1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (13:53 IST)

திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என இளம்பெண்ணை கொலை செய்த மூன்று திருமணமான நபர்

(இன்று 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் 25 வயது இளம்பெண்ணை 36 வயதான, ஏற்கனவே மூன்று திருமனமான டாக்சி ஓட்டுநர் கொலை செய்ததாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் ஷபிகுல் இஸ்லாம். டாக்சி ஓட்டுநரான இவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளன. ஷபிகுல் இஸ்லாம் தனது மூன்றாவது மனைவியுடன் ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், ஷபிகுலுக்கு குருகிராமில் அவர் வசித்து வந்த பகுதியை சேர்ந்த 25 வயதான நர்ஹிஸ் ஹடூன் என்ற இளம்பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு, நாளடவைவில் காதலாக மாறியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி பால் வாங்க சென்ற நர்ஹிஸ் வீடு திரும்பவில்லை. இதனால், பதற்றமடைந்த நர்ஹிஸின் தந்தை தனது மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் செப்டம்பர் 23-ம் தேதி தெற்கு நகர் - 1 மாவட்டத்தில் நர்ஹிஸ் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், நர்ஹிஸ் கடைசியாக ஒரு டாக்சியில் ஏறிச்சென்றது தெரியவந்தது. அந்த டாக்சி எண் உள்ளிட்டவற்றை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த டாக்சியை ஷபிகுல் இஸ்லாம் ஓட்டிச்சென்றது தெரியவந்தது.

அவரை போலீசார் தேடிய நிலையில் ஷபிகுல் இஸ்லாம் குருகிராமில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால், தனிப்படை அமைக்கப்பட்டு ஷபிகுல்லை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

மேற்குவங்க மாநிலம் புல்வாரி சவுக் பகுதியில் இந்தியா வங்கதேச சர்வதேச எல்லைப்பகுதியில் பதுங்கி இருந்த இஸ்லாம் ஷபிகுல்லை குருகிராம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஷபிகுல்லிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஷபிகுல் இஸ்லாமுக்கு ஏற்கனவே 3 முறை திருமணமானது தெரியவந்தது. மேலும், இளம்பெண்ணான நர்ஹிஸ் ஹடூனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஷபிகுல் கேட்டதும், அதற்கு நர்ஹிஸ் மறுத்ததையடுத்து அவரை கொலை செய்ததுவிட்டு குருகிராமில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு வந்துவிட்டதாகவும் போலீசாரிடம் ஷபிகுல் இஸ்லாம் தெரிவித்தார்.

மேலும், மேற்குவங்காளத்தில் இருந்து சர்வதேச எல்லை வழியாக வங்கதேசத்திற்குள் செல்ல திட்டமிட்டிருந்ததாக போலீசாரிடம் அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு நீட் தற்கொலை: அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் விரக்தி

நீட்தேர்வில் வெற்றி பெற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காததால் பேராவூரணி அருகே மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (46). இவரது மனைவி நாகூர் மாலா (40). இவர்களது மகள் துளசி (18). 2018ஆம் ஆண்டு பேராவூரணி தனியார் பள்ளியில் (455/500) மதிப்பெண் பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் (421/600) மதிப்பெண் பெற்று 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி வெற்றிபெற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு திருச்சி அருகே துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றுள்ளார். தற்போது நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் அவர் 306 மதிப்பெண் பெற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் துளசி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் பொறியியல் அல்லது அக்ரி படிப்பில் சேருவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பணம் கட்டிய நிலையில், மேலும் பாக்கிப் பணம் தரவேண்டும் எனக் கூறி சான்றிதழ்களை தர காலதாமதப்படுத்தி பொறியியல் கவுன்சிலிங் முடிந்தபிறகு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு படிப்பிலும் சேர முடியவில்லை என துளசி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளைச்சாமி, நாகூர் மாலா இருவரும் சனிக்கிழமை வயலுக்கு வேலைக்கு சென்று விட்டனர். பெற்றோர் வெளியில் சென்ற நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாத போது ஓட்டு வீட்டின் கூரையில் துளசி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மாலை வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், துளசி தூக்கிட்டு தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் துளசியின் உடலை மீட்டனர்.

பேராவூரணி வட்டாட்சியர், போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்த விவசாயி - காவல் நிலையத்தில் தடுப்பூசி போட வைத்த எஸ்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்த நபருக்கு காவல்நிலையத்தில் தடுப்பூசி போட வைத்த உதவி ஆய்வாளரை தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் பாராட்டியுள்ளதாகச் இந்து தமிழ்த்திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம், கும்ரம்பீம் ஆசிஃபாபாத் மாவட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய், பஞ்சாயத்து, அங்கன்வாடி ஊழியர்கள் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தஹங்கம் எனும் ஊரில் தடுப்பூசிபோடும் பணியில் ஈடுபட்டபோது, அந்த ஊரை சேர்ந்த விவசாயியான சித்தய்யா என்பவர் தனக்கு தடுப்பூசி போட வேண்டாம் என கூறி செவிலியரை எச்சரித்துள்ளார்.

எவ்வளவோ எடுத்துக்கூறியும் சித்தய்யா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. மாறாக, இது குறித்து தஹங்கம் காவல் நிலையத்துக்கு சென்று அங்கிருந்த உதவி ஆய்வாளர் ரகுபதியிடம், தன்னை தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்துவதாக புகாரும் அளித்தார் சித்தய்யா.

இதனைக் கேட்ட ரகுபதி, விவசாயி சித்தய்யாவுக்கு அறிவுரை கூறி, காவல் நிலையத்திலேயே அவருக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வைத்து அனுப்பினார். இது குறித்து தகவல் அறிந்த தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவ், தனதுசமூக வலைத்தளத்தில், உதவி ஆய்வாளர் ரகுபதியை வெகுவாக பாராட்டியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.