1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : புதன், 21 ஜூன் 2023 (12:09 IST)

"பெண்ணுறுப்பில் மிளகாய்ப் பொடி தூவி சித்திரவதை" - ஆந்திர போலீசார் மீது கிருஷ்ணகிரி குறவர் பெண் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் குறவர் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரை ஆந்திராவிலுள்ள சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூத்தலப்பட்டு காவல்நிலையத்தின் போலீசார் கைது செய்து, துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
 
அப்படி கைது செய்யப்பட்டவர்களில் 5 பெண்களும் ஒரு 7 வயது குழந்தையும் அடங்குவார்கள் என்று தமிழ் பழங்குடி குறவர் சங்கத்தின் மாநில தலைவர் ரமேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சராயுவை பிபிசி தமிழ் தொடர்புகொண்டபோது, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி மற்றும் பெண் டிஎஸ்பி தலைமையில் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
 
மேலும், சித்தூர் காவல்துறை எஸ்.பி ரிஷாந்த் ரெட்டியை பிபிசி தெலுங்கு சேவை தொடர்புகொண்டபோது, இதுகுறித்த தகவல் கிடைத்திருப்பதாகவும் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜூன் 7, 11, 12 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்ட குறவர் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரில் 8 பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓர் இளம்பெண்ணும் ஓர் ஆணும் மட்டும் விடுவிக்கப்படவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
 
 
கண்களைக் கட்டி ஜீப்பில் அழைத்துச் சென்ற ஆந்திர போலீஸ்
சித்தூர் போலீசாரால் விடுவிக்கப்பட்ட 8 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
 
கடந்த ஜூன் 11ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான 7 வயது மகனின் தாய் பிபிசி தமிழிடம் பேசினார். "எனக்கு நடந்தது வேறு எந்தப் பெண்ணுக்கும் நடந்துவிடக்கூடாது என்பதால், எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிப்படையாகச் சொல்கிறேன்," என்று கண்ணீருடன் அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை அவர் விளக்கினார்.
 
"கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நான், என் கணவர், மாமியார், என் ஏழு வயது மகன் அனைவரும் இரவு 8 மணி வாக்கில் சாப்பிடுவதற்காக வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தோம்.
 
திடீரென இரண்டு ஜீப்களில் வந்த 6 போலீசார், அவரை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி, எனது கணவரையும் எங்களையும் கைகளைக் கட்டி இழுத்துச் சென்றார்கள்," என்று கூறுகிறார்.
 
அவரது கணவர் மீது ஏற்கெனவே திருட்டு தொடர்பான சில வழக்குகள் உள்ள காரணத்தால், அவரை ஏதேனும் விசாரணைக்காக அழைக்க போலீசார் வந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் நினைத்துள்ளனர். ஆனால் தங்களையும் இழுத்துச் செல்லவே, 'எங்களை ஏன் கூட்டிச் செல்கிறீர்கள்?' என்று கேட்டதாகக் கூறுகிறார்கள்.
 
இருப்பினும், "அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நால்வரையும் ஜீப்பில் ஏற்றிய போலீசார் மூச்சு விடவே சிரமப்படும் அளவுக்கு குழந்தை உட்பட அனைவரது முகத்தையும் கருப்புத் துணியால் மூடி வாகனத்தில் கொண்டு சென்றதாக" அவரும் அவரது மாமியாரும் கூறினார்.
 
இந்தச் சம்பவத்தின்போது ஒரு பெண் போலீஸ் உட்பட 6 போலீசார் வந்திருந்ததாகவும் சாதியைக் குறிப்பிட்டு ஆபாசமான வார்த்தைகளில் திட்டி தங்களை இழுத்துச் சென்றதாகவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
 
தமிழக போலீசிடம் முறையிட்ட அண்டை வீட்டாரும் கைது
இதற்கிடையே, இவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைப் பார்த்த அண்டை வீட்டுப் பெண் ஒருவர், அடுத்த நாள் காலையில் கணினி மையத்திற்குச் சென்று இணையவழி புகாரைப் பதிவு செய்தததாகக் கூறுகிறார்.
 
ஜூன் 12ஆம் தேதியன்று ஆன்லைன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைக்கு அவர் புகார் தெரிவித்தார். பிறகு, அன்றைய தினம் இரவு 8:30 மணியளவில் அவரும் அதேபோல் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
"புகாரா கொடுக்குற என்று சாதிப் பெயரைச் சொல்லி ஆபாசமாகத் திட்டியபடியே என்னை, என் கணவரை, என் மருமகளை போலீசார் அடித்து, முகத்தில் கருப்புத் துணி போட்டு இழுத்துச் சென்றார்கள்," என்று கூறுகிறார் புகாரளித்த பெண்.
 
அதுமட்டுமின்றி, வாகனத்தில் அழைத்துச் செல்லும்போதே தன் மருமகளிடம் அவரது கணவர் எங்கிருக்கிறார் எனக் கேட்டு போலீசார் துன்புறுத்தத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.
 
இப்படியாக ஜூன் 11ஆம் தேதியன்று ஒரு குடும்பமும் ஜூன் 12ஆம் தேதியன்று புகார் கொடுத்தச் குடும்பமும் கைது செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட குறவர் சமூக நபர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
 
இதில், ஜூன் 11ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆண் மற்றும் 12ஆம் தேதி கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருப்பதாகவும் அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
 
பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவி துன்புறுத்தியதா சித்தூர் போலீஸ்?
இந்நிலையில், இதற்கும் முன்னதாகவே ஜூன் 7ஆம் தேதியன்று குல்பர்காவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அந்தப் பெண், போலீசார் செய்த சித்ரவதையைத் தாங்க முடியாமல் தான் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறுகிறார்.
"என்னை குல்பர்காவுக்கு வந்து 6 போலீசார் ஜூன் 7ஆம் தேதியன்று பிடித்துக் கொண்டு போனார்கள். அய்யப்பன் எங்கிருக்கிறார் என்று கேட்டு என்னை அடித்தார்கள். பிறகு திருடிய நகை எங்கு இருக்கிறது எனக் கேட்டு துன்புறுத்தினார்கள்," என்கிறார்.
 
அதற்கு அடுத்த நாள், "நகையை வாங்கிக் கொடுக்குமாறு சொல்லி கால்களை அகற்றிப் பிடித்து, இரும்புக்கம்பியில் மிளகாய்ப் பொடியைத் தடவி, பிறப்புறுப்பில் குத்தி சித்ரவதை செய்தார்கள்" என்று அவர் கூறுகிறார்.
 
இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் கழிவறையில் கிடந்த பிளேடை எடுத்து கையை அறுத்துக்கொள்ளத் தான் முயன்றபோது, "மருத்துவரை வர வைத்து சிகிச்சையளித்து, சிறிது நேரம் இடைவெளிவிட்டு பிறகு மீண்டும் துன்புறுத்தத் தொடங்கியதாக" பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கூறுகிறார்.
 
"என் கழுத்தைத்தான் அறுத்துக் கொள்ள நினைத்தேன். ஆனால், என் 5 வயது மகன் கண்முன் வந்து போனதால் அந்தத் தைரியம் வரவில்லை. அதனால் கையை அறுத்துக்கொண்டேன்," என்று அவர் கூறினார்.
 
அப்படி அழைத்துச் சென்ற போலீசார், பைப் குடோன் போன்ற ஒரு கட்டடம் உட்பட மூன்று வெவ்வேறு இடங்களில் மாற்றிமாற்றி வைத்து தங்களை அடித்து துன்புறுத்தியதாகவும் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாகவும் இறுதியாக பிரச்னை ஆன பிறகு விடுவிக்கும் நேரத்தில்தான் தங்களை சித்தூரில் உள்ள பூத்தலப்பட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்ததாகவும் ஜூன் 11ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் கூறுகிறார்.
 
"கணவரை கட்டி வைத்து சித்ரவதை - என்னை மிரட்டி பாலியல் வல்லுறவு"
"திருடுன நகைய எந்தக் கடையில வெச்சுருக்க? அதை வாங்கிக் கொடு' என்று சொல்லிச் சொல்லி, என் கணவரை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு அடித்தார்கள். அடி தாங்க முடியாமல் அவர் அப்படியே சிறுநீர், மலம் அனைத்தையும் கழித்தபடி கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தார். சிறிதும் மனிதத் தன்மையே இல்லாமல் நடந்துகொண்டார்கள்," என்கிறார் அவர்.
 
மேலும், "14ஆம் தேதியன்று இரவு தணிகாச்சலம் என்ற துணை ஆய்வாளர் என்னை தனியாக ஓர் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்தார். அதற்கு மறுத்தபோது, நான் ஒத்துழைக்கவில்லை என்றால் என் கணவரை அடித்தே கொன்றுவிடுவதாக மிரட்டி என்னை வன்கொடுமை செய்தார்.
 
பிறகு அங்கு நடந்ததை வெளியில் கூறினாலும் என் கணவரைக் கொன்று விடுவதாக அவர் மிரட்டினார். அதற்குப் பயந்து அந்தக் கொடுமையை நான் என் கணவரிடம்கூட சொல்லவில்லை," என்று குரல் நடுங்க, கண்ணீர் மல்கத் தெரிவித்தார் அவர்.
 
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அடிக்கும்போது மட்டுமே ஒன்றாக வைத்திருந்ததாகவும் மற்ற நேரங்களில் போலீசார் தங்களைத் தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
 
ஆந்திர போலீசாரால் விடுவிக்கப்படாத 2 பேரின் நிலை என்ன?
 
ஆந்திர போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் இளம்பெண்ணின் நிலை என்னவென தெரியாமல் அவரது மாமியார் தவிக்கிறார்.
 
"சாதிப் பெயரைச் சொல்லிச் சொல்லியே சித்ரவதை செய்தார்கள். நான் ஆன்லைனில் கிருஷ்ணகிரி காவல்துறையிடம் புகார் கொடுத்தது, எப்படி சித்தூர் போலீசுக்கு தெரிய வந்தது?" என்றும் அவர் கேள்வியெழுப்புகிறார்.
 
மேலும், அவர் போலீஸ் பிடியில் இருந்தபோது பூமதிக்கு நடந்த கொடுமைகள் குறித்துப் பேசினார்.
 
"என் மருமகளை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு ஐந்தாறு போலீசார் கடுமையாக அடித்தார்கள். அவர்கள் அடித்த அடியில் அவர் அங்கேயே சிறுநீர், மலம் கழித்துவிட்டார்.
 
அடி தாங்க முடியாமல் கிடந்த என் மருமகளுக்கு மருத்துவரை வர வைத்து சிகிச்சை கொடுத்து, ஊசி போட்டு, கொஞ்ச நேரம் கழித்து பிறகு மீண்டும் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள்," என்று கூறிய அவர், தன்னையும் போலீசார் கடுமையாகத் தாக்கியதாகவும் தன் கால் மீது 6 போலீசார் ஏறி நின்று அடித்ததாகவும் கூறுகிறார்.
 
விசாரணை நடந்து வருவதாக ஆட்சியர் விளக்கம்
 
இந்தக் கைது நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று முன்தினம் 19 வயதான ராதா என்ற பெண் ஆட்சியரிடம் மனு கொடுத்தார். மேலும், தமிழ் பழங்குடி குறவர் சங்கத்தினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் நடத்திய போராட்டங்களின் விளைவாக, சித்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட 10 பேரில் 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.
 
அப்படி விடுவிக்கப்பட்ட 8 பேரிடமும் "கடந்த வெள்ளிக்கிழமையன்று காலையில் அனைவரையும் போட்டோ எடுத்துவிட்டு, அனைவரிடமும் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு போலீசார் அனுப்பி வைத்ததாக," பாதிக்கப்பட்டவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சராயுவிடம் பிபிசி தமிழ் பேசியது.
 
அப்போது, "மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி, பெண் டிஎஸ்பி ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த விசாரணை முடிவுகள் கிடைத்த பிறகுதான் முழு விவரமும் தெரிய வரும் என்றும்" தெரிவித்தார்.
 
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துவிட்டுத்தான் ஆந்திர போலீசார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டார்களா எனக் கேட்டபோது, "அப்படி ஏதும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் அதற்கு ஆந்திர போலீஸிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் உள்துறை செயலருக்கும் இந்தச் சம்பவம் குறித்து எழுதியுள்ளதாகவும்" கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சராயு தெரிவித்தார்.
 
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை தரப்பில் இதுகுறித்துப் பேச முயன்றபோது இதில் சம்பந்தப்பட்டிருப்பது ஆந்திராவிலுள்ள சித்தூர் மாவட்ட போலீசார் என்பதால் அவர்களிடம் பேசிக்கொள்ளுமாறு நம்மிடம் தெரிவித்தனர்.
 
பிபிசி தெலுங்கு செய்தியாளர் துளசி பிரசாத் ரெட்டி, சித்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரிஷாந்த் ரெட்டியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "இப்படியொரு சம்பவம் நடந்ததாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும்" தெரிவித்தார்.
 
தமிழ்நாடு காவல்துறை உடந்தையாக இருந்ததா?
தமிழ் பழங்குடி குறவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ், "குறவர் மக்களுக்கு தமிழ்நாடு காவல்துறையும் ஆந்திர காவல்துறையும் இந்தக் கொடுமைகளை அடிக்கடி செய்துகொண்டிருக்கின்றனர். இதுகுறித்து நாங்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தும்கூட, இப்போது மீண்டும் இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது.
 
ஜூன் 11ஆம் தேதியன்று ஒரு குடும்பத்தையே சித்தூர் போலீசார் பிடித்துச் செல்கின்றனர். அண்டை வீட்டார் அதுகுறித்துப் புகார் செய்தவுடன் எப்படி, அவர்களையும் சரியாக வீடு தேடி வந்து பிடித்துச் சென்றார்கள்? தமிழ்நாடு காவல்துறை உடந்தையாக இல்லாமல் இதைச் செய்திருக்க முடியுமா?" என்று கேள்வியெழுப்புகிறார்.
 
மேலும், "தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்க எடுத்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் தெரிவித்தார்.
 
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சம்பவத்திற்குத் தனது கண்டனங்களைத் தெரிவித்தார்.
 
அதோடு, "தமிழ்நாடு அரசும் காவல்துறையும் ஆந்திர மாநில அரசுடனும் காவல்துறையுடனும் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி குற்றமிழைத்த காவலர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வல்லுறவு, சித்தரவதைக்கு உள்ளாக்குதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் வலியுறுத்தியுள்ளார்.