1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (14:26 IST)

இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் நிதி உதவியுடன் கட்டப்பட்ட பள்ளிவாசல் - ஊர் கூடி கொண்டாட்டம்

BBC
தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பனங்குடி என்ற ஊரில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து நிதி அளித்து பள்ளிவாசல் கட்டி, அதை மும்மதத்தினரும் கூடித் திறந்து வைத்து கொண்டாடியுள்ளனர்.

இந்த ஊரில் மாரியம்மன் கோயில், கிறிஸ்தவ தேவாலயம், இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன.

இவற்றில் உள்ள பள்ளி வாசல் 200 ஆண்டுகள் பழமையானதாக, மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. புதிதாக பள்ளிவாசல் கட்ட ஊரில் ஆலோசனை நடத்தப்பட்டு, மத வேறுபாடு இல்லாமல் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் வரி வசூல் செய்து, சுமார் 70 லட்சம் ரூபாய் செலவில் இந்தப் பள்ளிவாசல் பிரமாண்டமாக கட்டப்பட்டு ‘முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளி வாசல்’ எனப் பெயரிடப்பட்டது.

இதன் திறப்பு விழாவை, ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவதற்காக, திருவிழா போன்ற கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்து, கிறிஸ்தவ கோவில்களில் பூஜைகள் செய்த பின்னர், ஊர் மக்கள்  ஒன்று கூடி பள்ளிவாசல் திறப்பு விழாவை பிரமாண்டமாக செய்தனர்.

"எங்க ஊரில் நேற்று, இன்று இல்லை, நூறண்டுகளுக்கும் மேலாக தலைமுறை, தலைமுறையாக மூன்று மதத்தினரும் நல்லிணக்கத்துடன், ஒற்றுமையாக வாழ்கிறோம்" என்று கூறுகிறார்கள் ஊர் மக்கள்.

மாரியம்மன் கோயிலில் தேங்காய் உடைத்து...

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பனங்குடி ஊர்த் தலைவர் சாமிதாஸ், "எங்கள் ஊர் மிகவும் பழமை வாய்ந்தது. 8 ஊர்களை உள்ளடக்கிய இப்பகுதியை பனங்குடி நாடு என்று அழைப்பார்கள். எங்கள் ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் சாதி, மத வேறுபாடு இல்லாமல், ஒன்று கூடி கொண்டாடி வருகிறோம்

கடந்த ஆறு தலைமுறைகளாக அனைத்து மதத்தினரும் ஒரே உறவாக வாழ்ந்து வருகிறோம். இதன் வெளிப்பாடாகவே அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி எங்கள் ஊரில் புதிதாக பள்ளிவாசல் கட்டியுள்ளோம். இதனால் எங்கள் ஊர் உலக அளவில் எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது," என்று தெரிவித்தார். அனைத்து மதங்களை சேர்ந்தோரும் மாரியம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்துவிட்டு, பிறகு எல்லோரும் சேர்ந்து, புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசலை திறந்து வைத்ததாகவும் கூறுகிறார் சாமிதாஸ்.

வியந்த உறவினர்கள்...

BBC
இஸ்லாம் மதத்தின் முக்கிய கோட்பாடான, ’’சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்’’ என்பதற்கு ஏற்ப எங்கள் ஊர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்", என்று பிபிசி தமிழிடம் பேசியபோது, அப்துல் ரகுமான் தெரிவித்தார். "எங்கள் ஊரில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். கிராம மக்கள் ஒன்று கூடி வந்து பள்ளிவாசல் திறந்து வைத்ததை பார்த்து வெளியூரில் இருந்து வந்திருந்த உறவினர்கள் வியந்தனர். மும்மதத்தினரும் தங்களின் பண்டிகை காலங்களில் மற்ற மதத்தினருடன் உணவைப் பரிமாறி, வாழ்த்துகளை பகிர்வது இன்றும் நடைபெற்று வருகிறது. எங்கள் ஊரில் இன்று போல் என்றும் சமத்துவத்துடன் வாழ்வோம்," என்று நம்பிக்கை தெரிவித்தார் அப்துல் ரகுமான்.

"விடுதலை போராட்டத்தில் பனங்குடி"

"பள்ளிவாசல் திறப்பின் போது ஜாதி மதத்தை தாண்டி அனைவரும் ஒன்றிணைந்து கலந்துகொண்டது மட்டுமல்லாமல் இந்தப் பள்ளிவாசல் உருவாக அனைவரது பங்களிப்பும் வேண்டும் என நிதி வழங்கி எங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டியுள்ளோம்" என்று தெரிவித்தார் இந்த ஊரைச் சேர்ந்த வில்லியம். "100 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊர் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்துஆங்கிலேயர்களுக்கு எதிராக விடுதலைக்காக போராடியுள்ளனர். இதைப் போல உலகெங்கும் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து சகோதர அன்போடு வாழ வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை" என்றும் கூறினார் வில்லியம்.