திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (11:19 IST)

ஆஃப்கன் அதிர்ச்சி: 'வீடு வீடாகச் சென்று எதிரிகளைத் தேடும் தாலிபன்கள்'

நேட்டோ படைகள் மற்றும் முன்னாள் ஆஃப்கன் அரசிற்காக பணியாற்றியவர்களை தேடும் பணியில் தாலிபன் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

வீடு வீடாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் தாலிபன்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அச்சுறுத்தி வருகின்றனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.
 
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய கடும்போக்கு இஸ்லாமியவாத குழுவான தாலிபன், தாங்கள் பழிவாங்கும் செயலில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்திருந்தது.
 
இருப்பினும் தாலிபன்கள் தங்களின் நிலையிலிருந்து மாறியிருக்க வாய்ப்பில்லை என்ற அச்சமே நிலவுகிறது.
 
இந்த தேடுதல் வேட்டை குறித்து, நார்வேயை சேர்ந்த உலகளாவிய பகுப்பாய்வு மையமான RHIPTO மையம் வெளியிட்டுள்ள ரகசிய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
 
இந்த மையம் ஐ.நாவிற்கு உளவு செய்திகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
"தாலிபன்களால் பலர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். அச்சுறுத்தல்கள் தெளிவாக தெரிவிகின்றன," என இந்த அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர் கிறிஸ்டியன் நீல்மன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 
அவர்கள் தேடும் நபர்கள் கிடைக்காவிட்டால், அவர்களின் குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தி தண்டிப்பார்கள். தாலிபன்களின் கருப்பு பட்டியலில் இருக்கும் எந்த ஒரு தனிநபருக்கும் அதிக ஆபத்து உள்ளது. கூட்டாக மரண தண்டனைகளும் வழங்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
வெளிநாடுகள் தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை திரும்பி அழைத்துவர தொடர்ந்து முயன்று வருகின்றன. காபூல் விமான நிலையத்திலிருந்து கடந்த ஐந்து நாட்களாக 18 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர் என நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
வெளிநாட்டு ஆயுதப் படைகளுக்கான முன்னாள் மொழிபெயர்ப்பாளர்கள் உட்பட மேலும் 6 ஆயிரம் பேர் தங்கள் நாடுகளுக்கு செல்ல தயாராகவுள்ளனர். இந்த வார இறுதியில் மீட்புப் பணிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே இலக்கு என அந்த நேட்டோ அதிகாரி தெரிவித்தார்.
 
காபூல் விமான நிலையத்தில் பதற்றமான சூழலே காணப்படுகிறது. ஆப்கானிஸ்தாலிருந்து தப்பிக்கும் மக்களை தாலிபன்கள் தடுத்து வருகின்றனர். கடந்த ஞாயிறன்று தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றினர். வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து பின்வாங்கிய நிலையில், நாடு முழுவதும் ஆக்கிரமிக்க தொடங்கினர் தாலிபன்கள்.
 
20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்க தலைமையிலான படையால் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட தாலிபன்கள் தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ளனர்.
 
இதற்கு முன்பு தாலிபன்கள் அதிகாரத்தில் இருக்கும்போது பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தியுள்ளனர்.
 
பொதுவெளியில் மரணதண்டனை வழங்குவது, பெண்களை பணியிடங்களுக்கு செல்லவிடாமல் தடுத்தது போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.
 
இருப்பினும் அதிகாரத்தை கைப்பற்றியபின் அளித்த முதல் செய்தியாளர் சந்திப்பில், "பெண்களின் உரிமைகள் ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு காக்கப்படும்," என தாலிபனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
 
இருப்பினும் தாலிபன் அமைப்பு இதுவரை எந்தவிதமான நடைமுறைகள் பின்படுத்தப்படும் என தெளிவாக கூறவில்லை.
 
மேலும் பெண்கள் புர்கா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தப் போவதில்லை என தாலிபன்கள் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தலையை மறைக்கும் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.
 
கடந்த முறை தாலிபன்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பெண்கள் பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை. பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. எட்டு வயதிலிருந்து பெண்கள் புர்கா அணிய வேண்டும் என்ற விதிகள் இருந்தன.
 
மேலும் ஏதேனும் ஆண் குடும்ப உறுப்பினரின் துணையுடனேயே பெண்கள் வெளியே வரவேண்டும். இதை மீறும் பெண்களுக்கு பொதுவெளியில் கசையடி வழங்கப்படும்.
 
மேலும் அவர்கள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தங்களுக்கு எந்த எதிரிகளும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினரின் முன்னாள் உறுப்பினர்களுக்கும், வெளிநாட்டு படைகளில் பணியாற்றியவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பல்வேறு வெளிநாட்டு அதிகாரிகளும், ஆப்கானியர்கள் பலரும் சந்தேகத்தில் உள்ளனர். நேர்காணல் ஒன்றில் தாலிபன்கள் மாறிவிட்டனரா என்று கேள்வி எழுப்பியதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களில் தாலிபனுக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தலைநகர் காபூலில் ஆப்கானிஸ்தான் கொடியை ஏந்தி பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.