ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்க இலங்கை வீராங்கனை முடிவு


bala| Last Modified திங்கள், 5 ஜூன் 2017 (15:16 IST)
பொருளாதார நெருக்கடி காரணமாக தான் வென்ற ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கையின் மூத்த ஓட்ட பந்தைய வீராங்கனை தெரிவித்துள்ளார். இலங்கையின் தனியார் தொலைகாட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

2000 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது, 200 மீட்டர் ஓட்ட பந்தையத்தில் சுசந்திக்கா ஜயசிங்க வெள்ளி பதக்கமொன்றை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார். ஆனால், தான் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள காரணத்தினால் தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தனக்கு விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர் பதவியொன்று வழங்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், இதுவரை எந்தவொரு பொறுப்பும் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், தனக்கு அந்த பதவிக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான தான் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள காரணத்தினால் தான் நாட்டுக்கு புகழை தேடித்தந்த ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக வினவிய போது கருத்து தெரிவித்த விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜெயசெக்கற, சுசந்திக்கா ஜெயசிங்கவிற்கு தனது வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்யும் அவசியம் ஏற்பட மாட்டாது என்று தெரிவித்தார். சுசந்திக்கா ஜெயசிங்கவிற்கு 75,000 ரூபாய் மாதாந்திரம் கொடுப்பனவொன்றுடன் விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர் பதவியொன்றை வழங்க தான் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்த போதிலும், அமைச்சரவை அவருக்கு 60,000 ரூபாய் மாத்திரம் வழங்க தீர்மானித்தாக தெரிவித்தார். அதனை பெற்றுக்கொள்ள சுசந்திக்கா ஜயசிங்க முன்வரவில்லை என்று கூறிய அமைச்சர் ஜெயசெக்கற, அவருக்கு அந்த பதவியில் கடமையாற்ற எந்த தடையும் இல்லை என்று கூறினார்.

இதில் மேலும் படிக்கவும் :