வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (20:06 IST)

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கவனத்தைப் பெற்ற சில வெற்றிகள்

இரண்டு கட்டங்களாக நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.


தமிழகத்தில் உள்ள 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக 18,193 பேரும், கிராம ஊராட்சித் தலைவர்களாக 410 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களாக 23 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.
மீதமுள்ள இடங்களுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் இப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணிகளுமே கணிசமான இடங்களில் வெற்றி பெற்று வரும் நிலையில், இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் கவனிக்கத்தக்க சில வெற்றிகளை காண்போம்.

திருநங்கை ரியா

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் 2வது வார்டு கவுன்சிலராக திமுக வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை ரியா 947 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
ஒன்றியக்குழுவுக்கு தெரிவாகியுள்ள ரியாவுக்கு அக்கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாயத்து தலைவரான துப்புரவு பணியாளர்

ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருந்த சரஸ்வதி, பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
தாம் துப்புரவுத் தொழிலாளியாக இருந்த அதே ஊராட்சிக்கு தலைவராகியுள்ளார் சரஸ்வதி.
கடந்த முறையே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தபோது ஊராட்சி தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருந்தார் சரஸ்வதி. ஆனால் அறிவிக்கப்பட்டபின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் போனது. தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசு வேலையை இழந்த சரஸ்வதி அதன்பின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

79 வயதாகும் மூதாட்டி

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரிட்டாபட்டி கிராம ஊராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயதாகும் மூதாட்டி வீரம்மாள் அழகப்பன் வெற்றி பெற்றுள்ளார்.
வீரம்மாள் ஏற்கனவே இரண்டு முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்.

கல்லூரி மாணவி சந்தியா ராணி


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார்.

இதே கிராம ஊராட்சிக்கு இவரது தந்தை தலைவராக இருந்துள்ளார். இப்போது இது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதால் அவரால் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

73 வயது மூதாட்டி தங்கவேலு

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட அ. தரைக்குடி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட 73வயதாகும் தங்கவேலு என்ற மூதாட்டி 60 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சேவை செய்யப் போவதாக அவர் கூறுகிறார்.