திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (11:57 IST)

திருமண பரிசு வெடிகுண்டு; கல்லூரி ஆசிரியர் கைது

திருமணப் பரிசை பிரித்ததில் வெடிகுண்டு வெடித்து புதிதாக திருமணமான மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி  காயமடைந்தார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒரு கல்லூரி ஆசிரியரை காவல்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட புஞ்சிலால் மெஹர், இறந்தவரின் அம்மாவுடன் ஒரிசாவில் ஒன்றாக பணிபுரிந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது. அரசு கல்லூரியில் தான் வகித்த பதவி உயிரிழந்த மென்பொருள் பொறியியலாளரின் அம்மாவுக்கு வழங்கப்பட்டதால் கொலை செய்ய அவர் திட்டமிட்டதாக  காவல்துறை கூறியுள்ளது.
 
அதிர்ச்சியளிக்கும் இந்த கொலை சம்பவமானது கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதையடுத்து காவல்துறை நூறுக்கும் அதிகமானவர்களை விசாரித்தது. அதில் பெரும்பாலானவர்கள் உறவினர்கள் மற்றும் புதிதாக திருமணமான இணையின் நண்பர்களாவர். 26 வயது மென்பொருள் பொறியியலாளர் சௌமியா சேகர் சாஹு கொல்லப்பட்டுள்ளார் மற்றும் அவரது 22 வயது மனைவி ரீமா படுகாயமடைந்துள்ளார். திருமணமான ஐந்து நாட்களுக்கு பிறகு இந்த பார்சலை தனது  கணவனுக்கு காண்பிக்க திறந்துள்ளார்.
 
சாஹுவின் 85 வயது முதிய அத்தையான ஜெமாமனி சாஹுவும் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி ஒரிசாவின் பாலாங்கிர் மாவட்டத்தில் உள்ள சிறு நகரமான  பாட்னாகரில் உள்ள அவரது வீட்டில் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். மெஹரை விட அப்பொறியியலாளரின் தாய் பணியில் மூத்தவர் என்பதால்  தான் வகித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அப்பொறியியலாளரின் அம்மா கல்லூரியின் தலைவரானதால் தனக்கு அவமானம் ஏற்பட்டதாக உணர்ந்த திரு  மெஹர் இச்செயலில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய ஒரிசா தலைமை காவல்துறை அதிகாரி ஆர்.கே.ஷர்மா, மெஹர் இந்த காரியத்தை தனி ஆளாக செய்திருப்பதாக கூறியுள்ளார். இணையத்தில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் கையேட்டை தரவிறக்கி வீட்டிலேயே இந்த வெடிகுண்டை மெஹர் தயாரித்துள்ளார் என்றார். வெடிகுண்டை ஒரு பார்சலில் வைத்து ரயில் பிடித்து 230 கிமி தொலைவில் உள்ள ராய்பூருக்கு பயணம் செய்துள்ளார் மெஹர். தன்னை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது  என்பதற்காக ராய்பூரில் இருந்து கூரியர் செய்ததாக ஷர்மா கூறினார்.
 
இந்த பார்சலானது மூன்று பேருந்துகளில் 650 கிமி பயணித்து, நான்கு ஜோடி கைகள் வழியாக சென்று பிப்ரவரி 20ஆம் தேதியன்று படன்கர் வந்தடைந்தது. அந்த பார்சல் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் ராய்ப்பூரில் இருந்து எஸ் கே ஷர்மா என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. ''இது திருமணப் பரிசு போல இருக்கிறது''  என சவுமியா சேகர் தனது மனைவியிடம் பார்சலை பிரிக்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் கூறியிருக்கிறார். ''இதை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை எனக்கு ராய்ப்பூரில் யாரையும் தெரியாது'' என்றும் சேகர் அப்போது கூறியுள்ளார்.
 
மெஹரை விசாரிப்பதற்கு முன்பாக, அந்த தம்பதியினரின் அலைபேசி பதிவுகள், லேப்டாப், தொலைப்பேசி ஆகியவற்றை தீவிரமாக போலிஸார் சோதித்தனர்.