வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

ஏமன் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்துகிறது அமெரிக்கா - பைடன் முடிவு

ஏமனில் தனது கூட்டணி நாடுகள் ஈடுபட்டுவந்த போர் நடவடிக்கைகளுக்கு அமரிக்கா தந்துவந்த அதரவை நிறுத்தப்போவதாக அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ  பைடன் தெரிவித்துள்ளார்.
 

ஏமனில் கடந்த ஆறு வருடங்களாக நடந்து வரும் போரில் கிட்டதட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
 
"ஏமன் போர் நிறுத்தப்படவேண்டும்" என அமெரிக்க அதிபர் பைடன் தனது முதல் வெளிநாட்டு கொள்ளைகள் குறித்த உரையில் தெரிவித்தார். இந்த உரை  முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
டிரம்பிற்கு முன் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா காலத்தில், ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட செளதி அரேபியா  தலைமையிலான கூட்டணிக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியது.
 
அந்த சண்டை மில்லியன் கணக்கான ஏமன் மக்களை பசியின் கொடுமையில் தள்ளியது.
 
2014ஆம் அண்டு வலிமையற்ற ஏமன் அரசு மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்குமான போர் தொடங்கியது. அதன்பின் அமெரிக்கா, பிரட்டன், ஃபிரான்ஸின்  ஆதரவில் செளதி அரேபியா மற்றும் எட்டு பிற அரபு நாடுகள் இந்த சண்டையில் ஈடுபட்டபின் போர் தீவிரமானது. ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்  தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
 
பைடன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பிற முக்கிய மாற்றங்களையும் அறிவித்தார். அதில் ஒன்று அமெரிக்காவால் ஏற்று கொள்ளப்படும் குடியேறிகளின்  எண்ணிக்கையை அதிகரிப்பது.
 
15 ஆயிரமாக இருந்த இந்த எண்ணிக்கை இந்த நிதியாண்டில் ஒரு லட்சத்து 25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
மற்றொன்று, ஜெர்மனியிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்ப பெறும் முடிவை மாற்றுவது. ஜெர்மனியில் உள்ள அமெரிக்க படைகள் இரண்டாம் உலகப் போரின்  காலத்திலிருந்து அங்கு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
டிரம்பின் ஆட்சிக் காலத்தில் ஜெர்மனியில் உள்ள அமெரிக்க படைகள் வெகுவாக குறைக்கப்படும் என கூறப்பட்டது.
 
பைடனின் வெளிநாட்டு கொள்கை குறித்த உரை முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து வேறுபடுவதாக இருந்தது.
 
இந்த அறிவிப்பின் அர்த்தம் என்ன?
 
ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் ஏமன் அரசு மற்றும் செளதி தலைமையிலான கூட்டணிக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கிவந்தது. வியாழனன்று  வெளியான பைடனின் அறிவிப்பால், தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதை அமெரிக்கா நிறுத்தும்.
 
பைடனின் நிர்வாகம் செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆயுதங்கள் விற்பதை தற்காலிகமாக ஏற்கனவே நிறுத்தியுள்ளது.
 
"அமெரிக்காவின் இந்த புதிய முடிவை மேற்கத்திய நாடுகளின் ராஜரீக அதிகாரிகள் மற்றும் ஏமன் மக்கள் வரவேற்கின்றனர். 2015ஆம் ஆண்டு ஒபாமா ஏமனில்  செளதி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு வழங்கினார். இரான் அணு ஒப்பந்தம் தொடர்பாக செளதி அரேபியாவின் கோபத்தை குறைப்பதற்கான ஒரு  காரணமாகவும் ஒபாமா அதை ஒப்புக் கொண்டார். தற்போது ஏமனுக்கான அமெரிக்க தூதர்கள் மற்றும் இரான் தரப்பில் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர  முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பிராந்திய போட்டிகளால் பிரச்னை தீரவில்லை." என்கிறார் பிபிசியின் முதன்மை சர்வதேச செய்தியாளரான லூசே டூசெட்.
 
புதிய தூதர்
மேலும் புதிய அமெரிக்காவுக்கான ஏமன் தூதராக டிம்லெண்டர் கிங் என்பவரை பைடன் நியமிக்கப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
ராஜரீக விவகாரங்கள் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களில் அனுபவம் மிக்கவர் இவர்.
 
டிரம்ப் அரசு செளதி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவை அதிகரித்திருந்த நிலையில் பைடனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மனிதநேய அடிப்படையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடாக ஏமன் உள்ளது. அங்குள்ள 80 சதவீத மக்களுக்கு உதவியோ அல்லது பாதுகாப்போ  தேவை.
 
ஏமனில் 2015ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபர் மன்சூர் ஹதி மற்றும் அவரது அமைச்சரவை ஏமன் தலைநகரைவிட்டு வெளியேற்றப்பட்டது. இவர்களை  வெளியேற்றியவர்கள் ஹூதி கிளர்ச்சியாளர்கள்.
 
செளதி ஹதியை ஆதரிக்கிறது. இரான் ஹூதி கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கிறது.
 
பைடனின் பிற நடவடிக்கைகள்
பைடன் மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்களை அழைத்து ஆங் சாங் சூச்சியை விடுதலை செய்து ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு கூறியுள்ளார்.
 
மேலும் அவர் ரஷ்யாவுடன் ராஜரீக முறையில் இணைந்திருப்பதாக தெரிவித்தாலும், டிரம்பின் நிர்வாகத்தை காட்டிலும் சற்று கடுமையாக இருக்கப் போவதாக  தெரிவித்தார்.