செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2021 (00:08 IST)

ஜப்பானில் பெண்களுக்கு பேச்சுரிமையை மறுத்த ஆளும் கட்சியின் புதிய சர்ச்சை

சமீபத்தில், பெண்கள் குறித்து இழிவான கருத்தை முன்வைத்த ஜப்பானின் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தலைமை அதிகாரி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இது நடந்த சில நாட்களிலேயே, அந்நாட்டை ஆளும் கட்சி, முக்கிய கூட்டங்களில் பெண் உறுப்பினர்கள் பங்கெடுக்கலாம். ஆனால், அவர்கள் பேசக்கூடாது என்று கூறியுள்ளது.
 
ஜப்பானின் லிபரல் டெமாக்ரெடிக் கட்சி, ஆண்கள் மட்டுமே பங்கெடுக்கும் உயர்மட்ட கூட்டங்களில், ஐந்து பெண் அரசியல்வாதிகள் பங்கெடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.
 
இந்த கூட்டங்கள் நடைபெறும்போது, அவர்களுக்கு பேச அனுமதி இல்லை, கூட்டம் முடிந்த பின்பு, தங்களின் கருத்துகளை அவர்கள் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
 
ஜப்பானில், அரசியல் மற்றும் பொருளாதாரத்திலிருந்து பெண்கள் விலக்கியே வைக்கப்பட்டுள்ளனர்.
 
உலக பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள பாலின இடைவேளி அட்டவணை 2020இல், இடம்பெற்றுள்ள 153 நாடுகளில் ஜப்பான் 121ஆவது இடத்தில் உள்ளது.
 
கடந்த 1955ஆம் ஆண்டு முதல் பெரும்பான்மையான காலங்களில் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்துள்ள இந்த கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பட்டியலில்12 பேர் உள்ளனர். அதில் வெறும் இருவர் மட்டுமே பெண்கள்.
 
கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுசெயலாளரான 82 வயதாகும் டோஷிஹிரோ நிகாய், ஆலோசனைக்கூட்டங்களில் விவாதிக்கப்பாடும் விஷயங்களில் பெண்களின் பார்வை என்ன என்பதை அறிய அவர்களின் பங்கேற்பும் தேவை என்று கூறினார்.
 
"எந்த வகையான ஆலோசனைகள் நடக்கின்றன என்பதை அவர்கள் தெரிந்துகொள்வது முக்கியம். என்ன நடக்கிறது என்று அவர்கள் பார்க்க வேண்டும்." என்று அவர் கூறினார்.
 
இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஜப்பான் ஊடகங்கள், முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட கூட்டங்களில் ஐந்து பெண் உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என்றும், இந்த கூட்டங்களில் அவர்களுக்கு பேச அனுமதி இல்லை என்றும் தெரிவித்தன. தங்களின் கருத்துகளை, கூட்டம் முடிந்த பின்னர் உதவியாளரின் அலுவலகத்தில் அவர்கள் சமர்ப்பிக்கலாம் என்றும் அவை கூறின.
 
சீனாவின் பிரதிநிதிகள் சபையில் 465பேரில் வெறும் 46பேர் மட்டுமே பெண்கள். அதாவது வெறும் 10% மட்டுமே பெண்கள்; உலகளவில் இதன் சராசரி அளவு 25% ஆக உள்ளது.
 
யோஷிரோ மோரி ஜப்பானிய ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் பேசுகிறார்
 
ஒலிம்பிக் அதிகாரியின் விவகாரம்
 
இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் நிர்வாகக் குழுவில் அதிக பெண்களை சேர்ப்பது குறித்த கூட்டத்தில் பேசிய யோஷிரோ மோரி, " அந்த பெண்களின் பேசும் நேரத்தை நாம் அளவாக வைக்கவேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு பேச்சை முடிப்பது என்பது கடினமாக இருக்கிறது." என்று பேசினார்.
 
இதற்கு அதிக எதிர்ப்பலைகள் வந்ததைத் தொடர்ந்து, தனது "முறையற்ற கருத்துக்காக" கடந்த வெள்ளிக்கிழமை அவர் பதவி விலகினார்.
 
டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆதரவளிக்கும் டொயோடா போன்ற நிறுவனங்கள் இந்த கருத்துக்கு கடுமையான விமர்சனத்தை முன்வைத்தன.
 
அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில பெண் அரசியல்வாதிகள் வெள்ளை ஆடை அணிந்து போராட்டம் செய்தனர். டோக்கியோவின் ஆளுநரான யுரிக்கோ கொய்கீ, ஒலிம்பிக் அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று மறுப்பு அறிவித்தார்.
 
ஒலிம்பிக் போட்டியில் தன்னார்வலர்களாக பணியாற்ற பதிவு செய்திருந்தவர்களிலிருந்து 400 பேர் தாங்களாகவே விலகிக்கொண்டனர்.
 
யோஷிரோ மோரி பெண்கள் பற்றிய தனது கருத்துகள் சரியானவை அல்ல, அவை ஒலிம்பிக் உணர்வுக்கு எதிரானது என தெரிவித்தார்.
 
 
ஜப்பானிய பெண்களுக்கு இயல்பாக கூறப்படும் பாலின பாகுபாட்டு கருத்துகள் என்பது பல ஆண்டுகளாக பழகிப்போன ஒரு விஷயம். அலுவலகக்கூட்டம், வேலை குறித்த சந்திப்புகள், குடும்ப நிகழ்வுகள் என எல்லா இடங்களிலும் இவை நடக்கக்கூடும். அத்தகைய சூழலில், அதை கண்டும் காணாதது போல நாங்கள் சிரித்துக்கொண்டு நகர்ந்து விடுவோம்.
 
இதனாலேயே, மோரியின் கருத்துகள் எனக்கு ஆச்சிரியம் அளிக்கவில்லை. பெண்கள் கூட்டங்களில் பேசக்கூடாது என்று ஆளும் கட்சி தெரிவித்த நகர்வு நாங்கள் மிகவும் அறிந்த விஷயமே.
 
இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஷின்சோ அபே-வின் அரசு, 2020 ஆம் ஆண்டுக்குள், பெண் தலைவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்தது. அந்த எண்ணிக்கையை எட்ட முடியாத நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட, அடிப்படையில் ஜப்பானின் கல்வி முதல் வேலைக்கு ஆட்களை எடுப்பது வரையிலான பல கட்டங்களில் மாற்றங்கள் செய்யவே அரசு முயல வேண்டும் என்று விமர்சகர்கள் பலகாலமாக தெரிவித்து வருகின்றனர்.