செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (15:17 IST)

மூன்று மாம்பழங்களை 10 லட்சத்துக்கு ஏலம் எடுத்த தமிழர் - ஏன்?

இலங்கையில் மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை ஆகியவற்றை 10 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் பெற்றுக்கொண்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.
 
வவுனியா மாவட்டம் கணேசபுரம் பகுதியிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் அலங்கார திருவிழா உற்சவம் நடைபெற்று வருகின்றது. இதன்படி, இந்த திருவிழா உற்சவத்தின் விசேட பூஜைகள் நேற்றைய தினம் நடைபெற்றன. இதன்போது, விநாயகருக்கு மாம்பழங்கள் மற்றும் மாலை அணிவித்து, விசேட பூஜைகள் நடைபெற்றன.
 
விநாயகருக்கு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் மற்றும் மாலைகள் இதன்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட மாம்பழங்கள் மற்றும் மாலையை ஏலத்தில் கொள்வனவு செய்வதற்காக பலரும் முன்வந்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வருகைத் தந்திருந்த பலர், இந்த ஏல விற்பனையில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதன்போது, குறித்த மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியன 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபா வரை ஏலத்தில் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில், கணேசபுரம் பகுதியில் வசிக்கும் மோகன் குமார் குடும்பம் இறுதியாக 10 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தை கோரியுள்ளனர். இவ்வாறான நிலையில், குறித்த மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியன 10 லட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாவிற்கு மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியவற்றை ஏலத்தில் பெற்றுக்கொண்ட மோகன்குமார், பிபிசி தமிழிடம் பேசினார்.
 
''கணேசபுரம் - சித்திவிநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு மாம்பழங்கள் படைக்கப்பட்டன. மாம்பழங்கள் விநாயகருக்கு விசேசமானவை. அந்த மாம்பழங்களை ஏலத்தில் வைத்தார்கள். மூலஸ்தானத்தில் வைத்து, பிறகு எழுந்தருளி பிள்ளையாரிடம் வைத்தார்கள். எழுந்தருளி பிள்ளையார் கோவிலை சுற்றி வந்ததன் பிறகு, பிள்ளையாருக்கு அணிவித்த பெரிய ஆண்டாள் மாலையொன்றும், இந்த மூன்று மாம்பழத்தையும் ஏலத்தில் விட்டார்கள்.
 
இந்த ஏலத்தை மூன்று நான்கு பேர் போட்டியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த சமயம் கோவிலுக்கு போயிருந்தோம். ஏலம் நடந்துகொண்டிருக்கும் போதே நாங்கள் கோவிலுக்கு போனோம். பிள்ளையார் மாம்பழத்தில் பிரசித்தி பெற்றவர் தானே, ஏலத்தை கேளுங்கள் என குடும்பத்தவர்கள் சொன்னார்கள். 2 லட்சத்துக்கு மேல் ஏலத்தில் போய் கொண்டிருக்கு, இந்தளவிற்கு கேட்க முடியாது என்றேன். கோவிலுக்கு ஒரு நேர்த்தி வைத்திருந்தோம். அதனால், அந்த நேர்த்தியுடன் கேளுங்கள் என குடும்பத்தார் கூறினார்கள். அதன் பிறகு கேட்டோம். இறுதியாக 9 லட்சத்து 70 ஆயிரம் வரை கேட்கப்பட்டது. நாங்கள் 10 லட்சம் ரூபாவிற்கு கேட்டோம். 10 லட்சம் ரூபாவோடு ஏலம் நிறைவு பெற்றது. பிள்ளையாரின் அருள் எங்களுக்கு கிடைத்தது." என அவர் கூறினார்.
 
இவ்வாறு ஏலத்தில் பெற்றுக்கொண்ட ஒரு மாம்பழத்தை ஆலயத்தில் வைத்து, பக்தர்களுக்கு பகிர்ந்தளித்ததாக அவர் கூறுகின்றார். ஏனைய இரண்டு மாம்பழங்களையும் வீட்டிற்கு கொண்டு வந்து, அதனை பூஜை அறையில் வைத்து, தாமும் தமது குடும்பத்தாரும் உட்கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இந்த நிலையில், குறித்த மூன்று மாம்பழங்களின் விதைகளை தமது காணியில் விதையிட்டுள்ளதாகவும் மோகன்குமார் குறிப்பிடுகின்றார்.