1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (23:04 IST)

எம்பாப்பேயை கேலி செய்த அர்ஜென்டினா கோல் கீப்பருக்கு சிக்கல்

Mbappe 1
இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பேயை கேலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்ட்டினஸ் மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

 
கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு பியூனோஸ் அயர்ஸ் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டபோது ஒரு குழந்தை பொம்மையில் எம்பாப்பேயின் முகத்தை பொருத்தி கொண்டு வந்தார் மார்ட்டினஸ்.

 
இந்தப் புகைப்படமும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன், கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானது. இதற்கு முன்பும் மார்ட்டினஸ் பல முறை எம்பாப்பேயே கேலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

 
கத்தார் லூசாய்ல் மைதானத்தில் உலகக் கோப்பையை வென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு, ஓய்வு அறையில் எம்பாப்பேக்காக ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்க வேண்டும் என்று கூறிய காணொளியும் இதேபோன்ற விமர்சனத்தைப் பெற்றது.
 
'சண்டை செய்வோம்' - இறுதிப்போட்டி இடைவேளையில் எம்பாப்பேவின் உணர்ச்சிமிகு உரை
22 டிசம்பர் 2022
கால்பந்து உலகக்கோப்பையை யாரெல்லாம் தொட முடியும்? ஃபிஃபா விதிகள் என்ன கூறுகின்றன?
22 டிசம்பர் 2022
கத்தார் கால்பந்து உலக கோப்பை தொடர்: அரேபியர்கள், முஸ்லிம்கள் பெற்ற பலன் என்ன?
20 டிசம்பர் 2022
என்ன நடந்தது?
கத்தாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸும் அர்ஜென்டினாவும் மோதின. முதல் பாதியில் இரண்டு கோல்களை அடித்து உறுதியான முன்னிலையை அர்ஜென்டினா அணி பெற்றிருந்தது. 

 
ஆனால் ஆட்டம் முடிவதற்கு பத்துப் பன்னிரெண்டு நிமிடங்களே இருந்த நிலையில், 80 மற்றும் 81-ஆவது நிமிடங்களில் கிலியன் எம்பாப்பே இரு கோல்களை அடித்து ஆட்டத்தின் போக்கை பிரான்ஸ் வசம் திருப்பினார். அதன் பிறகும் ஆவேசமான ஆட்டத்தால் அர்ஜென்டினா அணி திணறிப்போயிருந்தது.

 
கூடுதல் நேரத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தபோதும் அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு கோலை அடித்த எம்பாப்பே சமநிலைக்குக் கொண்டுவந்தார். கடைசியா பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில்தான் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா வெற்றிகொள்ள முடிந்தது. 
 
உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றதுடன், இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல்களை அடித்து தங்கக் காலணி விருதையும் பெற்றார் எம்பாப்பே. 
 
 
அர்ஜென்டினா அணிக்காக கடைசி நேரத்தில் பிரான்ஸின் கோல் வாய்ப்பு ஒன்றை அற்புதமாகத் தடுத்ததுடன், பெனால்ட்டி ஷூட் அவுட்டிலும் இரு முறை பிரான்ஸ் வீரர்களின் தாக்குதலைத் தடுத்தார் எமி மார்ட்டினஸ். அவருக்கு தங்கக் கையுறை விருது கிடைத்தது.

 
ஒருபுறம் அர்ஜென்டினா அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மறுபுறம் சோகமாக இருந்த எம்பாப்பேயை பிரான்ஸ் அதிபர் தேற்றும் காட்சிகளையும் காண முடிந்தது.

 
இந்தக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக உலகக் கோப்பையை வைத்து ஓய்வு அறையில் அர்ஜென்டினா வீரர்கள் உற்சாகமாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் எம்பாப்பேக்காக ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்கும்படி எமி மார்ட்டினஸ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
வெற்றிப் பேரணியில் மீண்டும் கேலி
 
அர்ஜென்டினாவில், உலகக்கோப்பையை வென்று வீடு திரும்பிய மெஸ்ஸி மற்றும் அணியின் வீரர்களை வரவேற்பதற்கு சுமார் 40 லட்சம் மக்கள் சாலையில் கூடியிருந்தனர்.  இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமையும் அர்ஜென்டினா அரசு விடுமுறை அறிவித்திருந்தது. 
 
மக்கள் கூட்டத்திற்கு நடுவே மெஸ்ஸியும் அணியின் வீரர்களும் கோப்பையுடன் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். அப்போது ஒரு குழந்தைப் பொம்மையில் எம்பாப்பேயின் முகத்தை ஒட்டி எமி மார்ட்டினஸ் எடுத்துவந்தார். அவருக்கு அருகே மெஸ்ஸி நின்று கொண்டிருந்தார்.

 
இதை சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டித்துள்ளனர். பிரிட்டிஷ் தொலைக்காட்சி பிரபலமான பியர்ஸ் மோர்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் மெஸ்ஸியை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
 
 
உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக தென்னமெரிக்க கால்பந்துத் திறமை குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார் கிலியன் எம்பாப்பே. “ஐரோப்பிய நாடுகளைப் போல தென் அமெரிக்க நாடுகளில் கால்பந்து முன்னேறவில்லை” என்று எம்பாப்பே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 
“ஐரோப்பாவில் எப்போதும் உயர்ந்த நிலையிலான போட்டிகளில் நாங்கள் ஆடுகிறோம். அதனால் உலகக் கோப்பைக்கு நாங்கள் தயாராக வருகிறோம். ஆனால் தென் அமெரிக்காவில் பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு இந்த வாய்ப்பு இல்லை. ஐரோப்பா அளவுக்கு அங்கு கால்பந்து முன்னேறவில்லை. அதனால் ஐரோப்பிய அணிகள் வெல்கின்றன” என்று கூறியிருந்தார்.
 
அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்தக் கருத்தைக் குறிப்பிட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டனர். 
 
கடந்த உலகக் கோப்பை போட்டியில் 19 வயதேயான எம்பாப்பே அர்ஜென்டினா அணியை நாக் அவுட் சுற்றில் வெளியேற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
 
 
எம்பாப்பேயை கேலி செய்தது தொடர்பாக பிரான்ஸ் கால்பந்து சம்மேளத்தின் தலைவர் நோயல் கிரேட், அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திடமே புகார் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து எமி மார்ட்டினஸ் மீது விசாரணை நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது.