1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 28 நவம்பர் 2021 (00:12 IST)

இசையைப் பெயராகச் சூட்டும் மேகாலயா பழங்குடி கிராமம் கோங்தாங் - ஓர் அதிசய வரலாறு

மேகாலயாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் எல்லாருக்கும் மூன்று பெயர்கள் உண்ட. வழக்கமான பெயர், ஒரு தனி இசை, செல்லப்பெயரை ஒத்த ஒரு சிறு ஒலி.
 
உயரமான மலைப்பாதையில் உள்ள குறுகலான சாலை வழியே என் கார் சென்றுகொண்டிருந்தது. வெப்பக்காடுகளிலிருந்து பூச்சிகளின் ஒலி காதைத் துளைத்தது.
 
ஒரு வளைவில் திரும்பியதும் பள்ளத்தாக்கிலிருந்து வேறொரு ஒலி வந்தது. இது கொஞ்சம் மென்மையாக, இசையைப் போல, கிட்டத்தட்ட அமானுஷ்யமானதாக இருந்தது. அடுத்தடுத்து ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி கோங்தாங்கின் வீடுகளை நோக்கி கார் நகரத் தொடங்கியதும், கிராமவாசிகள் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்ளும் இசைக்குறிப்புகள் கேட்டன.
 
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மேகாலயாவின் கிழக்கு காசி மலைகளுக்குள் ஒளிந்திருக்கும் காங்தாங்குக்குப் போக ஒரே வழி, தலைநகர் ஷில்லாங்கிலிருந்து மூன்று மணிநேரக் கார் பயணம்.
 
இங்கு நவ நாகரிக வழக்கங்கள் குறைவு. சிகரங்களும் பள்ளத்தாக்குகளும் சூழ்ந்த சிறு கிராமம் இது. இங்குதான் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஜிங்க்ர்வாய் இயாவ்பே என்ற ஒரு தனித்துவமான மரபும் இருக்கிறது. இந்த மரபின்படி, காங்தாங்கில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், குழந்தையின் தாய் பெயரோடு சேர்த்து ஒரு இசைக்கோர்வையையும் அடையாளமாக சூட்டுவார்.
 
பெயர் என்பது அதிகாரபூர்வ தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த இசைக்குறிப்பே அவர்களது அடையாளமாக வாழ்க்கை முழுக்க வருகிறது. ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்ளவும் இதுவே பயன்படுகிறது. ஒரு மனிதர் இறக்கும்போது அந்த இசைக்குறிப்பும் அழிந்துவிடும், அந்த இசை வேறு எவருக்கும் பெயராக சூட்டப்படுவதில்லை.
 
"தனக்குக் குழந்தை பிறந்ததற்காக மகிழ்ச்சியடையும் தாயன்பின் வெளிப்பாடு இது. தாயின் இதயத்திலிருந்து இதத்தோடு ஒலிக்கும் ஒரு தாலாட்டைப் போன்றது இந்த இசை" என்கிறார் காசி பழங்குடியினத்தைச் சேர்ந்த ஷிடியாப் கோங்சிட்.
 
மேகாலயாவில் உள்ள மூன்று பழங்குடியினத்தில் காசியும் ஒன்று. காங்தாங்கில் காசி இனத்தவர்கள் வசிக்கிறார்கள். மரபுசார்ந்த ஜெயின்சம் உடையணிந்திருந்த ஷிடியாப், வெற்றிலையால் சிவந்த சிரிப்போடு தேநீர் அருந்த வருமாறு வீட்டுக்குள் வரவேற்றார்.
 
ஓர் அறை மட்டுமே கொண்ட அந்த அழகான குடிசையில் சறுகலான கூரை வேயப்பட்டிருந்தது. மரத்தாலான தரையில் நாங்கள் அமர்ந்துகொண்டோம். ஒரு மூலையில் காங்க்சிட்டும் அவரது கணவர் ப்ரிங் கோங்ஜீயும் அடுப்பு மூட்டுவதில் மும்முரமாக இருந்தனர்.
 
ஊதுகுழலால் ஊதி விறகைப் பற்றவைத்தபடியே தனது நான்கு பிள்ளைகளைப் பற்றியும் காங்க்சிட் என்னிடம் பேசினார். ஒவ்வொரு குழந்தைக்கும் 14 முதல் 18 விநாடிகள் வரை நீளக்கூடிய இசைப்பெயரை வைத்திருப்பதாகவும் ஒவ்வொன்றும் தனித்துவமானது என்றும் கூறினார். அவற்றைப் பாடிக்காட்டினார்.
 
"இந்த நீண்ட இசைக்குறிப்புகளை நாங்கள் மலைவெளிகளில், பள்ளத்தாக்குகளில், வயல்வெளிகளில் இருக்கும்போது பயன்படுத்துவோம். தூரத்தில் இருப்பவரை அழைக்க இவை உதவும்" என்கிறார்.
 
முந்தைய காலத்தில், காடுகளில் வேட்டையாடும்போது ஒருவரோடு ஒருவர் தகவல் பரிமாறிக்கொள்ளவும் தீயசக்திகளை விரட்டவும் இந்த இசைக்குறிப்புகள் பயன்பட்டன.
 
"காடுகளில் உள்ள தீய சக்திகளுக்கு இந்த இசைக் கோர்வைகளைப் பிரித்துப் பார்க்கத் தெரியாது. விலங்குகளின் சத்தத்திலிருந்து இதைப் பிரிக்கவும் தெரியாது. ஆகவே இந்தப் பெயரை வைத்து அழைக்கும்போது எந்தத் தீங்கும் வராது" என்று காங்க்சிட் கூறினார்.
 
செல்லப்பெயரைப் போல இதில் ஒரு சிறு வடிவமும் இருக்கிறது என்று விளக்கிய காங்க்சிட், அருகில் இருக்கும்போது, வீட்டில், ஒரு மைதானத்துக்குள் இருப்பவரை அழைக்க அவை பயன்படும் என்கிறார். தூரத்தில் இருந்து கேட்கும்போது இந்த ஒலிகள் விசில் போல ஒலிக்கின்றன என்பதால் காங்தாங் கிராமமே விசிலடிக்கும் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
 
சர்க்கரை கலந்த பால் கலக்காத சூடான தேநீரை என்னிடம் காங்க்சிட் தந்தார். அவரிடம் இந்தப் பழக்கம் எப்படி ஏற்பட்டது என்று கேட்டேன். "இது எப்போது தொடங்கியது என்று யாருக்கும் உறுதியாகத் தெரியாது. ஆனால் காங்தாங் உருவான காலத்திலிருந்தே இந்தப் பழக்கம் வந்திருக்கவேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். எங்களது மக்கள் சோஹ்ரா பேரரசை உருவாக்குவதற்கு முன்பே காங்தாங் இருந்திருக்கிறது" என்று அவர் பதிலளித்தார்.
 
உலகில் மிக அதிகமாக மழை பொழியும் இடமாகக் கருதப்பட்ட சிரபுஞ்சி, காங்தாங் கிராமத்துக்கு அருகில்தான் இருக்கிறது. சிரபுஞ்சியில் 16ம் நூற்றாண்டில் சோஹ்ரா பேரரசு நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதை வைத்துப் பார்க்கும்போது, இந்த மரபு உருவாகி 500 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். ஆனால் இத்தனை ஆண்டுகளாக இந்த மரபு ஆவணப்படுத்தப்படாமலேயே இருந்திருக்கிறது.
 
முனைவர் பியாஷி தத்தா, ஷில்லாங்கில் பிறந்து வளர்ந்தவர். இப்போது நொய்டாவில் உள்ள அமிட்டி தகவல் தொடர்பு கல்வி நிறுவனத்தில் துணைப் பேராசிரியராக இருக்கிறார். தாய்வழி சமூகங்களுக்கான தனது ஆராய்ச்சிக்காக இவர் தகவல்களைத் தேடும்போது காங்தாங் பற்றி அறிந்தார்.
 
"மேகாலயா ஒரு தாய்வழி சமூகம். தாய்வழி மரபுகள், கொள்கைகள், வழக்கங்கள், சடங்குகள் ஆகியவை சமூகத்திற்குள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இவை வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குக் கற்றுத் தரப்படுகின்றன. காங்தாங் இதற்கு விதிவிலக்கல்ல. இசையாக ஒருவருக்குப் பெயர் வைக்கும் வழக்கம் அவர்களது மரபில் வேரூன்றி இருக்கிறது. வாய்மொழி வாயிலாக இது அடுத்த தலைமுறைகளுக்குக் கற்றுத்தரப்படுகிறது. இந்த வழக்கமும் தாய்வழி சமூகத்தின் ஒரு வெளிப்பாடுதான்" என்கிறார்.
 
ஜிங்க்ர்வாய் இயாவ்பே என்றால், ஒரு சமூகத்தின் ஆதித் தாயின் (இயாவ்பே) நினைவாக, அவளை கௌரவப்படுத்தும் விதமாகப் பாடப்படும் இசைக்கோர்வை (ஜிங்க்ர்வாய்). "ஆகவே இந்த வழக்கத்துக்குள் ஒரு குறியீடும் உருக்கிறது. பிறந்த குழந்தைக்கு இசைப்பெயரை சூட்டுவதோடு, அவர்களது சமூகத்துடைய ஆதித்தாயான மூதாதையரின் ஆசிகளையும் இந்த மக்கள் கோருகிறார்கள்" என்கிறார் பியாஷி.
 
2016ல் இந்தியன் சோஷியாலஜிக்கல் புல்லடின் என்ற சஞ்சிகையில் வெளிவந்த பியாஷியின் கட்டுரை, இந்த மரபு பற்றிய முதல் ஆவணமாக விளங்குகிறது. அதே ஆண்டு "என் பெயர் இயூவ்" என்ற தலைப்பில் ஒரு 52 நிமிட ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டார் இந்திய இயக்குநர் ஓய்னெம் டோரென்.
 
இது பிரிஸ்டலில் நடந்த பதினைந்தாவது ராய் திரைப்பட விழாவில் மரபுசார் விருதைப் பெற்றது. இந்த ஊரில் பிறந்து வளரும் குழந்தைகள் வேறொரு பெரிய நகரத்துக்குப் புலம்பெயர்ந்து நவீன வாழ்க்கையை வாழும்போது, தாயன்பு சார்ந்த இந்த மரபு என்னவாகிறது என்பதை இந்த ஆவணப்படம் பேசியிருக்கிறது.
 
சமீபகாலம்வரை, ஷில்லாங்குக்கோ வேறு ஊர்களுக்கோ சென்று வசிக்கும் பழக்கமே காங்தாங்கில் இருக்கவில்லை. இத்தனைக்கும் இங்கு நடுநிலைப்பள்ளியைத் தாண்டி கல்விக்கான வசதிகளும் கிடையாது. மிக சமீபமாக, வேலைக்காகவும் கல்விக்காகவும் பல இளைஞர்கள் வெளியூருக்கு செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மரபுகளுடனான தொடர்பை இழக்கிறார்கள்.
 
"இதை இந்த சமூகம் பேசவேண்டும். இந்த மரபுசார்ந்த வழக்கத்தைப் பற்றிப் பேசி, வேறு இடத்தில் இருக்கும்போதும் அதைத் தொடர்வது எப்படி என்பது வெளிப்படையாக விவாதிக்கப்படவேண்டும்" என்கிறார் பியாஷி. பெரும்பாலும் விவசாயம் சார்ந்த இந்த சமூகத்தில் சுற்றுலா போன்ற பிற வேலைவாய்ப்புத் துறைகளை உருவாக்குவதும் இளைஞர்களை இங்கேயே தங்கவைக்க உதவும்.
 
காங்தாங்கில் இருந்தபோது ராத்தெல் காங்க்சிட்டை சந்தித்தேன். இவர் உயர்கல்வி மற்றும் அரசு வேலைக்காக ஷில்லாங் சென்றிருக்கிறார். பிறகு அதையெல்லாம் விட்டுவிட்டு காங்தாங் திரும்பியிருக்கிறார். அதில் அவரது அம்மாவுக்கு மிகுந்த மனவருத்தம்.
 
இப்போது ராத்தெல் காங்தாங் கிராம முன்னேற்ற கமிட்டியில் தலைவராக இருக்கிறார். இங்கு உள்ள விவசாய சுற்றுலா கூட்டமைப்பு சொசைட்டியின் செயலாளராகவும் இருக்கிறார். "என் மனம் இந்த கிராமத்துக்குள்ளேயேதான் சுற்றுகிறது. எங்கள் மரபு பற்றி வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்று விரும்பினேன்" என்கிறார்.
 
"இந்த மரபு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கக்கூடிய ஒரு சிறப்பம்சம் என்பதை இதுவரை கிராமவாசிகள் உணரவில்லை. இந்த மரபு எங்கள் மரபணுவில் ஊறிப்போயிருக்கிறது. ஒரு பெண்ணுக்கு யாரும் இசையை உருவாக்கக் கற்றுத்தருவதில்லை. எங்கள் தாய்மொழியைக் கற்பதுபோலவே எங்களது உறவினர்கள், நண்பர்களின் பெயரையும் கற்கிறோம். பிறந்தததிலிருந்தே இந்த இசையைக் கேட்டுப் பழகுகிறோம்" என்கிறார் ராத்தெல்.
 
பயண வாய்ப்புகளும் கவனமும் அதிகரித்திருப்பதால் இங்கு வெளியாட்கள் அதிகமாக வரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த கிராமம் ஒரு சுற்றுலாத் தளமாக மாறும் என்பது கிராமவாசிகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது.
 
2014ல், மலைப்பாதைக்கு பதிலாக இங்கு ஒரு சாலை போடப்பட்டது. மூங்கில் கழிகளாலான கிராம வீடுகள் கட்டப்பட்டு, அவை தங்கும் விடுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதிலுமிருந்து இங்கு கிராம மக்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த செப்டம்பர் மாதம், ஐ.நாவின் உலக சுற்றுலா அமைப்புடைய விருதுக்கு இந்த ஊர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களுக்கேற்ப புதிய முயற்சிகளை எடுத்து மாற்றமடைந்து கிராமப்புறங்களில் சுற்றுலாவை மேம்படுத்தும் கிராமங்களுக்கான விருது இது.
 
காங்தாங்கை சுற்றிப் பார்க்கும்போது அந்த நிலபப்ரப்பின் அழகு பிடிபட்டது. வளைந்து செல்லும் சிறு தடங்கள், தடங்களுக்கு அணைகட்டியதுபோல் பூச்செடிகளும் பட்டாம்பூச்சிகளும், ஏதோ ஒரு வடிவமைப்புக்குக் கட்டுப்பட்டதுபோல அழகாக சிதறியிருக்கும் கூரைவீடுகள்.
 
ஊரின் இன்னொரு முக்கியமான அம்சம், அங்கு குப்பைகள் இருக்கவில்லை. ஊர் சுத்தமாக இருந்தது. ராத்தெலின் வழிகாட்டுதலுடன் ஒரு கால்பந்து மைதானத்துக்கும் மலையுச்சிக்கும் சென்றேன். சுற்றியுள்ள பகுதிகளை அங்கிருந்து ரசிக்க முடிந்தது. காங்தாங்கை ஒரு மரபு கிராமமாக மாற்றும் தனது திட்டங்கள் பற்றி ராத்தெல் விவரித்தார்.
 
"இயற்கை எழிலைத் தவிர, காட்சிகள் என்று பார்த்தால் காங்தாங்கில் பெரிதாக ஒன்றும் கிடையாது. ஆனால் இது சுற்றிப்பார்க்க விரும்புவர்களுக்கு மட்டுமல்ல. வித்தியாசமான ரசனை கொண்டவர்களுக்கு காங்தாங் சரியான இடம். எங்களது தனித்துவமான மரபைக் காதுகொடுத்துக் கேட்டு கவனிப்பவர்கள், இது வேறு எங்கும் இல்லாத அம்சம் என்று புரிந்துகொள்வார்கள்" என்கிறார்.