புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:18 IST)

பாலியல் வன்கொடுமை செய்தவரையே திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் பெண்களின் கண்ணீர் கதைகள்

அந்த பெண் மறுத்துவிட்ட போதும், அந்த இளைஞர், திருமணம் செய்து கொள்ளப் போகும் உறவு தானே, இது தவறல்ல என்று சொன்னதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்த இளைஞர், அந்தப் பெண்ணைப் பின்னர் திருமணமும் செய்து கொண்டதால் இது அவரைப் பொருத்தவரையில் ஒரு குற்றமில்லை. அந்த விஷயம் அத்துடன் முடிந்ததாகவே உள்ளது அவரது கருத்து.
 
இந்தப் பெண்ணின் திருமணம் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அதே இளைஞனுடனே நடந்ததுதான் மிகுந்த வேதனைக்குரிய அம்சம் என்று அந்தப் பெண் கூறுகிறார்.
 
"இது ஒரு சாதாரண திருமணமாக இருந்திருக்க முடியாது, நான் அப்படி நினைக்கவுமில்லை" என்று அவர் கூறினார்.
 
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நிதி மற்றும் சுனில் (பெயர் மாற்றப்பட்டது) இந்தச் சம்பவத்தை நினைவு கூரும் போது இதை ஒரு பாலியல் வன்கொடுமை என்றே நிதி குறிப்பிடுகிறார். ஒன்பது ஆண்டுகள் உறவில் இருந்தபின் இதுதான் நிலை.
 
2012ல் இருவருக்கும் இடையே நடந்த இந்தச் சம்பவம் குறித்துப் பேசுவதையே அவர் மூன்றாண்டுகளாகத் தவிர்த்து வந்தார். அந்த சம்பவம் நிதியின் நினைவுகளில் இன்னும் நிழலாடுகிறது.
 
நிதி அதை நன்றாக நினைவில் கொண்டிருக்கிறார். அது கோடை காலம். அவர் கருப்பு வெள்ளை கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவர் வாடகைக் குடியிருப்பில் வசித்து வந்தார். இருவரும் அன்று அந்த அறைக்கு சென்றனர். அந்த இளைஞர், தனக்குப் போதை மருந்து கொடுத்து வன்புணர்வு செய்ததாக இந்தப் பெண் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்வது குறித்து அந்த நபர் கூறியது தனக்குக் கேட்டதாகக் கூறினார். பின்னர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளாவிட்டால், இந்த வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றி விடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
 
"நான் என்ன சொன்னாலும் சுனில் சொன்ன ஒரே பதில், நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்பதுதான். அதை நிறைவேற்றவும் செய்தார். ஏமாற்றவில்லை" என்கிறார் நிதி. ஆனால் தன் அனுமதியின்றித் தன்னுடன் வன்புணர்வு கொண்டதுதான் நிதியால் மன்னிக்க முடியாததாகவுள்ளது.
 
நிதியைப் பற்றி சுனில் கூறுகையில், "அவள் ஆம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை. அவள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை நிரூபிக்க முயன்றால், அது ஒருபோதும் வெற்றியடைந்திருக்காது. ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு பலியாக்கப்படுவது எளிதான விஷயமல்ல" என்று கூறுகிறார்.
 
"அவள் என் மீது எல்லா வழக்குகளையும் தொடுத்தாள். ஆனால் நான் அவளை மணந்தேன், இப்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்" என்று சுனில் கூறினார்.
 
ஆனால், சுனில் தன்னைப் பின்தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்யாதிருந்திருந்தால், தன்னுடைய வாழ்க்கையே வேறு மாதிரி இருந்திருக்கும் என்று கூறுகிறார் நிதி.
 
'நான் அவளை அவமானத்திலிருந்து காப்பாற்றினேன்'
நிதிக்கும் சுனிலுக்கும் 2017ல் திருமணம் நடந்தது. ஒரு வருடம் கழித்து, 2018 ஆம் ஆண்டில், டெல்லி நீதிமன்றம் சுனிலைப் பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவித்தது.
 
நிதியை அவமானத்திலிருந்து தான் காப்பாற்றியதாகவே சுனில் நம்புகிறார். இருப்பினும், தனது நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து போனதாகவே நிதி உணர்கிறாள். "அது எனக்கு மிகவும் கடினமான கால கட்டம், நான் தற்கொலை செய்து கொள்ளக்கூட நினைத்ததுண்டு" என்று நிதி குமுறுகிறார்.
 
நிலைமை சகிக்கமுடியாத படி நிதி உணர்ந்த போது, தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்பட்ட நபரை அவர் சந்தித்தார். நிதி தனது வழக்கறிஞரின் ஆலோசனையை எதிர்த்து இந்த சந்திப்பை நடத்தியிருந்தார். அவர் நீதிமன்றத்தில் மாற்றி சாட்சி அளித்துக் குற்றம் சாட்டப்பட்டவரையே மணந்தார்.
 
தொலைபேசி உரையாடலின் போது, அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்த நிதி, "எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நான் 2018இல் நீதிமன்றத்திற்குச் சென்றேன்" என்றார்.
 
"2018ஆம் ஆண்டில் ஒரு இறுதி அறிக்கையை வழங்க நான் நீதிமன்றத்திற்கு வந்தபோது, நான் கர்ப்பமாக இருந்தேன். நீதிமன்றத்தில் என்ன சொல்ல வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது. எனது வழக்கறிஞர் அங்கு இல்லை. எனது குற்றச்சாட்டுகளை நான் திரும்பப் பெறுகிறேன் என்று கூறச் சொல்லியிருந்தார். நான் அவ்வாறே செய்தேன். எனக்கு எந்த ஆதரவும் இல்லை, அதனால் நான் பின்வாங்க வேண்டியிருந்தது. திருமணமான பிறகும் நான் மகிழ்ச்சியாக இல்லை. அவன் என்னைக் கொன்று விடுவதாக மிரட்டிக்கொண்டே இருந்தான். விசாரணைக் காலம் முழுவதும் அவன் என்னை மிரட்டிக்கொண்டிருந்தார்.
 
விசாரணையின் போது, என் கணவர் என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவந்தார். இந்த அச்சுறுத்தல்களால் நான் எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டேன்." என்றார் நிதி.
 
"நான் அவனைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேனா, இல்லையா என்பது பற்றி யாரும் கவலைப்படவில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்விதான் என் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது" என்றும் நிதி கூறுகிறார்.
 
2019ஆம் ஆண்டில் நிதி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.
 
அந்த விபத்து குறித்த கசப்பான நினைவுகள் அகலவேயில்லை
 
நிதிக்கு இப்போது 29 வயது. சுனிலுடனான தனது 'திருமண வாழ்க்கை' நன்றாக இருப்பதாகத் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு வாழ்கிறார் நிதி. "இப்போது எந்த வித்தியாசமும் இல்லை. இப்போது நான் உணர்ச்சிவசப்படவில்லை. சில சமயங்களில் என் வாழ்க்கை என்னவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றும். இந்த உறவில் மரியாதை இல்லை. சுய மரியாதையும் இல்லை. ஆனால், இப்போது நான் சமாதானம் செய்து வாழ்கிறேன்" என்கிறார் நிதி.
 
ஆனால் அந்தக் கசப்பான நினைவுகள் அவரது மனதில் இருந்து இன்னும் அகலவில்லை. "அவர் என்னைத் தொடும் ஒவ்வொரு முறையும் அந்த நினைவு மீண்டும் வருகிறது. பாலியல் வன்கொடுமை களங்கத்துடன் வாழ்வது எனக்கு கடினமாக இருக்கிறது" என்று நிதி கூறுகிறார்.
 
சுனிலின் வழக்கறிஞர் தீபக் ஜாகர் கூறுகையில், "இந்த வழக்கில் புகார் அளித்தவர் ஒரு சமாதானத்திற்கு வந்தார். இந்த வழக்கில் கட்டாயத் திருமணம் மற்றும் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அந்த பெண்ணைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி விவாகரத்தும் கோரப்பட்டது. ஆனால் பின்னர், அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார். இதன் காரணமாக எனது தரப்பு மனுதாரர் விடுவிக்கப்பட்டார்" என்று தெரிவிக்கிறார்.
 
வன்புணர்வு செய்யப்பட்டதால் திருமணம் செய்து கொள்ள நிர்ப்பந்தம்
 
சமீபத்தில் நாட்டின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே வழக்கு விசாரணை ஒன்றின்போது சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளிப்படுத்தி இருந்தார்.
 
இருப்பினும், பின்னர் அது சூழலுடன் பொருத்திப் பார்க்கப்படவேண்டியது என்று கூறித் தன்னைக் காப்பாற்றிக்கொண்டார். இருப்பினும், அவரது கருத்து ஒரு பழைய விவாதத்தை மீண்டும் கிளப்பியது.
 
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண் தனக்கு அநீதி இழைத்தவரையே திருமணம் செய்து கொள்ள மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவது ஏன் என்ற கேள்விதான் அது.
 
18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த ஒரு குற்றவாளியிடம் அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ளத் தயாரா என்று நீதிபதி போப்டே கேட்டார்.
 
குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற பாக்பத் (உ.பி.) வழக்கறிஞர் விவேக் சவுத்ரி கூறுகையில், "கடந்த பல ஆண்டுகளில், பல நீதிமன்றங்கள் இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுள்ளன" என்று தெரிவிக்கிறார்.
 
நீதிமன்றங்கள் அத்தகைய முடிவை ஒருபோதும் எழுத்துப்பூர்வமாக வழங்கியதில்லை என்றாலும், இதுபோன்ற கேள்விகளைக் கேட்பது கீழமை நீதிமன்றங்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தைக் காட்டுவதாக அமைகிறது. மேலும் இது, பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகளுடன் தொடர்புடைய அமைப்புகளைக் காயப்படுத்துவதாக உள்ளது.
 
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு காரணங்களால் தங்களை வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட சம்பவங்கள் எண்ணற்றவை.
 
சமூகக் களங்கம், புலனாய்வு அமைப்புகளின் அணுகுமுறை மற்றும் மரண அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு தொடர்புப்படுத்தப்படுகின்றன.
 
2005ஆம் ஆண்டில் உ.பி.யில் முசாபர்நார் மாவட்டத்தின் சர்தாவல் கிராமத்தில் ஒரு பஞ்சாயத்து கூட்டப்பட்டது. நூர் இலாஹியின் மனைவி இம்ரானாவிடம் தனது கணவருடன் ஏழு மாதங்கள் பரிசுத்தமாக வாழ்ந்து தூய்மையாகி, பின்னர் தனது மாமனாரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பஞ்சாயத்து கூறியிருந்தது. உண்மையில், இம்ரானாவின் மாமனார் தனது இச்சைக்குத் தன் மருமகளை பலியாக்கியிருந்தார்.
 
இம்ரானா இப்போது தனது கணவருக்குப் பாவப்பட்ட பொருளாகிவிட்டதால், அவர் தனது மாமனாரைத் தனது கணவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்து கூறியது.
 
பஞ்சாயத்தின் கூற்றுப்படி, நூர் இலாஹியுடனான அவரது திருமணம் இனி செல்லுபடியாகாது. இம்ரானா எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து ஊடகங்களுக்கு முன்னால் பஞ்சாயத்தின் முடிவைத் தான் எதிர்ப்பதாகவும் தனது கணவருடனே வாழ விரும்புவதாகவும் கூறினார்.
 
திருமண நாடகம் இவர்களின் தந்திரம்
பாலியல் கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் மனக் குமுறல்
வன்புணர்வாளர்கள், பெரும்பாலும் தண்டனையைத் தவிர்ப்பதற்காக இந்தத் திருமண நாடகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
 
டெல்லியில் உள்ள சாந்தி முகுந்த் மருத்துவமனையில் 23 வயது செவிலியர் ஒருவருக்கும் இதே நிலை ஏற்பட்டது. ஒரு வார்டு பணியாளர் அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார். இதனால், அந்தப் பெண்ணின் ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. மறு கண்ணிலும் பெரும் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்தது 2003ஆம் ஆண்டில்.
 
பின்னர், அனைத்துத் தரப்பிலிருந்தும் அழுத்தம் ஏற்பட, அந்த செவிலியரை திருமணம் செய்து கொள்ள முன்வருவதாக அந்த வன்புணர்வாளர் ஒப்புக்கொண்டார். சமூகக் களங்கம் காரணமாக, இப்போது அந்தப் பெண்ணை யாரும் திருமணம் செய்ய விரும்ப மாட்டார்கள், எனவே, தான் திருமணம் செய்ய தயாராக உள்ளதாக அவன் கூறினான்.
 
ஆனால் அந்தப் பெண், இதை நிராகரித்ததோடு, இதுபோன்ற வழக்குகளில் இதுபோன்ற ஏற்பாட்டை நீதிமன்றம் ஒப்புக்கொள்வது தான் இதில் மிகவும் ஆபத்தானது என்றும் சுட்டிக்காட்டினார்.
 
பின்னர், வழக்கு விசாரணை செய்யப்பட்டுக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
 
கடந்த ஆண்டு (2020) ஒரு சிறுமியுடன் தகாத முறையில் நடந்துகொண்ட ஒருவர், அதே சிறுமிக்கு ராக்கி கட்டிச் சகோதரியாக்கிக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
 
கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒடிஷா உயர் நீதிமன்றம் பதினெட்டு வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியைப் பாலியல் துன்புறுத்தல் செய்த ஒருவருக்கு அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்ளுமாறு உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த நேரத்தில், சிறுமி பதினெட்டு வயதை எட்டியிருந்தாள்.
 
பெண்களின் உரிமைகளுக்காகச் செயல்படும், டெல்லியைச் சேர்ந்த ஜாகோரி என்ற அமைப்பின் இயக்குநர் ஜெயஸ்ரீ வேலங்கர் கூறுகையில், இதுபோன்ற ஒரு முன்மொழிவை வழங்குவதே ஒரு கொடூரமாகும் என்று கூறுகிறார்.
 
ஆண்கள் ஏன் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்? ஆராய்ச்சி செய்த பெண்களின் அனுபவம்
ஆண் ஒருவரை வற்புறுத்தி பெண் உடலுறவு கொண்டால் அது பாலியல் வல்லுறவா?
"பாலியல் வன்கொடுமைக் குற்றம் சாட்டப்பட்டவரையே பாதிக்கப்பட்டவர் திருமணம் செய்துகொள்வதன் அர்த்தம் என்ன? இதுகுறித்து விவாதம் தேவை. பாதிக்கப்பட்ட பெண் என்ன விரும்புகிறார் என்பது குறித்து யாரேனும் கவலை கொள்கிறார்களா? இது போன்ற ஒரு தீர்வை மிகவும் முற்போக்கான நடவடிக்கையாக வேறு கருதுகின்றனர். திருமணத்தைப் பற்றி ஆண்களிடையே ஒரு ஆழமான கருத்து உள்ளது. இதுவும் விவாதிக்கப்பட வேண்டியது தான். ஒவ்வொரு ஆணும் தனக்கு ஒரு கன்னிப்பெண் தான் மனைவியாக வேண்டும் என்று விரும்புகிறான்" என்று அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
 
"பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண், அந்தக் குற்றவாளியையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுவதற்கு எந்தச் சட்டப்பூர்வமான ஆதாரமும் இல்லை. பாலியல் வன்கொடுமை நடந்ததா என்பதை தீர்மானிக்கத் தேவையான ஆதாரங்களை ஆய்வு செய்வதும் நடந்திருந்தால் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதும் மட்டுமே நீதிபதிகளின் பணி" என்று அவர் காட்டமாகக் கூறுகிறார்.
 
நீதிமன்றங்கள் திருமணச் சேவை மையங்கள் அல்ல
பட மூலாதாரம்,THINKSTOCK
"திருமணம் குறித்த கேள்வி எங்கே எழுகிறது? அதன் சட்ட அங்கீகாரம் என்ன? பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரும் ஆட்படுத்தியவரும் ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்களாகவே உள்ளனர். திருமணத்தைப் பரிந்துரைப்பதன் மூலம், நீங்கள் முதலில் ஆண்களைப் பாலியல் வன்புணர்வு செய்து பின்னர் திருமணம் செய்து கொள்ள உரிமம் வழங்குகிறீர்கள். நீதிமன்றங்கள் திருமணச் சேவை மையங்கள் போலச் செயல்படுவதை நாங்கள் ஏற்கவில்லை. இதைச் செய்வதன் மூலம், பெண்களைப் பால் குடிக்கும் பச்சைக் குழந்தைகள் போல நடத்த விரும்புகிறீர்கள். பெண்ணிய அமைப்புகளையும் குழந்தைகளாகவே கருதுவது ஆணாதிக்க அத்துமீறலாகும்" என்று ஜெயஸ்ரீ வேலங்கர் கூறுகிறார்.
 
இந்தியாவில், பாலியல் குற்றங்களுக்கு எதிராக, போக்ஸோ சட்டம் உட்பட, பல கடுமையான சட்டங்கள் உள்ளன. இந்தச் சட்டங்களின் கீழ், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வரை கூட விதிக்கப்படலாம். ஆனால் வெறும் 27 சதவிகிதம் குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். ஏனெனில் இடையில் தொடர்ச்சியான ஒப்பந்தங்களும் சமரசங்களும் செய்யப்படுகின்றன.
 
கிரிமினல் வழக்கறிஞரான, தில்லியைச் சேர்ந்த ஷ்ரேய் செஹ்ராவத், "பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர்கள் ஆட்படுத்தியவர்கள் என இரு தரப்பிலும் குறைந்தது, 60 வழக்குகளில் நான் வாதாடியுள்ளேன். இந்த வழக்குகளில் பலவற்றில், பாதிக்கப்பட்ட பெண் தனது குற்றவாளியையே மணந்ததால், குற்றவாளி விடுவிக்கப்பட்டார்" என்று கூறுகிறார்.
 
இந்தியாவில் பாலியல் வழக்குகளில், திருமண ஏற்பாட்டால் முடிவுக்கு வந்த ஏராளமான வழக்குகள் உள்ளன.
 
இத்தகைய வழக்குகள் மிகவும் சர்ச்சைக்குரியவை. இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக பெண்கள் வழக்குகள் பதிவு செய்திருந்தாலும், அவற்றை நீதிமன்றத்தில் நிரூபிப்பது ஒரு பெரிய சவாலான செயலாகும்.
 
"இதுபோன்ற திருமணங்கள் பலனளிக்காது. திருமணம் தான் செய்து கொள்ள வேண்டும் என்றால் அவர் ஏன் பாலியல் குற்றவாளியாக நீதிமன்றத்தின் முன் நிற்கிறார்? உண்மையில் இது தப்பிப்பதற்கான ஒரு வழியாகும். பாதிக்கப்பட்டவரை மணந்து பின்னர் அவரை விட்டு விடுவது" என்று ஷ்ரே கூறுகிறார்.
 
மேலும் அவர், "நான் 2015இல் இதுபோன்ற ஒரு வழக்கில் வாதாடினேன். ஒரு பெண் 2014ஆம் ஆண்டில் மேட்ரிமோனியல் தளத்தின் மூலம் ஒரு மனிதரைச் சந்தித்ததாகக் குற்றம் சாட்டினார். அந்தப் பெண் தன்னை அந்த நபர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம் சாட்டினார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் இந்தப் பெண்ணை மணப்பதாகக் கூறியதால் வழக்கு திரும்பப்பெறப்பட்டது. ஆனால், அந்த நபர், ஏற்கனவே திருமணமானவர். எனவே அவரது இரண்டாவது திருமணம் எப்படியுமே சட்டப்படியாகச் செல்லாது என்பது அவருக்குத் தெரியும்" என்று இதில் உள்ள சிக்கலை விளக்குகிறார்.
 
அவர் மீது குற்றம் சாட்டிய பெண், கீதா (பெயர் மாற்றப்பட்டது), "நீதிமன்றத்திற்குச் செல்வது அவமானகரமானது என்பதால் நான் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை" என்று கூறினார்.
 
பாலியல் வல்லுறவு கலாசாரத்துக்கு உங்களை அறியாமலேயே துணை செல்பவரா நீங்கள்?
இந்தியாவில் பாலியல் வல்லுறவு குறைவதற்கான அறிகுறி இல்லாதது ஏன்?
அதே மேட்ரிமோனியல் தளத்தில் 2014 டிசம்பரில் அவர் மற்றொரு நபரை சந்தித்தார். திருமண உறுதிமொழியுடன் அவர் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தார்.
 
அப்போது கீதாவுக்கு 30 வயது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் நீதிமன்றம் சென்றார். விசாரணை தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததை அடுத்து, கீதாவும் தன் வாக்குமூலத்தை மாற்றிவிட்டார். ஆனால், இந்த நபரும் திருமணமானவராக இருந்தார்.
 
"சில மாதங்களுக்குப் பிறகு அவர் என்னைக் கைவிட்டார். என் திருமண வாழ்க்கை முடிந்துபோனது. இப்போது நான் வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் அமைதியாக இருக்கக்கூடாது, அவர்கள் போராட வேண்டும் என்று நான் கருதுகிறேன்" என்று கீதா கூறுகிறார்.
 
சட்டப் போராட்டம் பெண்களுக்கு ஒரு சவால்
இந்தியாவில் இரண்டு வகையான பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. ஒன்று, வன்புணர்வு. மற்றொன்று திருமணம் செய்து கொள்ளும் உறுதிமொழி கூறி ஏமாற்றி உறவு கொள்வது.
 
இதுபோன்ற வழக்குகளில் ஒரு பெண் நீதிமன்றத்திற்குச் செல்வது கடினம் என்று ஷ்ரே செஹ்ராவத் கூறுகிறார். "பாலியல் குற்றத்தின் போது, பெண், ஆதாரங்களைச் சேகரிக்க முடியாது. எனவே, சட்டப்பூர்வமாக இதை நிரூபிப்பது மிகவும் கடினம். மேலும், விசாரணை அமைப்புகளும் முறையாகச் செயல்படுவதில்லை. தண்டனை பெறும் வழக்குகள் குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம்" என்று அவர் விளக்குகிறார்.
 
வேறு வகையான சில வழக்குகளும் உள்ளன. பெரும்பாலும் இதுபோன்ற வழக்குகள் திருமணமாகாமலே சம்மதத்துடன் உடலுறவு கொள்ளும் சிறுமிகளின் பெற்றோர்களால் தொடுக்கப்படுகின்றன. இவை தவறான அல்லது போலியான வழக்குகள். திருமணம் செய்வதாக உறுதியளித்த பிறகு கட்டாயப்படுத்தி உறவு கொள்ளும் வழக்குகள் சில மட்டுமே.
 
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை திருமணம் செய்து கொள்ளுமாறு காவல்துறை அல்லது நீதிமன்றம் அறிவுறுத்தியதற்கான எந்த ஆவணமும் இருப்பதில்லை.
 
எனவே, இந்தக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் எடுபடாது. இது போன்ற திருமணங்கள் நடந்த வழக்குகளை நீதிமன்றம் கண்காணிப்பதில்லை. வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண் குற்றவாளியுடனே வாழ விடப்படுகிறாள். தான் குற்றம் சுமத்திய ஒருவனுடன் வாழ வேண்டிய நிலைக்கு நிதியைப் போன்ற பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.
 
நிதி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அன்று மாலை அவர் தெரிவித்தது, தனது குழந்தையால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்பதே.
 
"இப்போது நான் உலகத்தைப் புரிந்து கொண்டேன். எதுவுமே பிரச்னையில்லை என்று காட்டவே அவர் இப்படிச் செய்தார். ஆனால் அப்படி இல்லை. அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று இன்றும் நான் என்னைக் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். சிறிது காலம் நாங்கள் ஒன்றாக இருந்த பாவத்துக்காகவா? தெரியவில்லை. ஆனால், நான் இப்போது இருக்கும் நிலையை நான் ஒரு நாளும் விரும்பியதில்லை" என்று நிதி கூறுகிறார்.