இறால்களை கொல்லும் முன்பு கஞ்சா மூலம் போதையூட்டும் அமெரிக்க உணவகம்
அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று இறால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம் போதையூட்டுகிறது.இறால்கள் கொதிக்கவைக்கப்படும் நீரில் கஞ்சா புகையை செலுத்துவது அவற்றைக் கொல்லும்போது உண்டாகும் வலியைக் குறைக்கும் என மெய்ன் மாகாணத்தில் இருக்கும் சார்லட்ஸ் லெஜென்டாரி லாப்ஸ்டர் பௌண்ட் எனும் அந்த உணவு விடுதியினர் கூறுகின்றனர்.
"கஞ்சா புகை செலுத்தி இறால்களை கொல்வதால், அவற்றை உண்பவர்களுக்கு போதை உண்டாகாது. ஆனால், அந்த உயிரினம் வலியை அதிகம் உணராமல் உயிரிழக்கும். அதன் இறைச்சியின் தரம் அதிகரிக்கும்," என அந்த உணவு விடுதியின் உரிமையாளர் சார்லட் கில் கூறியுள்ளார்.
கொதி நீரில் போட்டு இறால்கள் கொல்லப்படுவது அவற்றை கடுமையான வேதனைக்கு உள்ளாக்கும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.இறால்கள் மட்டுமல்லாது நண்டுகளும் கொல்லப்படும்போது இத்தகைய வலிக்கு உள்ளாவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
இறால்களை கொல்லும் முன்பு அவற்றின் உணர்வுகளை மழுங்கச் செய்ய வேண்டும் என்று சென்ற ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து முடிவு செய்தது.
மெய்ன் மாகாணத்தில் கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமானது. சார்லட் கில் மருத்துவக் காரணங்களுக்காக கஞ்சா பயிரிடுவதற்கான அனுமதியை பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமானது.