வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (16:02 IST)

கோட்டாயபய ராஜபக்ஷ தாய்லாந்துக்குச் செல்லத் திட்டமா?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாய்லாந்திற்கு செல்லவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


அரச எதிர்ப்பு போராட்டம் வலுப் பெற்று, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் தமது பொறுப்பிற்கு கடந்த ஜுலை மாதம் 9ம் தேதி எடுத்திருந்தனர்.

இதையடுத்து, தலைமறைவான அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் ஜுலை மாதம் 13ம் தேதி மாலத்தீவு நோக்கி பயணித்திருந்தார்.

மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் நோக்கி பயணித்த கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியிருந்தார். சுற்றுலா விசாவின் மூலம் சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஸவின் விஸாவை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அவர் மீண்டும் இலங்கைக்கு வருகைத் தருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிற்கு வருகைத் தருவதற்கு இது சரியான தருணம் கிடையாது என புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச தனது மனைவியுடன், தாய்லாந்து நோக்கி பயணிக்க எதிர்பார்த்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் பிறந்த கோட்டாபய ராஜபக்ஷ, சிறிது காலம் அமெரிக்க பிரஜாவுரிமையை பெற்றிருந்தார்.
அமெரிக்க பிரஜாவுரிமையுடனேயே கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தார்.

வெளிநாட்டு பிரஜாவுரிமையை கொண்டவர்கள், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி பதவிகளுக்கு தெரிவாக முடியாது என்ற வகையில், அரசியலமைப்பின் 19வது திருத்தம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலப் பகுதியில் கொண்டு வரப்பட்டது.

இதன்படி, 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கினார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்தார்.

தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்து, ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்ற கோட்டாபய ராஜபக்ஸவின், மகன் மற்றும் மகனின் குடும்பம் இன்றும் அமெரிக்காவிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ நிரந்தரமாக செல்வதற்கு நாடொன்று இல்லாமல், சிங்கப்பூரில் தங்கியிருந்ததுடன், தற்போது தாய்லாந்து நோக்கி பயணிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.