சென்னையில் ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய்க்கு விற்பனை
சில இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: வடசென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை
வடசென்னை பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு போதுமான அளவு மழை பெய்யாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் வராமல் நிரம்பவில்லை. இதனால் இந்த கோடையில் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 2 ஏரிகள் வறண்டுவிட்டன. பூண்டி ஏரியில் 222 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 161 மி.கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 3 மி.கன அடியும், சோழவரத்தில் 18 மி.கன அடியும் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. 4 ஏரிகளிலும் சேர்த்து 402 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
இதனால் சென்னை மாநகருக்கு ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைக்கு பதிலாக 550 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான தண்ணீர் வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டர், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 200 மில்லியன் லிட்டர், கல்குவாரிகளில் இருந்து 30 மி.லி., எஞ்சிய 140 மி.லி. பூண்டி, புழல் ஏரிகளில் இருந்தும் எடுக்கப்படுவதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.