மாரடைப்பினால் நாடித் துடிப்பு நின்று போயிருந்த ஒருவருக்கு 40 நிமிடங்கள் தொடர்ந்து முதலுதவி செய்து அவரை மரணத்தின் பிடியிலிருந்து மருத்துவமனையின் அவசரப்பிரிவு ஊழியர்கள் இருவர் மீட்டுள்ளனர் .
கடந்த ஜுன் 26-ஆம் தேதி தனது வீட்டில் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்த அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த 36 வயதான ஜான் ஆக்பர்னுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இது குறித்து அவசரப்பிரிவு எண்ணான 911-க்கு தெரிவிக்கப்பட்டதும் , மூன்று குழந்தைகளின் தந்தையான ஆக்பர்னின் வீட்டிற்கு உடனடியாக வந்த இரண்டு காவல்துறையினர் அவருக்கு சி.பி.ஆர் (Cardiopulmonary resuscitation) எனப்படும் இதயத்தை இயங்க வைக்கும் முதலுதவி முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அவருடைய நாடித்துடிப்பு மீண்டும் வரும் வரை சுமார் 42 நிமிடங்கள் அவர்கள் இருவரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சி.பி.ஆர் முதலுதவி செய்தும், பாதிக்கப்பட்டவருக்கு 20 நிமிடங்கள் வரை மீண்டும் நாடித்துடிப்பு வரவில்லை எனில் அந்த நபருக்கு மீண்டும் சி.பிஆர் முதலுதவி செய்வது அவசியமில்லை. ஆனால் சார்லெட்-மெக்லென்பர்க் காவல்துறை அதிகாரிகளான லாரன்ஸ் கைலர் மற்றும் நிக்கோலினா பஜிக் ஆகியோர் 40 நிமிடங்களுக்கு மேலாக சி.பி.ஆர் முதலுதவி செய்து ஆக்பர்னின் உயிரை காப்பாற்றியுள்ளது போற்றுதலுக்குரியது.
நாடித்துடிப்பு வந்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஆக்பர்ன், விரைவில் குணமடைவதற்காக மருத்துவர்களால் ஒரு வாரத்திற்கு கோமா நிலையில் வைக்கப்பட்டார்.
மீண்டும் பணிக்கு செல்வதை எளிதாக்குவதற்காக, இன்னும் ஆறு மாதங்கள் அவர் வாகனங்களை இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மார்பில் உள்ள புண்களைத் தவிர, தான் முழுமையான குணமடைந்துவிட்டது போல உணர்வதாக அவர் கூறியுள்ளார்.
`என்னுடைய இரண்டாவது வாழ்க்கையை எப்படி சிறப்பாக உருவாக்கிக் கொள்வது என யோசித்து வருகிறேன். அவர்களுடைய பணியையும் தாண்டி என்னை காப்பாற்ற முயற்சி எடுத்து, என்னுடைய ஒவ்வொரு நாளையும் வாழ எனக்கு வாய்ப்பளித்துள்ள அவர்களுக்கு கடன்பட்டுள்ளேன்.` என ஆக்பர்ன் தெரிவித்துள்ளார்.
`இதயத்துடிப்பு நின்ற ஒருவருக்கு உடனடியாக சி.பி.ஆர் முதலுதவி செய்யப்படவில்லை என்றால் அடுத்த ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதம் குறைவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.` என அலபாமா பல்கலைகழகத்தின் மருத்துவ கல்வித்துறை இணைப் பேராசிரியரான மைக்கேல் குர்ஸ் தெரிவித்துள்ளார்.
`வடக்கு கரோலினாவில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், சி.பி.ஆர் முதலுதவி உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதை உணர்த்துகிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டர்களுக்கு உடனடியாக அளிக்கப்படும் சி.பி.ஆர் சிகிச்சை, அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை மும்மடங்காக்குகிறது.பெரும்பாலான அமெரிக்க பணியாளர்கள் திடீரென ஏற்படும் மாரடைப்பை கையாளத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.` என அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் 3,50,000க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர்.அவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். மருத்துவமனைக்கு வெளியில் மாரடைப்பால் பாதிக்கப்படும் 46 சதவீதம் பேர், மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கு முன்னர் வேறு எந்த வித முதலுதவியும் கிடைக்காததால் உயிரிழக்கின்றனர்.