வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:46 IST)

மோப்பம் பிடிக்கும் டூத் பிரஷ் உங்கள் புற்றுநோயைக் கண்டுபிடிக்கலாம்!

பொது இடங்களில் மணம் கமழச்செய்வதற்காக நாம் அணியும் வாசனை திரவியங்களில் இருந்து டியோடரன்ட் வரை, நமது வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவால் புரட்சிகரமாக்கப்பட இருக்கும் சமீபத்திய ஒன்றாக முகர்ந்து உணரும் (Smell) திறன் இருக்கக்கூடும்.
 
புதிய நறுமணப் போக்குகளை அடையாளம் காணவும், முன்பை விட வேகமாக அவற்றை தயாரிக்கவும், விரிவான தரவு மற்றும் அதிவேக கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
செயற்கை நுண்ணறிவின் மோப்பப் புரட்சியின் மறுமுனையில், ஒரு தொழில்நுட்பம் உருவாகி வருகிறது. இது நோய்களை அவற்றின் ஆரம்ப கட்டங்களில் கண்டறிந்து, நாம் ஆரோக்கியமாக இருக்கவும் நீண்ட காலம் வாழவும் உதவக்கூடும்.
 
நாம் போட்டுக் கொள்ளும் வாசனைத் திரவியங்கள் முதல் நோய்களை கண்டறியும் விதம் வரை அனைத்தின் மீதும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் ஏற்பட உள்ளது.பிரச்சனைகளை முகர்ந்து கண்டறிதல்
 
'ஆரிபேல்' என்ற வளரும் நிறுவனம், வாசனை நம்மை எப்படி பாதிக்கக்கூடும், நம் ஆரோக்கியத்தைப் பற்றி அது என்ன சொல்ல முடியும் என்பதை அறிய ஆய்வு செய்கிறது.
 
வாசனையை செயற்கையாக உணர்தல் என்பது எளிதானதல்ல. ஒளி அல்லது ஒலி ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தைக் கொண்டிருக்கும் போது, ​​வாசனையை அளவிட மற்றும் அதன் செறிவை அறிய எளிதான வழி இல்லை.
 
ஆகவே இந்த பிரெஞ்சு நிறுவனம் , நம் மூக்கு முகர்ந்து அறியும் மூலக்கூறுகளை உணரவும், நம் மூக்கு உணராத பல வாயுக்களான ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்றவற்றைப் புறக்கணிக்கவும், சிலிக்கான் சில்லுகளில் பொருத்தப்பட்டிருக்கும் புரதங்களின் துண்டுகளைப் பயன்படுத்துகிறது.
 
"நீங்கள் ஒரு வாசனையை அறிவியல் ரீதியாக விவரிக்க முடியாது என்பதால் உங்களுக்கு செயற்கை நுண்ணறிவு தேவை" என்று அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் கியும் கூறுகிறார்.
 
"நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம், 'இது சீஸ், இது ஸ்ட்ராபெர்ரி, இது ராஸ்பெர்ரி' என்று இயந்திரத்திற்கு கற்பிப்பது மட்டுமே."என்கிறார் அவர்.
 
பெருந்தொற்றுக்குப் பிறகு மக்கள் தங்கள் சுற்றுப்புறம் பற்றி விழிப்புடன் இருக்கும் நிலையில், அது இனிமையாக இருப்பதை உறுதிசெய்ய, நாம் நேரத்தை செலவிடும் இடங்களைக் கண்காணிப்பதில் தொழில்நுட்பம் ஒரு பங்கை வகிக்க முடியும்.
 
முகர்ந்து உணரும் திறன் (Smell) மூலம் சில நோய்களைக் கண்டறிய முடியும் என்று பல ஆண்டுகளாக அறியப்படுகிறது. ஹெல்சின்கி விமான நிலையம் கடந்த ஆண்டு பயணிகளிடையே கோவிட் தொற்றை அடையாளம் காண மோப்ப நாய்களைப் பயன்படுத்தி ஒரு சோதனையை நடத்தியது.
 
தினசரி அடிப்படையில் நோயின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் கண்டு, நமது ஆரோக்கியத்தை கண்காணிக்கும் தயாரிப்புகளை உருவாக்க இந்தக்கோட்பாடு வழிவகுக்கும்.
 
"நான் பல் துலக்கும்போது, என் ப்ரஷ்ஷில் வாசனை பிடிக்கும் சென்சார் இருந்தால், அது என் ஆரோக்கியத்தை மதிப்பிடக்கூடும்," என்று கியும் கூறுகிறார்.
 
"இது நீரிழிவு நோயின் அறிகுறி ... இது புற்றுநோயின் அறிகுறி." என சென்சார் சொல்ல முடியும்.
 
நோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் என்பது எந்த தீவிர அறிகுறிகளும் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, சூழ்நிலையை திறம்பட கையாளும் வாய்ப்புகளை பெருமளவில் மேம்படுத்தும்.
 
நோய்கண்டறியும் டூத் ப்ரஷ் போன்ற AI ஆல் இயங்கும் ஸ்மார்ட் கருவிகள் பயன்பாட்டிற்கு வரக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கியும் கூறுகிறார்.
 
"வருமா' என்ற கேள்வியே இல்லை, அது 'எப்போது வரும்' என்கிற கேள்விதான் உள்ளது" என்று அவர் கூறுகிறார்.
 
நறுமண அறிவியல்
புதிய வாசனை திரவியங்களை உருவாக்கவும் AI பயன்படுத்தப்படுகிறது.
 
"நான் நான்கு வயதிலிருந்தே வாசனை திரவிய பைத்தியமாக இருந்தேன். இது சொல்வதற்கே வெட்கப்படும்படியான இளவயது," என்கிறார் மரியா நூரிஸ்லாமோவா.
 
"நான் என் அம்மாவின் வாசனை திரவியத்தை திருடுவேன். ஒவ்வொரு முறையும் அது அவருக்குத் தெரியும்,"என்கிறார் அவர்.
 
வாசனை திரவியத்தின் மீதான அந்த ஆரம்பகால காதல் நூரிஸ்லாமோவாவை ஒரு அமெரிக்க தொடக்க நிறுவனமான 'சென்ட்பேர்ட்' ஐ ஒரு இணை நிறுவனராக உருவாக்க வழிவகுத்தது. இது ஒவ்வொரு மாதமும் சந்தாதாரர்களுக்கு வெவ்வேறு உயர்தர வாசனை திரவியங்களை அனுப்புகிறது.
 
"ஆனால் தொழில்நுட்பம் எனது இரண்டாவது ஆர்வம்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
நிறுவனம் தங்கள் சொந்த யூனிசெக்ஸ் வாசனை திரவியங்களைத் தொடங்க முடிவு செய்தபோது, ​​அவர்கள் 3,00,000 சந்தாதாரர்களிடமிருந்து வந்த விமர்சனங்களை பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர்.
 
இந்த பிரிவில் உள்ள பெரும்பாலான வாசனை திரவியங்கள், ஒரு பாலினத்தால் நேசிக்கப்படுகின்றன மற்றும் மற்றொரு பாலினம் அதை வெறுமனே பொறுத்துக்கொள்கிறது என்பது தாங்கள் தீர்க்கவேண்டிய பிரச்சனை என்று நூரிஸ்லாமோவா கருதினார்.
 
"பாலின நடுநிலை கடினமானது," என்று அவர் விளக்குகிறார். ஆனால் ஒவ்வொரு பாலினத்தாலும் சமமாக பாராட்டப்பட்ட 12 வாசனை குறிப்புகளை அவர்களின் ஆராய்ச்சி அடையாளம் கண்டுள்ளது. மேலும் இவை Confessions of a Rebel range என்ற வாசனை திரவிய வகையை உருவாக்க பயன்படுத்தப்பட்டன. இது தற்போது அவர்களின் சிறந்த விற்பனையாகும் வாசனை திரவியங்களில் முதல் 3 சதவீதம் ஆகும்.
 
"Confessions of a Rebel range என்பது, குச்சி அல்லது வெர்சேஸ் போன்ற அங்கீகரிக்கப்பட்ட பிராண்ட் அல்ல. ஆனால் இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட தரவுகள் தான் இதற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன்," என்று நூரிஸ்லாமோவா கூறுகிறார்,
 
சென்ட்பேர்ட் இன்னும் அதிக வாசனை திரவியங்களை உருவாக்க இந்த ஆராய்ச்சியைப் பயன்படுத்துகிறது. மேலும் இந்த ஆண்டு இரண்டு புதிய வகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
 
ஆனால் வாசனை பிரிவில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஒரே நிறுவனம் இது மட்டும் அல்ல.
 
உணர்ச்சித் தாக்கம்
'இண்டர்நேஷனல் ஃப்ளேவர்ஸ் அண்டு ஃப்ராக்ரன்ஸஸ்' (IFF), வாசனை திரவியங்களை உருவாக்க AI ஐப் பயன்படுத்துகிறது. ஆனால் வாசனை நம்மை பாதிக்கும் விதத்தை அது ஆழமாக ஆராய்கிறது.
 
கடைகளில் இந்த பன்னாட்டு நிறுவனத்தின் பெயரை நீங்கள் பார்க்க மாட்டீர்கள். ஆனால் அர்மானி, கால்வின் க்ளெயின் மற்றும் கிவென்சி போன்ற முக்கிய நிறுவனங்களுடன் வாசனை திரவியங்களை உருவாக்க, இது திரைக்குப் பின்னால் வேலை செய்கிறது.
 
வாசனை திரவியங்களை உருவாக்குவதில் ஐஎஃப்எஃப் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் சுமார் 2,000 மூலப்பொருட்களில் இருந்து 60 முதல் 80 ஐ மட்டுமே அவர்கள் பயன்படுத்துகின்றனர். படைப்பு செயல்முறையை விரிவாக்கிட AI உண்மையில் உதவுகிறது.
 
"செயற்கை நுண்ணறிவு ஒரு கருவி. இது கூகுள் வரைபடம் போன்றது. வாசனை திரவிய தயாரிப்பாளருக்கு சிக்கலான வழிகளை கடந்து சென்று படைப்புகளை உருவாக்கிட இது பெரிதும் உதவுகிறது," என்கிறார் இந்த நிறுவனத்தின் வாசனை திரவிய பிரிவின் தலைவர் வேலரி க்ளாவோ .
 
ஐஎஃப்எஃபின் வேலைகள் நறுமணத்திற்கு அப்பால் நாம் சந்திக்கும் அன்றாட வாசனைகளிலும் உள்ளது. அதாவது சலவை பொடிகள், துணி மென்மையாக்கிகள், ஷாம்புகள் போன்றவை. கோவிட் தொற்றுநோய் காலத்தில் மக்களின் விருப்பங்கள் மாறிவிட்டன.
 
"சுத்தம் மற்றும் புதியது' என்பதிலிருந்து நகர்ந்து, 'கவனிப்பு, பாதுகாப்பு, பேணிக்காத்தல்'போன்ற கூடுதல் கூறுகளை மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் வசதியாக உணர விரும்புகிறார்கள், கவனிப்பை விரும்புகிறார்கள்," என்று க்ளாவோ தெரிவித்தார்.
 
மக்களின் மனநிலை மற்றும் உணர்வுகளில் நறுமணம் ஏற்படுத்தும் விளைவின் மீது நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது.
 
அதனுடைய "மகிழ்ச்சிக்கான அறிவியல்" திட்டம் , செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மகிழ்ச்சி, ஓய்வு, மனநிறைவு மற்றும் சுயமரியாதையைத் தூண்டும் வாசனை திரவியங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
நரம்பியல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதன் மீதும் அவர்களின் ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது.
 
"வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் என்று பார்க்கும்போது, " அல்ஸைமரைப் பொறுத்தவரை, காட்சிகள், வாசனை போன்ற உணர்வுகள் நேர்மறையான பங்கை வகிக்க முடியும் என்பதை நாம் அறிவோம்." என்று வேலரி குறிப்பிட்டார்.
 
"இது நோயை குணப்படுத்தாது என்றாலும், மூளையைத் தூண்டுவதன் மூலம் தாக்கத்தை மெதுவாக்க உதவிடும்," என்கிறார் அவர்.