கொழும்பு புறநகர் பகுதியான கம்பஹா - மஹர சிறைச்சாலைக்குள் கடந்த 29ம் தேதி கடும் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இது தொடர்பான விடியோ ஒன்றை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
29ம் தேதி மாலை ஆரம்பமான மோதல் அடுத்த நாள் அதிகாலை வரை தொடர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், 106 கைதிகள் காயமடைந்திருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த கைதிகளுக்கு ராகமை மருத்துவமனை, வெலிகட சிறைச்சாலை மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை ஆகியவற்றில் தொடர்ந்தும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிடுகிறது.
அத்துடன், சிறு காயங்களுக்கு உள்ளான கைதிகளை சிகிச்சைகளின் பின்னர், மீண்டும் மஹர சிறைச்சாலைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் கோவிட் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டு வருகின்ற பின்னணியில், மஹர சிறைச்சாலையில் கடந்த 29ம் தேதி 183 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்ததை அடுத்தே, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்திருந்தார்.
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.
போலீஸ் விசேட அதிரடி படையினர் சிறைச்சாலைக்குள் வரவழைக்கப்பட்டு, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை போலீஸார் முன்னெடுத்திருந்தனர்.
எனினும், சிறைச்சாலைக்குள் மோதல் தீவிரமடைந்து, சிறைச்சாலைக்குள் தீ பரவலும் ஏற்பட்டது.
இரவு வேளையில் பரவிய தீ, அடுத்த நாள் அதிகாலை வரை பரவியிருந்தது.
இவ்வாறான நிலையில், சிறைச்சாலைக்குள் தொடர்ச்சியாக அதிகாலை வரை துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டதாக சிறைச்சாலையை அண்மித்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், மோதல் சம்பவத்தில் காயமடைந்த கைதிகள் உடனடியாக ராகமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரியினால் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அது மாத்திரமன்றி, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவின் உத்தரவிற்கு அமைய, போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்ற பின்னணயில், சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையில் மோதல் இடம்பெறும் வகையிலான காணொளியொன்றை சிறைச்சாலைகள் திணைக்களம் ஊடகங்களுக்கு வெளியிட்டது.