இந்திய கிரிக்கெட் 2021ல் பல்வேறு வித்தியாசமான சவால்களையும், வெற்றிகளையும் எதிர்கொண்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணியை டெஸ்ட் போட்டிகளில் ஒருவரும், ஒருநாள் மற்றும் டி20 போன்ற லிமிடெட் ஓவர் போட்டிகளில் மற்றொருவரும் கேப்டனாக அணியை வழிநடத்துவது என்கிற கருத்தாக்கமும் சேர்ந்துள்ளது.
சில தினங்களுக்கு முன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 'போல்ட் அண்ட் பிரேவ்: தி சாஸ்திரி வே' என்கிற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் குறித்து பல கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
அதில் இந்திய கிரிக்கெட் அணிக்கு இரட்டை தலைமை இருப்பது நல்லதுதான் என கூறியுள்ளார்.
என்னைப் பொறுத்தவரை அதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். இது விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு நெருக்கடியில் கிடைத்த வரமாக அமையலாம். கொரோனா பிரச்னை மேலும் ஓராண்டு காலத்துக்கு நீடித்தால், ஒரே நபர் அனைத்து பொறுப்புகளையும் (டெஸ்ட், ஒருநாள், டி20 தலைவர் பதவி) ஏற்று சிறப்பாக செயல்படுவது எளிதான காரியமாக இருக்காது என்று கூறினார் ரவி சாஸ்திரி.
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளில் தோற்ற பின், விராட் கோலி இந்தியாவின் டி20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்தார். பிசிசிஐ தரப்போ, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனித்தனி தலைவர்களை வைத்துக் கொள்ள முடியாது என்று கூறியது.
முதலில் இந்தியாவின் டி20 அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட ரோஹித் ஷர்மா, அடுத்த சில நாட்களுக்குள் இந்தியாவின் ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து விராட் கோலி தனியாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு, தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவுக்கு இரட்டைத் தலைமை அத்தனை சாதகமாக அமைந்ததில்லை, ஆனால் முயன்று பார்ப்பதில் தவறில்லை என்கிறார் டெக்கன் கிரானிக்கல் நாளிதழின் விளையாட்டுச் செய்தி பிரிவின் ஆசிரியர் சந்தோஷ் குமார்.
"இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இரட்டை தலைமையை, அணித்தலைமை மாற்ற காலத்தில் மட்டுமே பரிசோதித்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை முழுமையாக இரட்டை தலைமையை முயன்று பார்க்க உள்ளது இந்திய கிரிக்கெட்.
இதில் சிக்கல் என்னவென்றால் சமகால இரு பெரும் நட்சத்திர வீரர்கள் அனைத்து ஃபார்மெட்களிலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். டெஸ்டில் விராட் கோலியின் கீழ் ரோஹித் ஷர்மாவும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித்தின் கீழ் விராட்டும் விளையாட வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதற்கு முன்பும் இந்தியாவில் இரட்டை தலைமை இருந்துள்ளது, ஆனால் வீரர்கள் ஒருவரின் கீழ் மற்றொருவர் விளையாட வேண்டிய நிர்பந்தம் பெரிதாக எழவில்லை.
உதாரணமாக 2007 - 08 காலகட்டத்தைக் குறிப்பிடலாம். அனில் கும்ப்ளே இந்திய டெஸ்ட் அணி தலைவராகவும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாகவும் இருந்தனர்.
டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவின் கீழ் தோனி விளையாடினார். கும்ப்ளே ஒருநாள் போட்டிகளிலிருந்து மார்ச் 2007லிலேயே ஓய்வு பெற்றுவிட்டார். சர்வதேச டி20 போட்டிகளில் கும்ப்ளே இந்திய அணிக்காக விளையாடவேவில்லை, எனவே தோனியின் கீழ் கும்ப்ளே விளையாட வேண்டிய சூழல் எழவில்லை.
கோலி தலைமையின் கீழ் தோனி
2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற போது தோனிதான், அப்போது டெஸ்ட் கேப்டனாக இருந்தார். எனவே கோலி தலைமையின் கீழ் விளையாட வேண்டிய அவசியம் எழவில்லை.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணியின் தலைவர் பதவியிலிருந்து வெளியேறிய தோனி, அதற்குப் பிறகு கோலியின் கீழ் ஓர் உலகக் கோப்பை தொடரையே விளையாடினார். அதை கூட ஒருவகையில் தோனி மூத்த வீரர், கோலி அடுத்தகட்ட வீரர் என்கிற வகையில் பார்க்கலாம்.
ஆனால், இரு சமகால நட்சத்திர வீரர்கள் எப்படி ஒருவரின் கீழ் ஒருவர் விளையாடுவர், அணி எப்படி இருவரின் தலைமையின் கீழ் வழிநடத்தப்படும் என்பதுதான் இப்போது எழும் பெரிய கேள்வி.
பொதுவாக இந்திய சூழலில் பெரிதும் எடுபடாத இந்த இரட்டைத் தலைமை, வெளிநாடுகளில் வெற்றி வாய்ப்பைத் தேடித் தந்துள்ளது. உதாரணத்துக்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைக் கூறலாம்.
2019 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. அதே போல 2021 டி20 உலகக் கோப்பையை வென்றது ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இருவருமே தங்கள் நாட்டின் டெஸ்ட் அணிகளுக்கு தலைமை தாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு நாடுகளிலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் சமகாலத்தில் ஒருநாள் மற்றும் டி20 போன்ற லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடுவது குறைவு.
ஆனால் இந்தியாவில் மூன்று ஃபார்மெட்டிலும் விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே ஒரே அணியை இருவர் வழிநடத்துவது குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது" என்கிறார் சந்தோஷ் குமார்.