திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2020 (21:23 IST)

"இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை": இரான் கண்டனம்

"இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை": இரான் கண்டனம்
''டெல்லி வன்முறை சம்பவத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள் தான்'', ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்துள்ளனர், இது கவலை அளிக்கிறது. இவ்வாறான வன்முறை இனி இந்தியாவில் நிகழக்கூடாது என இரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
கடந்த வாரம் டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்த நிலையில் இந்திய முஸ்லிம்களின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இரானின் வெளியுறவு துறை அமைச்சர் மொஹம்மத் ஜாவித் சரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இரானும் இந்தியாவும் நட்பு பாராட்டி வந்தன.
 
அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபடும் நபர்களை தடுக்க வேண்டும் என்றும் இரான் வெளியுறவு அமைச்சர் இந்திய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இனி வரும் காலங்களில் அமைதிப் பேச்சு வார்த்தை மற்றும் சட்டத்தின் படி மட்டுமே செயல்பட வேண்டும் என்று அமைச்சர் சரீஃப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
 
''மூன்று நாள் நடைபெற்ற வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர், புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குடியுரிமை சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும் விமர்சகர்கள் சிலர் கூறுகின்றனர். இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு மதத்தை சேர்ந்தவர்களும் டெல்லி வன்முறையில் உயிரிழந்துள்ளனர், பலர் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்பட்டாலும், இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள் தான். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இடம் பெயர்ந்துள்ளனர்'' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இரான் வெளியுறவு அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மௌசாவி டெல்லி வன்முறை குறித்து பேசியுள்ளார்.
 
டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களால் தாங்கள் மிகுந்த வருத்தமும், கவலையும் அடைந்துள்ளதாகவும் மௌசாவி கூறியுள்ளார். இதன் பிறகு இவ்வாறான வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்காது என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.