செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (13:53 IST)

ஆபத்தில் இருந்து தப்ப மனிதர்களை ஏமாற்றும் ரேட்டில் ஸ்னேக் வகை பாம்புகள்

ஆபத்தில் இருந்து தப்புவதற்காக ரேட்டில் ஸ்னேக் வகை பாம்புகள் மனிதர்களை ஏமாற்ற ஒரு தந்திரமான முறையைக் கையாள்வதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 
ஒலிப் பாம்புகள் என்று அறியப்படும் இந்த வகைப் பாம்புகள் அமெரிக்க கண்டங்களில் பெரும்பான்மையாக வாழ்கின்றன. அதிகமான ஒலி எழுப்புவதன் மூலம் அவை மனிதர்களிடமிருந்து இருக்கும் தூரத்தை விட மிகவும் குறைவான தூரமே இருப்பதாக அவர்களை நம்ப வைத்து ஆபத்திலிருந்து தப்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
ரேட்டில் பாம்புகள் எப்படி தந்திரமாக மனிதர்களை ஏமாற்றுகின்றன?
மனிதர்கள் இந்த வகை பாம்புகளை நெருங்க நெருங்க அவை தங்கள் வாலை ஆட்டுவதன் மூலம் உண்டாகும் ஒலி அதிகமாகிக்கொண்டே போகும். பின்னர் திடீரென்று அந்த ஒலியின் அலைவரிசை மிகவும் அதிகமாகும்.
 
இவ்வாறு அதிக அலைவரிசை உடைய ஒலியைக் கேட்டவர்கள் பாம்பு தங்களிடமிருந்து இருக்கும் தூரத்தை விட மிகவும் நெருக்கமாக இருப்பதாகவே கருதியதாக இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்கள் தெரிவித்தனர். இத்தகைய நடத்தை மனிதர்களிடமிருந்து மிதி படாமல் இந்த பாம்புகள் தப்பிக்க உதவுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
 
ரேட்டில் வகை பாம்புகள் ஒலி எழுப்புவது எப்படி?
இந்த வகை பாம்புகளின் வால் நுனியில் இருக்கும் கெரட்டின் (keratin) வளையங்கள் வேகமாக அசைக்கப்படும்போது இந்த ஒலி உண்டாகிறது. மனிதர்களின் விரல் நகங்கள், முடி உள்ளிட்டவையும் இதே கெரட்டின் புரதத்தால்தான் உண்டாக்கியுள்ளன.
 
தமது வாலில் உள்ள தசைகளை ஒரு நொடிக்கு சுமார் 90 முறை அசைக்கும் இந்த பாம்பின் தன்மை, ஆபத்தாக உணரவைக்கும் ஒலியை உண்டாக்க வைக்கிறது. இவ்வாறு அச்சுறுத்தும் வகையில் இந்த பாம்புகள் தங்களது வாலை அசைக்கக் காரணம் விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் தங்களது இருப்பை காட்டிக் கொள்வதற்காகவே.
 
இந்த பாம்புகளின் ஒலி அலைவரிசை மாறும் என்று பல்லாண்டுகளுக்கு முன்பே ஆய்வாளர்களுக்கு தெரியும். ஆனால் அதன்மூலம் ஒலியின் அளவும் அதிகரிக்கும் என்பது குறித்து மிகவும் குறைவான ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டிருந்தன.
 
மனிதர்கள் நெருங்கும்போது ரேட்டில் பாம்புகள் என்ன செய்தன?
ஆஸ்திரியாவில் உள்ள கார்ல் - ஃபிரான்சன்ஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் மனித உருவம் ஒன்றை வெஸ்டர்ன் டையமன்ட்பேக் ரேட்டில் வகை பாம்பு ஒன்றின் அருகே கொண்டு சென்று அதற்கு அந்த பாம்பு எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்று கண்காணிக்கப்பட்டது.
 
ஒருபொருள் இந்தப் பாம்புக்கு அருகே செல்லும்போது அதன் ஒலி அலைவரிசை சுமார் 40 ஹெர்ட்ஸ் அளவுக்கு அதிகரிக்கிறது. 60 ஹெர்ட்ஸ் அளவுக்கு இருந்த இந்த ஒலி அலை வரிசை மனித உருவம் அருகே சென்றதும் சுமார் 100 ஹெர்ட்ஸ் அளவுக்கு சென்றது.
 
இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிவதற்காக மனிதர்கள் மற்றும் மெய்நிகர் பாம்பு ஒன்றை கொண்டு ஆய்வாளர்கள் இந்த ஆய்வைத் தொடர்ந்தனர். இந்த ஒலி அலை வரிசை அதிகமாவது ஒலியின் அளவே அதிகமாவது போல ஆய்வின் பங்கேற்பாளர்களுக்கு தெரிந்தது.
 
திடீரென அதிக அலைவரிசைக்கு மாறுவது அந்த ஒலியை கேட்பவர்களை ஏமாற்றுவதற்கான ஒரு தந்திரமான சமிக்ஞை என்று இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான போரிஸ் சாக்னாட் தெரிவித்தார்.
 
மனித செவிப்புலன் அமைப்பை பாம்புகள் பயன்படுத்துவது எப்படி?
உண்மையான தூரத்தை விட மிகவும் நெருக்கத்தில் பாம்பு இருப்பதாக மனிதர்கள் உணர்வது ஒரு பாதுகாப்பான எல்லைக் கோட்டை உருவாக்க வைக்கிறது என்று போரிஸ் கூறுகிறார். ஒலியின் அளவு அதிகரித்தால் அந்த ஒலியை உண்டாக்கும் பொருள் வேகமாக நகர்கிறது அல்லது மிகவும் அருகில் இருக்கிறது என்று கருதும் மனித செவிப்புலன் அமைப்பை இந்த பாம்புகளின் நடத்தை பயன்படுத்திக் கொள்கிறது என்று இந்த ஆய்வில் பங்கேற்ற அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.