வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (14:35 IST)

கிம்முடனான பேச்சுவார்த்தையில் பயனில்லை என்றால் வெளிநடப்பு செய்வேன்: டிரம்ப்

வட கொரிய தலைவர் கிம் ஜாங்- உன்னுடன் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை என்றால் தாம் "வெளிநடப்பு செய்து விடப்போவதாக" அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
அணுசக்தி பயன்பாட்டை முழுமையாக நீக்க வட கொரியா ஒப்புக்கொள்ளும் வரை அந்நாட்டிற்கு கொடுக்கப்படும் அழுத்தம் பராமரிக்கப்படும் என செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே ஆகியோர் கூறியுள்ளனர்.
 
ஃப்ளோரிடாவில் மார்-அ-லகோ ரிசார்டில் அதிபர் அபே, அதிபர் டிரம்பை சந்தித்தார். முன்னதாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநர் மைக் பாம்பேயோ தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய சென்றதை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
 
இந்நிலையில், டிரம்ப் - கிம் சந்திக்கும் உச்சிமாநாடு வரும் ஜூன் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த இடத்தில் இது நடைபெறும் போன்றவை குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
 
மாநாடு குறித்து டிரம்ப் கூறியது என்ன?
 
இந்த சந்திப்பு வெற்றிகரமான பாதையில் செல்லவில்லை அல்லது பயனில்லாமல் இருப்பதாக தெரிந்தால், தாம் வெளிநடப்பு செய்யப் போவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
 
"நான் முன்பு கூறியதை போல, அணுசக்தி பயன்பாட்டை வட கொரியா முழுமையாக நீக்கிவிட்டால், அது அந்நாட்டிற்கு மட்டும் அல்லாமல் இந்த உலகத்திற்கும் சிறந்த நாளாக அமையும்" என்று டிரம்ப் தெரிவித்தார்.
 
டிரம்ப் - கிம் சந்திப்பு எப்போது நடைபெறும்?
 
நேரடியான பேச்சுவார்த்தைக்கு வட கொரியா விடுத்த அழைப்பை அமெரிக்கா ஒப்புக் கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
 
இதுவரை அமெரிக்க அதிபர்கள் வட கொரிய அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில்லை. இந்த பேச்சுவார்த்தை ஜூன் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
 
வட கொரியா பல தசாப்தங்களாக மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. மேலும் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா தடைகளை மீறுவது ஆகியவற்றிற்குகாக தனித்து விடப்பட்டது.
 
இதுவரை ஆறு அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது. மேலும் அமெரிக்காவை தாக்கக் கூடிய ஏவுகணைகளையும் வட கொரியா வைத்துள்ளது.
 
ஆனால், இந்த வருடம் தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா பங்கேற்றது பிற நாடுகளுடனான நல்லுறவுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இருந்தது.