1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (13:38 IST)

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு - நடந்தது என்ன?

ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதாக, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
நிகழ்ச்சியில் ஒன்றில் ஷின்சோ அபே உரையாற்றியபோது, அவரை பின்புறத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டதாகவும், இதனால் அவர் காயமடைந்ததாகவும் என்.ஹெச்.கே ஊடகம் தெரிவிக்கிறது. சுட்ட நபரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் ஜப்பானின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
டோக்கியோவின் முன்னாள் ஆளுநர் யோய்ச்சி மசுசோ தனது ட்விட்டர் பக்கத்தில், ஷின்சோ அபே இதய மற்றும் மூச்சு செயலற்ற (Cardiopulmonary arrest) நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
 
ஷின்சோ அபேவின் சகோதரர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் சற்று முன்னர் பேசியபோது, "முன்னாள் பிரதமருக்கு தற்போது மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டு வருகிறது, அவரது உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.
 
தற்சமயம் ஜப்பான் அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் நோபுவோ கிஷி, துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும், இந்தத் தாக்குதல் மன்னிக்க முடியாத செயல் என்று கூறினார்.
 
ஷின்சோ அபே கழுத்து மற்றும் மார்பில் சுடப்பட்டதாகவும், அவருக்கு உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.
 
ஜப்பானில் ஒருவரது மரணம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்த வார்த்தை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
 
கைத்துப்பாக்கிகள் தடை செய்யப்பட்டுள்ள ஜப்பானில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் அரிதான ஒன்றாக கருதப்படுகிறது.
 
நடந்தது என்ன?
சாலையின் நடுவே ஷின்சோ அபேயை சுற்றி மருத்துவ ஊழியர்கள் திரண்டிருப்பது போன்ற சரிபார்க்கப்படாத வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நாரா நகரில் ஷின்சோ அபே உரையாற்றிய போது, நபர் ஒருவர் அவரை பின்புறத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாக, பிபிசி ஜப்பான் செய்தியாளர் ரூபெர்ட் விங்ஃபீல்ட்-ஹேயெஸ் தெரிவித்தார்.
 
அந்நபர் முதலில் சுட்டபோது அது ஷின்சோ அபேவை தாக்கவில்லை, ஆனால், இரண்டாவதாக சுட்டபோது அவருடைய பின்பகுதியை தாக்கியுள்ளது. இதில், உடலிலிருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் அவர் உடனேயே கீழே விழுந்துள்ளார்.
 
அதன்பின் அங்கிருந்த காவலாளிகள், தாக்குதல் நிகழ்த்திய நபரை பிடித்துள்ளனர், துப்பாக்கியால் சுட்டபின் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடவில்லை.
 
அவரிடமிருந்து போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து, அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக, என்.ஹெச்.கே ஊடகம் தெரிவிக்கிறது.
 
யார் இந்த ஷின்சோ அபே?
2012ஆம் ஆண்டு ஜப்பானின் பிரதமராக பதவியேற்ற ஷின்சோ அபே, 2020ஆம் ஆண்டு உடல்நலப் பிரச்னைகள் காரணமாக பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
 
ஜப்பானின் வரலாற்றில் நீண்டகாலம் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் ஷின்ஷோ அபே.
 
தனது இளம்வயதிலிருந்து பெருங்குடல் அழற்சியுடன் (Ulcerative colitis) போராடி வரும் ஷின்சோ அபே, கடந்த 2007ஆம் ஆண்டு இதே காரணத்தினால் பதவியிலிருந்து விலக நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தீவிர பழமைவாத மற்றும் தேசியவாதியாக அறியப்படும் அபே, தனது தனித்துவமான "அபெனோமிக்ஸ்" என்ற அழைக்கப்படும் ஆக்ரோஷமான பொருளாதாரக் கொள்கையுடன் வளர்ச்சியைத் தூண்டுவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளார்.