திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2020 (09:07 IST)

வசந்தகுமார்: குடிசையில் இருந்து கோபுர உச்சிக்கு உயர்ந்தவர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் இன்று மாலை காலமானார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர் வசந்தகுமார்.

பட்டப்படிப்பு முடித்து சென்னைக்கு வேலை தேடி வந்த வசந்தகுமார், 1970களில் விஜிபி நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றினார்.

சுயதொழில் தொடங்க வேண்டும் என்பதே இவரது நோக்கமாக இருந்தது.

மீண்டும் தொழிலாளி ஆகக்கூடாது, முதலாளியாக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

1978ல் வசந்த அண்ட் கோ என்ற பெயரில் மின்சாதன பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையை சென்னையில் அவர் ஆரம்பித்தார்.


"தொழில் தொடங்கிய நேரத்தில் என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. உழைத்து எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், யாரிடமும் வேலை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்" என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வசந்தகுமார் தெரிவித்திருந்தார்.

தனது நண்பர் நடத்தாமல் ஒரு கடையை மூடி வைத்திருக்க, அந்தக் கடையை இவர் சுத்தம் செய்து நடத்த ஆரம்பித்தார்.

தனக்கு எதிர் கடைக்கு வெளியே இருந்த ஒரு பலகையில் தானே 'வசந்த் அண்ட் கோ' என்று எழுதி மாட்டிக்கொண்டதாக அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.

1970களிலேயே மாத தவணை திட்டம் அறிமுகப்படுத்தியவர்
மாத தவணையில் அனைத்து வீட்டு உபயோகப்பொருட்கள் விற்கும் திட்டத்தை தொடங்கியது, வசந்த் அண்ட் கோவின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரமணாக அமைந்தது எனலாம்.

முதன்முதலில் நாற்காலி தயாரிக்கும் தனது நண்பரிடம் இருந்து நாற்காலியை வாங்கி அதனை விற்கத்தொடங்கினார் வசந்தகுமார்.

"25 ரூபாய்க்கு இரண்டு மூன்று நாற்காலி வாங்கி அதனை 30 ரூபாய்க்கு விற்றுவிடுவேன். ஆனால், சிலரிடம் காசு இருக்காது. 15 ரூபாய்தான் இருக்கிறது என்பார்கள். அதனால் அவர்களிடம் 15 ரூபாய்க்கு நாற்காலியை கொடுத்துவிட்டு, மீதமுள்ள 15 ரூபாயை, தினமும் ஒவ்வொரு ரூபாயாக கொடுக்க சொல்வேன். கடன் கொடுத்ததற்காக ஒரு ரூபாய் அதிகம் பெற்றுகொள்வேன்" என்று வசந்தகுமார் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் மாதத்தவணையில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வந்த வசந்த் அண்ட் கோ மிக விரைவிலேயே பெரிய அளவில் பிரபலமானது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 60க்கும் அதிகமான கிளைகள் கொண்டுள்ளன. வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார்.

இவர் எழுதிய "வெற்றிப்படிக்கட்டு" என்ற சுயசரிதை புத்தகத்தை நடிகர் ரிஜினிகாந்தும், அவரது மனைவி லதா ரஜினி காந்தும் வெளியிட்டனர்.

அரசியல் பயணம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்கு வகித்த குமரி ஆனந்தனின் சகோதரர் வசந்தகுமார்.

2006 மற்றும் 2016ஆம் ஆண்டு நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.

2019ல் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த அவர், நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.