1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (14:00 IST)

தூக்கம் இல்லாமல் தவிக்கும் தென் கொரிய மக்கள் - அதிர்ச்சிகரமான வரலாற்றுப் பின்னணி

BBC
உலகில் மிக அதிக தூக்கமின்மை நிலவும் நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. இதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர் என்று பிபிசியின் குளோயி ஹட்ஜிமெத்யூ குறிப்பிடுகிறார்.

தனது அலுவலக நேரம் மிகவும் கடினமாகி தன்னை தளர்த்திக்கொள்ள முடியாமல் போனதால், ஜி-யூனுக்கு தூங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

சராசரியாக அவர் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வேலை செய்தார். ஆனால் 29 வயது மக்கள் தொடர்பு அதிகாரியான அவர் பிஸியான நாட்களில் அதிகாலை மூன்று மணி வரை அலுவலகத்தில் இருப்பார்.

அவருடைய மேலதிகாரி அடிக்கடி நள்ளிரவில் அழைத்து உடனடியாக ஏதாவது செய்யுமாறு கோருவார்.

"எப்படி இளைப்பாறுவது என்பதை ஏறக்குறைய நான் மறந்துவிட்டேன்," என்று ஜி-யூன் கூறுகிறார்.

சியோலின் பளபளப்பான கேங்னேம் மாகாணத்தில் உள்ள ட்ரீம் ஸ்லீப் கிளினிக்கில், தூக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற மனநல மருத்துவர் டாக்டர் ஜி-ஹியோன் லீ, ஒரு இரவில் 20 தூக்க மாத்திரைகள் வரை சாப்பிடும் நோயாளிகளை தான் அடிக்கடி பார்ப்பதாக கூறுகிறார்.

"பொதுவாக தூங்குவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் கொரியர்கள் விரைவாக தூங்க விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் மருந்து சாப்பிடுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

தூக்க மருந்துக்கு அடிமையாதல், மாபெரும் தேசிய பிரச்சனையாக உள்ளது. அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லையென்றாலும் கூட, ஒரு லட்சம் கொரியர்கள் தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அப்போதும் தூங்க முடியாதபோது, ​​​​அவர்கள் மருந்துகளோடு கூடவே பெரும்பாலும் மது அருந்துவதை நாடுகிறார்கள் ,இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

''மக்கள் தூக்கத்தில் நடக்கிறார்கள். அவர்கள் குளிர்சாதனப் பெட்டியிடம் சென்று, சமைக்காத உணவு உட்பட பலவற்றை தாங்கள் அறியாமலேயே சாப்பிடுகிறார்கள்,'' என்கிறார் டாக்டர் லீ. "சியோலின் மையப்பகுதியில் ஒரு நோயாளி தூக்கத்தில் நடந்தபோது கார் விபத்து கூட ஏற்பட்டது."

நாள்பட்ட தூக்கமின்மை அதாவது ஹைப்போ-அரெளசல் நோயால் அவதிப்படுபவர்களை தான் அடிக்கடி பார்ப்பதாக டாக்டர் லீ குறிப்பிட்டார். இரவில் சில மணிநேரங்களுக்கு மேல் தூங்கி பல தசாப்தங்களாகிவிட்டதாக அவரது நோயாளிகளில் சிலர் கூறுகிறார்கள்.

''அவர்கள் அழுவார்கள். ஆனால் இங்கு வரும்போது நம்பிக்கையின் ஒரு இழையை அவர்கள் இன்னும் வைத்திருப்பார்கள். இது மிகவும் சோகமான நிலை,'' என்கிறார் அவர்.

அதிக வேலை, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை

உலகில் தூக்கமின்மை மிகஅதிகம் உள்ள நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. வளர்ந்த நாடுகளுக்கிடையே அதிக தற்கொலை விகிதத்தையும் இந்த நாடு கொண்டுள்ளது, அதிக அளவு மதுபானம் மற்றும் ஆண்டி டிப்ரசண்டுகளை உட்கொள்ளும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இங்கு உள்ளனர்.

இந்த புள்ளிவிவரங்களுக்கு வரலாற்று காரணங்கள் உள்ளன.

உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்த தென்கொரியா, ஒரு சில தசாப்தங்களில், உலகின் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. பாப் கலாச்சாரத்தில் அதன் வளர்ந்து வரும் செல்வாக்குடன், கணிசமான மென்மையான அதிகார அந்தஸ்தையும் இது கொண்டுள்ளது.

செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற இதேபோன்ற பாதையைக் கொண்ட நாடுகள் பெருமளவு இயற்கை வளங்களை கொண்டுள்ளன. ஆனால் கொரியாவிடம் அத்தகைய வளங்கள் ஏதும் இல்லை. கடினமாகவும் வேகமாகவும் உழைக்கத் தூண்டப்பட்ட, கூட்டு தேசியவாதத்தால் உந்தப்பட்ட மக்கள்தொகையின் முழுமையான அர்ப்பணிப்பின் மூலம் அது தன்னை உயர்த்திக்கொண்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான தென் கொரிய இளம் வயதினர், தங்கள் தூக்கக் கோளாறுகளுக்கு மருத்துவ உதவியை நாடுகின்றனர்

ஒரு விளைவு என்னவென்றால், அதன் மக்கள் அதிக வேலை, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது, ​​தூங்க முடியாதவர்களுக்கு உதவும் வகையில் ஒரு முழுத் துறையே வளர்ந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் 'தூக்க உதவி' தொழிலின் மதிப்பு 2.5 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் தூக்க உதவி தொழில்

சியோலில், சில பல்பொருள் அங்காடிகள் முழுவதுமே தூக்க தயாரிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சரியான படுக்கை விரிப்புகள் முதல் உகந்த தலையணைகள் வரை அங்கு கிடைக்கிறது. அதே நேரத்தில் மருந்தகங்கள் மூலிகை தூக்க சிகிச்சைகள் மற்றும் டானிக்குகள் நிறைந்த அலமாரிகளை கொண்டுள்ளன.

தூக்கமின்மைக்கான தொழில்நுட்ப அணுகுமுறைகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டேனியல் டியூடர், 'கொக்கிரி' என்ற தியான செயலியைத் தொடங்கினார்.மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ள இளம்வயது தென்கொரியர்களுக்கு உதவுவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரியா வரலாற்று ரீதியாக ஒரு பௌத்த நாடாக இருந்தாலும், இளைஞர்கள் தியானத்தை ஒரு வயதான நபரின் பொழுதுபோக்கு,சியோலில் ஒரு அலுவலக ஊழியர் செய்யக்கூடியது அல்ல என்று நினைக்கிறார்கள். இளம் கொரியர்களுக்கு தியானத்தை, ஒரு மேற்கத்திய யோசனையாக மீண்டும் இறக்குமதி செய்து, பேக்கேஜ் செய்ய வேண்டியிருந்ததாக டேனியல் கூறுகிறார்.

பாரம்பரிய நிறுவனங்களும் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளன.

ஹைராங் சுனிம் ஒரு பௌத்த கன்னியாஸ்திரி ஆவார். அவர் சியோலின் விளிம்பில் , கோவிலில் தங்கி ஓய்வெடுக்கும் வசதியை நடத்த உதவுகிறார். அங்கு தூக்கம் இல்லாதவர்கள் தியானத்தில் ஈடுபடலாம் மற்றும் பெளத்த போதனைகளை கற்கலாம்.

கடந்த காலத்தில், போதனைகள் மற்றும் பிரார்த்தனைகளை விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த வகையான வசதிகள் வழங்கப்பட்டன. ஆனால் இப்போது வயதில் இளமையான, வேலை செய்யும் கொரியர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஆனால் இந்த பௌத்த விகாரங்கள், இத்தகைய வசதிகளை அளித்து லாபம் ஈட்டுவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

"நிச்சயமாக கவலைகள் உள்ளன... ஆனால் நன்மைகள் அவற்றை விட அதிகமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்," என்று ஹைராங் சுனிம் கூறினார்.

''பெரும்பாலும் இளைஞர்கள் புத்த மத போதனைகளை நாடி வருவதைக் காண்பது அரிது. அவர்கள் கோவிலில் தங்குவதன்மூலம் மற்றவர்களுடன் ஏற்படும் தொடர்பு காரணமாக அதிக நன்மைகளை பெறுகிறார்கள்."

அடிப்படை மாற்றத்தின் தேவை

லீ ஹை-ரி, வேலையில் அழுத்தம் அதிகமானபோது, அப்படிப்பட்ட 'புத்தமத விடுமுறை தங்கலில்' கலந்துகொண்டார். தனது மன அழுத்தத்திற்குப் பொறுப்பேற்க கற்றுக்கொண்டதாக அவர் கூறுகிறார்.

''எல்லாமே என்னிடமிருந்து தொடங்குகிறது, எல்லா பிரச்சனைகளும் என்னிடமிருந்து ஆரம்பிக்கின்றன. அதைத்தான் நான் இங்கு கற்றுக்கொண்டேன்.''

ஆனால் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மைக்கான தீர்வை தனிப்பட்ட அளவில் கையாள்வது சிக்கலாக இருக்கலாம்.

சுரண்டல் வேலை கலாச்சாரம் மற்றும் சமூக அழுத்தங்களால் பிரச்சனை ஏற்படுகிறது என்று நம்புபவர்கள், 'இந்த தனிமனித அணுகுமுறை' பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டுவதற்கு சமம் என்று விமர்சித்துள்ளனர். தியானம் அல்லது ஓய்வெடுப்பது ஒரு ஒட்டும் பிளாஸ்டர் போன்றது என்றும் சமூகத்தில் அடிப்படை மாற்றங்களால் மட்டுமே உண்மையான தீர்வுகள் வரும் என்றும் இந்த விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ஜி-யூன் இறுதியில் தூக்கமின்மையால் பெருமளவு பாதிக்கப்பட்டு, தனது வேலையை விட்டு விலகினார். இந்த நாட்களில் அவர் ஒரு ஃப்ரீலான்ஸராக முன்பிருந்த நிலையை ஒப்பிடும்போது குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு வேலை செய்கிறார் . தொற்றுநோய் காலகட்டம் அவரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தது. அவர் தனது தூக்கமின்மையை கட்டுப்படுத்த டாக்டர் லீயின் தூக்க கிளினிக்கில் தொழில்முறை உதவியையும் நாடியுள்ளார்.

"நாம் ஒரு நாடாக மிகவும் முன்னேறிவிட்ட நிலையில், இப்போது இத்தனை கடினமாக உழைக்க வேண்டிய தேவை உள்ளதா என்ன? நாம் சிறிதே நம்மை தளர்த்திக்கொள்ள முடியும்," என்கிறார் ஜி-யூன்.