகள் குறித்த தமது கருத்துகளை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார்.
 
"முஸ்லிம் உலக லீக் அமைப்பு, இந்தியாவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறது. இந்து தலைவர்களுடன் எங்களுக்கு பல பொதுவான மதிப்புகள் உள்ளன. நாங்கள் வேற்றுமைகளை மதிக்கிறோம். சகிப்புத்தன்மையும், சகவாழ்வும் மாநாடுகளில் மட்டும் பேசப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல. களத்திலும் இவை பின்பற்றப்பட வேண்டும். சக மனிதர்களின் வாழ்வை முஸ்லிம்கள்  மதிப்பது, பாராட்டுவது மட்டுமல்ல. இது அவர்களின் மதக் கடமையும் கூட.
 
உலகின் பிற நாடுகளுக்கு இந்தியா ஓர் உத்வேகமாக திகழ்கிறது. இந்தியாவுடனான எங்களின் கூட்டாண்மை ஒட்டுமொத்த உலகிற்கே நற்செய்தியாகும் என்று அல் -இஷா பேசினார்.
 
பிரதமர் மோதி உடனான தமது சந்திப்பை பற்றி கூறும்போது, மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்திற்கு மோதி உடனான சந்திப்பு முக்கியமானது என்று அவர் வர்ணித்தார்.
 
ஜெர்மனியின் நாஜிப் படை வதை முகாம்களில் இருந்து  விடுவிக்கப்பட்டவர்களின் 75 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதத்தில், கடந்த ஜனவரி 20 இல், அல்- இஷா தலைமையிலான தூது குழு போலந்து நாட்டிற்கு சென்றது.
 
முஸ்லிம் உலக லீக்கின் முதல் ஐரோப்பிய மாநாடு லண்டனில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. யூதர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
 
 “முஸ்லிமாக இருந்தாலும் சரி… முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் சரி.. அனைவரையும் நேசிக்கும் மதம் இஸ்லாம்” என்று அந்த மாநாட்டில் அல்- இஷா பேசியிருந்தார்.
 
உண்மையான இஸ்லாம் மற்றும் அதன் சகிப்புத்தன்மை கொள்கைகளை முஸ்லிம் உலக லீக் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று இந்த அமைப்பு கூறுகிறது.
 
பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கடந்த ஆண்டு தாக்கப்பட்டார். அப்போது, “இந்த குற்றத்தை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாது” என்று அல் - இஷா கூறியிருந்தார்.