செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (13:09 IST)

விராட் கோலி: பாகிஸ்தான் பவுலருக்கு 'ஆட்டோகிராஃப்' ஜெர்சியை பரிசளித்த தருணம்

BCCI
(இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று(30/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, தனது ஜெர்சியில் ஆட்டோகிராஃப் போட்டு, அதை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹேரிஸ் ராஃபுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுறித்த செய்தியில், இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நடப்பு ஆசிய கோப்பையின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் துபாய் கிரிக்கெட் அணிகள் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு, இது கோலிக்கு 100-வது சர்வதேச டி20 போட்டி.

இந்தப் போட்டீயில் அவர் 35 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அவருடைய ஆட்டம். இந்நிலையில், ஆட்டம் முடிந்ததும் இந்திய ஜெர்சியில் அவருடைய ஆட்டோகிராஃப் போட்டு, அதை பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹேரிஸ் ராஃபிடம் கொடுத்தார். அவரும் அதை மகிழ்ச்சியுடன் பெற்று செல்கிறார்.

இதற்கு முன்பு, தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சியையும் ராஃப் அன்பளிப்பாகப் பெற்றுள்ளார்.

'கணவரின் அலுவலகத்திற்குச் சென்று மனைவி திட்டினால் விவாகரத்து பெறலாம்'

மனைவி கணவரின் அலுவகத்திற்குச் சென்று திட்டி, சத்தம் போட்டு பிரச்னை செய்வது கொடுமை தான் என்று குறிப்பிட்டு சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் ஒரு தம்பதிக்கு விவாகரத்து வழங்கியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதிகள் கௌதம் பாதுரி, ராதாகிஷன் அக்ரவால் அமர்வு, ராய்பூர் குடும்ப நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பின்மீது மேல்முறையீடு செய்திருந்த மனைவியின் மனுவை விசாரித்தபோது, அரசு அலுவலரான கணவருக்கு அலுவலகத்தில் உடன் பணியாற்றும் வேறு பெண் ஒருவரோடு தொடர்பு இருப்பதாகக் கூறி, எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி அலுவலகம் சென்று பிரச்னை செய்வது கொடுமையானது என்று குறிப்பிட்டனர்.

அரசு அலுவலரான கணவருக்கு உடன் பணியாற்றும் பெண்ணோடு பழக்கம் இருப்பதாக யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டு, மனைவி அவருடைய அலுவலகத்தில் சென்று பிரச்னை செய்துள்ளார். அதைப் பற்றிக் குறிப்பிடுகையில், "இத்தகைய நடவடிக்கை பணியாளர்களிடையே இருக்கும் நற்பெயரைக் கெடுப்பதோடு, அலுவலகத்தில் உள்ள அந்தஸ்தும் குறையும். அதை கொடுமை செய்வதாகத் தான் கருத வேண்டும்," என்று சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் தெரிவித்து, அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது.

"மாநில அரசுகளைக் கவிழ்க்க பாஜகவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?"

மாநில அரசுகளைக் கவிழ்க்க பாஜகவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
Mamata Banerjee

கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணி பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவரும் முதலமைச்சருமான மமதா பானர்ஜி பங்கேற்றார்.

அதில் அவர் பேசியபோது, "நான், பிர்ஹத் ஹக்கிம், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜனதா பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஒவ்வொருவரையும் 'திருடன்' என்று பாஜக முத்திரை குத்துகிறது.

நாங்கள் திருடர்கள், அவர்கள் புனிதமானவர்கள் என்பது போல் பிரசாரம் செய்கிறது. நான் மட்டும் அரசியலில் இல்லாமல் இருந்தால், பாஜகவினரின் நாக்கை அறுத்திருப்பேன். திரிணாமுல் காங்கிரசிடம் உள்ள பணத்தைப் பற்றி பாஜகவினர் பேசுகிறார்கள்.

அப்படியானால், மராட்டிய மாடல் பாணியில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கவிழ்க்க பாஜகவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

ஹவாலா மூலமாக வெளிநாடுகளில் பாஜக பணத்தைப் பதுக்குகிறது. விசாரணை அமைப்புகளையும் கறுப்பு பணத்தையும் பயனபடுத்தி, மாநில அரசுகளைக் கவிழ்க்கிறது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வெற்றிபெற விடமாட்டேன்," என்று அவர் பேசினார்.

தாஜ்மகால் உள்ளே கிருஷ்ணர் சிலையுடன் செல்ல அனுமதி மறுப்பு

ராஜஸ்தானில் ஜெய்பூரை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தாஜ்மஹாலுக்குள் இள வயது கிருஷ்ணரின் சிலையோடு நுழையத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார் என்று தி நியூன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
tajmahal

அந்தச் செய்தியில், "அவரை கிருஷ்ணர் சிலையுடன் உள்ளே அனுமதிக்காதது, உள்ளூர் இந்து அமைப்புகளின் கவனத்தை ஈர்த்தது. சுற்றுலாப் பயணிகளைத் தடுத்து நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அதிகாரிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஐஎஸ்எஃப் அதிகாரிகளிடம் விசாரிப்பதாக ஆக்ரா வட்டத்தின் இந்திய தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கவுதம் என்ற சுற்றுலாப் பயணி, தாஜ்மஹாலில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "சிலையோடு நுழைவதைத் தடுக்க பாதுகாப்பு காரணங்களை அதிகாரி மேற்கோள் காட்டினார்.

லட்டு கோபால் குடும்ப உறுப்பினரைப் போன்றவர். நான் அவரை எப்போதும் சுமந்துகொண்டு செல்கிறேன் என்ற கவுதம். "நான் கடவுளோடு மதுர, பிருந்தாவனம் சென்றுள்ளேன். ஆனால், இங்கே கடவுள் சிலை இல்லாமல் போகச் சொன்னார்கள்," என்று அவர் கூறினார்.

தாஜ்மஹாலின் பாதுகாப்பு உதவியாளர் பிரின்ஸ் வாஜ்பாய் பிடிஐ செய்தி முகமையிடம், "இது தொடர்பாக எனக்கும் வீடியோ கிடைத்துள்ளது. ஆனால் சம்பவம் திங்கள்கிழமையா அல்லது வேறு நாளா என்பது குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. சம்பவம் குறித்து சிஐஎஸ்எஃப்-யிடம் விசாரிப்பேன்," என்று கூறியுள்ளாஅர்.

ராஷ்டிரிய இந்து பரிஷத் பாரத் அமைப்பின் தேசிய தலைவர் கோவிந்த் பராஷர் கூறுகையில், அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்" என்றார்.