திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (21:00 IST)

காஷ்மீரில் பொதுமக்களுடன் கலந்து சமூக விரோதிகள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள்: இந்திய உள்துறை அமைச்சகம்

காஷ்மீரின் செளரா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறி சம்பவம் நடந்ததாக இந்திய அரசு இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், கடந்த ஒன்பதாம் தேதி மத்திய அரசுக்கு எதிராக மக்கள் ஸ்ரீநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பிபிசி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி மற்றும் காணொளியை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் செய்தி பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், "கடந்த ஒன்பதாம் தேதி ஸ்ரீநகரில் செளரா எனும் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அன்றைய தினம், மசூதியில் தொழுகையில் ஈடுபட்டுவிட்டு வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த உள்ளூர் மக்களுடன் சில சமூக விரோதிகளும் கலந்துவிட்டனர். அமைதியின்மையை ஏற்படுத்த, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

"இருப்பினும் பாதுகாப்பு படையினர் பொறுமையுடன் செயல்பட்டு, நிலைமையை கட்டுப்படுத்தி சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு முயற்சி செய்தனர். இந்நிலையில், அரசமைப்பு சட்டப்பிரிவு 370 தொடர்பான விவகாரம் தொடங்கியதிலிருந்து ஜம்மு காஷ்மீரில் இதுவரை ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்" என்று அந்த ட்விட்டர் பதிவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த குறிப்பில், அத்தகைய செய்திகள் தவறானவை, ஜோடிக்கப்பட்டவை எனத் தெரிவித்திருந்தது. முதலில் ராய்டர்ஸ் வெளியிட்டு, பிறகு டான் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தியில், ஸ்ரீநகரில் நடந்த போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக தெரிவித்திருந்தது. ஆனால், ஸ்ரீநகர்/பாரமுல்லாவில் ஒரு சில சம்பவங்கள் நடந்தன. அத்தகைய சம்பவங்கள் எதிலும் இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவில்லை" எனத் தெரிவித்திருந்தது.

"கடந்த ஆறு நாட்களில் காவல்துறை ஒரு புல்லட்டைக்கூட சுடுவதற்காக பயன்படுத்தவில்லை. போலியான மற்றும் உள்நோக்கங்களைக் கொண்ட செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்" என்று ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்திருந்தது.

மக்கள் முதிர்ச்சியுடன் நடந்துகொண்டு, காவல்துறை மற்றும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்ரீநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இம்தியாஸ் ஹுசேன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஆனால், கடந்த வெள்ளியன்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைக் கலைக்க காவல் துறையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது தொடர்பான காணொளியை பிபிசி வெளியிட்டிருந்தது. அதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.