வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:11 IST)

புதுச்சேரியில் பரிதவிக்கும் திருநங்கைகள்: கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்!

தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினமான திருநங்கை, திருநம்பி உள்ளிட்டாருக்கு நீண்ட காலம் முன்பாகவே சமூகநலத்துறை மூலம் தனி நல வாரியம் அமைக்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன.
 
சராசரியாக ஒரு மனிதனுக்கு அரசாங்கம் மூலமாக என்ன கிடைக்க வேண்டுமோ அவை அனைத்தும் தமிழ்நாட்டில் அவர்களுக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக சுய தொழில் தொடங்க கடனுதவி, சிகிச்சை மற்றும் பாலின அறுவை சிகிச்சைக்காகச் சென்னை செல்லும் திருநங்கைகளுக்குத் தங்கும் வசதி இலவசமாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். மேலும், ஓய்வூதியம், அடையாள அட்டை, இலவச மனைப்பட்ட, வீடு வழங்குதல் உள்ளிட்டவை வழங்கி வருகின்றனர்.
 
அதிலும் மூன்றாம் பாலினத்தவர் அவர்களுடைய பிரச்னையை சென்று பேசுவதற்கு சமூக நலத்துறை மூலமாகத் தனி வாரியம் அமைத்துள்ளனர். ஆனால் புதுச்சேரியில் இருக்கும் மூன்றாம் பாலினத்தவரின் குறைகளைச் சொல்ல அதற்கென அதிகாரிகளோ அல்லது அலுவலகமோ கிடையாது. தமிழகத்தில் இருக்கும் வாரியத்தில் மூலமாக குறைகளைக் கேட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மூன்றாம் பாலினத்தவரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாவட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற எதுவும் புதுச்சேரியில் உள்ள மூன்றாம் பாலினத்தவருக்குக் கிடைப்பதில்லை என்று இங்குள்ள திருநங்கைகள் வேதனைப்படுகின்றனர்.
 
புதுச்சேரியில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டிப்போட்டுக்கொண்டு மக்களைக் கவர வகையில் வாக்குறுதிகளை அறிவிக்கின்றனர். ஆனால் அதில் ஒரு அறிவிப்பு கூட தங்களுக்கானதாக இல்லை என்று புதுச்சேரியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
"வாழ வீடு, வருமானத்தைப் பெருக்க மாடு வளர்ப்பது, தையல் உள்ளிட்ட சிறு, குறு தொழில் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தொழில் தொடங்க கடனுதவி, மூன்றாம் பாலினத்தவர்கள் படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அண்மையில் அரசு சார்ந்த துறைகளில் தமிழகத்தில் வேலை கொடுக்கின்றனர். ஆனால் இதிலிருந்து அண்டை மாநிலமான புதுச்சேரியில் அரசு சார்பில் திருநங்கைகளுக்கு என்ன செய்தார்கள் என்று பார்க்கும்போது எதுவுமே கிடையாது," என்கிறார் புதுச்சேரியைச் சேர்த்த சகோதரர் அமைப்பு நிறுவனர் திருநங்கை ஷீத்தல்.
 
புதுச்சேரியில் எங்களுக்கென்று தங்க இருப்பிடமில்லை. இங்கிருக்கும் 1,200க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களில் பெரும்பாலானோர், வாடகைக்கு வீடெடுத்து தங்க வழி இல்லாமல் சிரமப்படுவதாகக் கூறுகிறார் இவர்.
 
"எங்களுக்கான பிரச்னையை இங்குள்ள சமூக நலத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு தான் வருகிறோம். ஆனால் ஆட்சி முடிந்தால், அந்த அமைச்சரும் இருப்பதில்லை. இருப்பினும் அரசு இதற்காகத் தனி அதிகாரியை நியமனம் செய்திருக்கும் பட்சத்தில் அவர்களிடம் சென்று எங்கள் குறைகளைக் கூற வசதியாக அமையும்.
 
தமிழகத்தைப் போன்று புதுச்சேரி பெரியது இல்லை என்றால், எங்களின் நலன் சார்ந்த பிரச்னைகளை கேட்டறிய அரசு சார்பில் ஒரு சிறிய குழுவாவது ஏற்படுத்தலாம். இதன் மூலமாக எங்களது தேவை மற்றும் கோரிக்கைகளை வெளியே கொண்டு வர வாய்ப்பு அமையும். பக்கத்து மாநிலத்தில் அனைத்தும் கிடைக்கிறது, ஆனால் எங்களுக்கு அவ்வாறு இல்லை எனும்போது, எங்களை ஒரு பொருட்டாக கட்சிகள் கருதுவதில்லை என நினைக்கத் தோன்றுகிறது," என்கிறார் ஷீத்தல்.
 
"மத்திய அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை முதலில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது. புதுச்சேரி அளவில் சிறியது என்பதால், அவர்கள் அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் அதை நாடு முழுவதும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கிறது. ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு மட்டும் எதையும் செய்யாமல், இந்த விஷயத்தில் பாகுபாடு பார்க்கப்படுகிறது.
 
இந்த சிறிய மாநிலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ள எங்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது, எங்களையும் இந்த சமூகம் பெரிய அளவில் பார்க்கவில்லை என்பதை உணர்த்துகிறது," என்று வேதனையுடன் கூறுகிறார் அவர்.
 
இவரைத் தொடர்ந்து மற்றொரு திருநங்கை சாக்ஷி கூறும்போது, "எங்களுக்கு ஏன் இங்குள்ளவர்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கின்றனர் என்பது புரியவில்லை? 2014ஆம் ஆண்டு எங்களுக்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் நால்சா தீர்ப்பு (Nalsa Judgement) வழங்கப்பட்டது. ஆனால் அப்போதிலிருந்து எங்களுக்கான உரிமைகள் கிடைக்கும் என்று இன்றுவரை காத்துக்கொண்டிருக்கிறோம். புதுச்சேரியில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அதை நாங்கள் பெற அதிகம் சிரமப்பட வேண்டியதாக உள்ளது, அதையும் பெரிய அளவில் யாரும் பெறவில்லை," என்றார்.
 
"எங்களால் அரசியல் ஆதாயம் இல்லை என்று நினைத்து எங்களைப் போன்றவர்களை ஒதுக்குகின்றனர். நாங்கள் பெரியதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. புதுச்சேரியில் மூன்றாம் பாலினத்தவர் எத்தனை பேர் வாழ்கிறோம் என்ற கணக்கு எடுக்கப்பட வேண்டும். இங்கே எத்தனை பேர் வாழ்கிறோம் என்று தெரியாத காரணத்தினாலேயே எங்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். அதைக் கணக்கெடுத்தால் அரசு எங்களுக்கான தேவைகளைச் செய்ய வழி வகை செய்யும். எங்களுக்கான அடிப்படை வசதி கிடைக்க மட்டுமே நாங்கள் போராடி வருகிறோம்," என கூறுகிறார் சாக்ஷி.
 
"அண்மையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அவரவர் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், பெண்கள், முதியவர்கள், விதவைகள் எனச் சமுதாயத்தில் நலிவுற்று இருப்பவர்களுக்கென பல சலுகைகளை அறிவித்தனர். ஆனால் எங்கள் நலன் சார்த்த ஒரு விஷயத்தைக் கூட யாரும் பேசவில்லை, அறிக்கையில் இடம்பெறச் செய்யவும் இல்லை. எங்களால் என்ன மாற்றத்தைக் கொடுத்திட முடியும் என்ற அரசியல் கட்சிகள் அலட்சியம் காட்டுகின்றன," என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர் புதுச்சேரியைச் சேர்த்த திருநங்கைகள்.
 
"விளிம்பு நிலையில் உள்ள சமுதாயம் அவர்களது தேவைகளுக்கு அவர்கள் மட்டுமே போராட வேண்டும் என்று எண்ணாமல், மற்ற அரசியல் கட்சியினரும் அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். பொதுவாகவே இவர்களுக்கு ஓட்டு வங்கி மிகவும் குறைவாக இருப்பதால், மற்றவர்கள் இவர்களது பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பதில்லை," என்று சமூக ஆர்வலர் கண்ணன் கூறுகிறார்.