1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (13:17 IST)

பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரின் உடல் இன்று ஒப்படைப்பு

பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் மிக கொடூரமாக அடித்து துன்புறுத்தப்பட்டு, எரியூட்டி கொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடனவின் உடல் எச்சங்கள் இன்று (06) நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மாலை 5 மணிக்கு பிரியந்தவின் உடல் எச்சங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 186 விமானத்தின் மூலம் பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து கொண்டு வரப்படவுள்ளது.

இந்த விமானம் பாகிஸ்தான் நேரப்படி இன்று மதியம் 12.30 மணியளவில் இலங்கை நோக்கி பயணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு கொண்டு வரப்படும் பிரியந்த குமார தியவடனவின் உடல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

இவ்வாறு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், பிரியந்தவின் சொந்தமான ஊரான கனேமுல்ல பகுதிக்கு உடலை கொண்டு செல்ல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்பின்னர், அவரது வீட்டில் உடல், இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், சடலம் நாட்டை வந்தடைந்ததன் பின்னர், இறுதிக் கிரியைகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்படும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பிரியந்த குமார தியவடனவின் உடலை குறுகிய காலத்திற்குள் தம்மிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் பஞ்சாப் மாநில அரசாங்கம் ஆகியவற்றுக்கு பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள்

பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு நியாயம் கோரி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.

பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, பாகிஸ்தான் அரச அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தானில் பிரியந்தவின் தொழில் வழங்குநர் ஆகியோருடன், இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு விரைவில் பாகிஸ்தானிடமிருந்து இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் நாட்டிற்கு கொண்டு வரப்படும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு வழங்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.