செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (22:17 IST)

இலங்கையில் மோசமடையும் வானிலை: மூவர் பலி, நால்வரை காணவில்லை

Srilanka
இலங்கையில் திடீரென ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. நான்கு பேரின் நிலை தெரியவில்லை.
 
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கடும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலை நிலவி வருகின்றது. இவ்வாறு ஏற்பட்ட சீரற்ற வானிலையினால், 2,911 குடும்பங்களைச் சேர்ந்த 11,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
 
யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 945 குடும்பங்களைச் சேர்ந்த 3871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அத்துடன், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்கள் அடங்கலான மத்திய மாகாணத்தில் 819 குடும்பங்களைச் சேர்ந்த 3371 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. சீரற்ற வானிலை காரணமாக 25 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
 
இதேவேளை, 643 குடும்பங்களைச் சேர்ந்த 3046 பேர், 16 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
எல்லா சாலைகளும் சுரங்கப்பாதையானால் உலகம் இப்படித்தான்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் கட்டிடங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் தலவாகலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வாகன போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
 
அதேவேளை, மத்திய மலைநாட்டு பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நீர்த்தேக்கங்களை அண்மித்துள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இவ்வாறு ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கை
 
 
தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 
இதன்படி, புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கடல் பகுதியில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
அத்துடன், புத்தளம் முதல் மன்னார் ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியத்தில் காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் அதிகரிப்பதுடன், கடல் அலை 3 முதல் 3.5 மீற்றர் வரை உயரக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறுகின்றது.
 
குறித்த கடல் பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கடற்றொழிலாளர்களிடம், வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.