1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (15:34 IST)

சூர்யா, கஜோலுக்கு 'ஆஸ்கர்ஸ்' அகாடமியில் உறுப்பினராக அழைப்பு - சுவாரசிய தகவல்கள்!

ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக சேர 2022ஆம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய நடிகர்கள் சூர்யா, கஜோல் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.
 
இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் ரீமா காக்தி, ஆவணப்பட இயக்குநர்கள் சுஷ்மித் கோஷ், ரிண்டூ தாமஸ் ஆகியோரும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் 2022ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களாக சேர அழைக்கப்பட்டுள்ளனர்.
 
நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், சினிமா செய்தி தொடர்பாளர்கள், ஒலி வடிவமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், கதாசிரியர்கள், விஷுவல் எபெஃக்ட் கலைஞர்கள், குறும்படம் மற்றும் ஆவணப்பட இயக்குநர்கள், கௌரவ உறுப்பினர்கள் என உலகெங்கும் உள்ள 397 திரைத் துறையினர் 2022ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களாக சேர அகாடமியில் அழைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 44% பெண்கள், 50% பேர் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். 37% பேர் போதிய பிரதிநித்துவம் இல்லாத இனக்குழுக்களை சேர்ந்தவர்கள். 
 
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்?
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக இருப்பவர்கள் சிறந்த படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் படங்களில் எவற்றுக்கு அந்த விருதை வழங்கலாம் என்று வாக்களிக்கலாம். ஒவ்வொரு துறையிலும் அதிக உறுப்பினர்களின் வாக்குகளைப் பெரும் படங்கள் அந்தந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகும். இது மட்டுமல்லாது அகாடமி உறுப்பினர்கள் இந்த அமைப்பின் விருது மற்றும் சினிமா சார்ந்த பிற நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியும்.
 
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் என்பது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைத் துறையினரை உள்ளடக்கிய ஓர் அமைப்பு. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி திரைத்துறையினர் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
 
சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழகுவதுடன் திரைத்துறையின் வளர்ச்சிக்கும் இந்த அமைப்பு உதவி வருகிறது.
 
இந்த அகாடமியின் ஆளுநர்கள் குழு சார்பிலும் ஆண்டுதோறும் மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் திரைத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியவர்களுக்கும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பிக்கிறது.
 
'Student Academy Awards' எனும் பெயரில் மாணவர்கள் எடுக்கும் படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன் படங்கள் உள்ளிட்டவற்றுக்கு 1972 முதல் விருதுகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களாக அகாடமி விருதை பெற்றவர்கள் பிற்காலத்தில், இதே அகாடமி வழங்கும் உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர் விருதையும் வாங்கிய நிகழ்வு 11 முறையும், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிகழ்வு 63 முறையும் நடந்துள்ளதாக அகாடமி இணையதளம் தெரிவிக்கிறது.
 
அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் எனும் திரைப்படத் துறை சார்ந்த அருங்காட்சியகம் ஒன்றையும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களில் பணியாற்றுபவர்கள் மட்டுமே இதில் உறுப்பினராக முடியும். கதாசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என வெவ்வேறு துறையினருக்கும் தனித்தனியாக இதில் மொத்தம் 17 கிளைகள் உள்ளன.
 
விண்ணப்பம் போட்டால் உறுப்பினராக முடியுமா?
இதில் திரை துறையைச் சார்ந்த எந்த ஒருவரும் விண்ணப்பிப்பதன் மூலம் உறுப்பினராகி விட முடியாது. ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் இரண்டு பேர் முன்மொழிவதன் மூலம் மட்டுமே இதில் உறுப்பினராக முடியும்.
 
ஆண்டுதோறும் இவ்வாறு முன்மொழியப்படும் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர்களில் தகுதியானவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு உறுப்பினராக சேர்வதற்கான அழைப்பு அனுப்பப்படும்.
 
அவ்வாறே 2022ஆம் ஆண்டுக்கான அழைப்பு உலகெங்கும் 397 பேருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அன்று அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே இதில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் புதிதாக உறுப்பினராவதற்கு ஒருவரின் பெயரை மட்டுமே முன்மொழிய முடியும் என்று இந்த அமைப்பின் அலுவல்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.
 
அகாடமியின் 17 கிளைகளில் ஒருவர் எதில் அங்கம் வைக்கிறாரோ அதே துறையைச் சேர்ந்தவரின் பெயரை மட்டுமே முன்மொழிய முடியும். 'மெம்பர்ஸ் அட் லார்ஜ்' என்று அழைக்கப்படும் கௌரவ உறுப்பினர்களுக்கான பெயர்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாலும் பரிந்துரை செய்யப்படலாம்.