வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 நவம்பர் 2017 (14:06 IST)

பாலியல் வல்லுறவு, மாதவிடாயின்மை: வடகொரிய ராணுவத்தில் பெண்களின் கோர நிலை!!

உலகின் நான்காவது பெரிய ராணுவத்தில் ஒரு பெண்ணாக பணிபுரிவது அவ்வளவு சுலபமானது இல்லை. பல பெண்களுக்கு இளம் வயதிலேயே மாதவிடாய் நின்றுவிட்டது. அதுமட்டுமல்ல, அவருடன் ராணுவத்தில் பணியாற்றிய பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்கிறார் அந்த ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய்.

 
வட கொரியா ராணுவத்திலிருந்து தப்பி அண்டை நாடுகளில் அடைக்கலமான லீ சோ இயோனி மற்றும் வேறு சிலரின் நேர்காணல் தொகுப்பு. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு, லீ சோ இயோன், இருபத்தி நான்குக்கும் மேற்பட்ட பெண்களோடு, தனது ராணுவ பிரிவில் உள்ள படுக்கை அறையில் தங்கியிருந்தார்.
 
அங்கு ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கும் சீருடைகளை வைத்துக்கொள்ள ஒரு பெட்டி அளிக்கப்பட்டிருக்கும். அதற்கு மேல் இரண்டு புகைப்படங்கள் இருக்கும். ஒன்று, வடகொரியாவை நிறுவிய கிம் இல்-சுங் புகைப்படம். மற்றொன்று, தற்போதைய தலைவரின் தந்தையான கிம் ஜோங்-இல் புகைப்படம்.
 
ராணுவத்தைவிட்டு வெளியேறி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும், அங்கிருந்த நாட்களின் நினைவுகளையும், படைத் தளத்தின் வாசத்தையும் இன்னும் நினைவு கூர முடிகிறது.
 
நாங்கள் படுக்கும் படுக்கை, நெல் உமியைக் கொண்டு செய்யப்பட்டது. அவை பருத்தியால் செய்யப்பட்டவை அல்ல. அதனால் எங்கள் உடலிலிருந்து வரும் வேர்வையும் நாற்றமும் அதில் இருக்கும். அது இதமானது இல்லை.
 
துணிகளை துவைக்க போதுமான வசதிகளும் இல்லை. அதனால், எங்களினால் படுக்கையை முறையாக துவைக்க முடியும். இதுவும், இந்த நிலை ஏற்பட முக்கிய காரணம்.
எங்களால் சரியாக அங்கு குளிக்கவும் முடியாது. பெண்களாக இந்த விஷயம் எங்களுக்கு கடினமான ஒன்றாக இருந்தது என்கிறார் சோ இயோன்.
 
வெந்நீர் எங்களுக்கு வழங்கப்படவில்லை. மலைகளில் இருந்து வரும் நீரை ஒரு குழாய்போட்டு இணைத்திருப்பார்கள். அந்த நீர் குழாய் மூலம் எங்கள் இருப்பிடத்திற்கு வரும். தண்ணீர் மட்டும் வராது. அதனுடன் சேர்ந்து தவளைகள், பாம்புகள் கூட வரும்.
 
இயோன் பல்கலைக்கழக பேராசிரியரின் மகள். அவருக்கு தற்போது 41 வயதாகிறது. அவர் நாட்டின் வடக்குப் பகுதியில் வசிக்கிறார். அவரின் குடும்பத்தில் உள்ள ஆண்கள் பலரும் ராணுவத்தில் இருந்திருக்கிறார்கள். 
 
1990களில் பஞ்சம் அந்நாட்டை தாக்கிய போது, நிச்சயமாக தினசரி உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தாமாக முன்வந்து அவர் ராணுவத்தில் சேர்ந்தார். ஆயிரக்கணக்கான இதரப் பெண்களும் இதே காரணத்துக்காகவே ராணுவத்தில் சேர்ந்தனர். வடகொரிய பெண்கள் மோசமாக பாதிக்கப்பட இந்த பஞ்சம் காரணமாக அமைந்தது என்கிறார் ஜியூன் பேக். இவர்தான் 'வடகொரியாவின் மறைவான புரட்சி' நூலின் ஆசிரியர்.
 
இந்த காலக்கட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வேலை தேட தொடங்கினர். அதுபோல, வேலையில் சேர்ந்த பெண்கள் மோசமாக நடத்தப்பட்டனர். குறிப்பாக, துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகினர் என்கிறார் அவர்.
 
நான் ராணுவத்தில் பணியாற்றியவரை, மாதவிடாயை எதிர்கொள்வதற்கான எந்த வசதிகளும் ஏற்படுத்திதரப்படவில்லை. பயன்படுத்தப்பட்ட சானிடரி நாப்கின்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தினோம் என்கிறார் இயோன்.
 
`நார்த்கொரியா இன் 100 கொஸ்டீன்ஸ்` நூலின் ஆசிரியர் ஜூலியட் மோரிலாட், இந்த காலத்திலும் பெண்கள் மாதவிடாயின் போது பாரம்பரியமான வெள்ளை பருத்தி நாப்கின்களையெ பயன்படுத்துகிறார்கள். ஆண்கள் கண்களில்படாமல் இந்த நாப்கின்களை சுத்தம் செய்ய வேண்டும். அதனால், ஆண்கள் எழுவதற்கு முன்பாகவே எழுந்து அதனை துவைக்க வேண்டும்.
 
இருபது வயதுடைய இன்னொரு பெண் தான் அதிக நேரம் ராணுவ பயிற்சி மேற்கொள்வதாகவும். அதன்காரணமாக இரண்டு ஆண்டுகள் தனக்கு மாதவிடாய் தள்ளிப்போனதாகவும் கூறியதாகப் பதிவு செய்கிறார் மேரிலட்.
 
லீ சோ இயோன் சுயவிருப்பத்தின் காரணமாகதான் ராணுவத்தில் சேர்ந்தார். ஆனால், இப்போது வட கொரியா 18 வயதிலிருந்தே பெண்கள் அனைவரும் கட்டாயம் ஏழு அண்டு ராணுவ சேவையில் ஈடுபட வேண்டும் என்று 2015-ம் ஆண்டு வடகொரியா அரசு அறிவித்தது.
 
அதேநேரம், ராணுவ சேவையில் உள்ள பெண்கள், மாதவிடாயின்போது பயன்படுத்த சானிடரி நாப்கின் வழங்கப்படும் என்று அறிவித்தது. கடந்தகால நிலைமைகளுக்கு தீர்வு காண இப்படி அறிவித்து இருக்கலாம் என்கிறார் ஜியுன் பெக். 
 
கிம் ஜோங்- உன் 2016-ம் ஆண்டு, வட கொரிய அழகு சாதன பொருட்கள் சர்வதேச சந்தையை எதிர்கொள்ளும் தரத்தில் இருக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இதன் தொடர்சியாக, வட கொரிய அரசு தயாரிக்கும் ஒப்பனை பொருட்கள் விமானப்படையில் உள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டது.
 
ஊரக பகுதியில் பணியாற்றும் பெண் சிப்பாய்களுக்கு முறையான கழிப்பிட வசதி இல்லை. இதன் காரணமாக, அவர்கள் ஆண்களின் முன்னாள் தங்களது இயற்கை கடன்களை கழிக்க வேண்டி உள்ளது.
 
பாலியல் துன்புறுத்தல் ராணுவத்தில் உச்சத்தில் இருப்பதாக கூறுகிறார் மோரிலாட் .நம்மிடம் பேசிய மோரிலாட் சொல்கிறார், நான் பெண் சிப்பாய்களிடம் இதுக் குறித்து கேட்டபோது, அவர்கள் அனைவரும் பிறருக்கு நிகழ்ந்ததாக கூறினார்களே தவிர, யாரும் தான் நேரடியாக பாதிக்கப்பட்டதாக கூறவில்லை.
 
லீ சோ இயானும், தான் ராணுவத்தில் பணியாற்றிய 1992 -2001 காலக்கட்டத்தில் தன் சகாக்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக கூறுகிறார். ஆனால், அதே நேரம் தான் பாதிக்கப்படவில்லை என்கிறார்.
 
படை தலைவர் அவர் அறையில் தங்கி இருப்பார். அவரின் படையின் கீழ் பணியாற்றும் பெண்களை கற்பழிப்பார். இது ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது என்கிறார் அவர்.
 
வட கொரிய அரசு தான் இந்த பாலியல் குற்றச்சாட்டுகளை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எடுத்துக் கொள்வதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் கூறியது. ஆனால். எந்த பெண்ணும் வாக்குமூலம் அளிப்பது இல்லை. இதன் காரணமாக குற்றம் செய்தவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் தப்பிக்கிறார்கள் என்கிறார் ஜூலியட் மோரிலாட்.
 
மேலும் அவர், "வட கொரியா ஒரு ஆணாதிக்க சமூகம். அந்த ஆதிக்கம் ராணுவத்திலும் வேர்விட்டு இருக்கிறது. ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்து, கட்டுமான துறை, சிறிய படைத் தளங்கள் ஆகியவற்றில் பணி செய்பவர்களின் நிலை இன்னும் மோசம். அவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள்.
 
லீ சோ இயான், சார்ஜண்டாக ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தன் 28 வயது வயதில் ராணுவத்திலிருந்து விலகினார். குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுவதற்கென்று அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், ராணுவத்துக்கு வெளியே வாழ்க்கையை வாழ தாம் தயார்படுத்தப்படவில்லை என்று நினைத்த அவர், பொருளாதாரரீதியாகவும் சிரமப்பட்டார். 2008-ம் ஆண்டு அவர் தென் கொரியாவுக்கு தப்ப முடிவுசெய்தார்.
 
முதல் முயற்சியில் சீனா எல்லையில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனைக்கு உள்ளானார். சிறையிலிருந்து விடுதலையான சில நாட்களில் தன் இரண்டாவது முயற்சியை மேற்கொண்டார். டுமென் ஆற்றை நீந்தியே கடந்தவர், அங்கிருந்து தரகர்கள் மூலம் சீனா வழியாக தென் கொரியா சென்றடைந்தார்.
 
ஜூலியட் மொரிலோட்டும், ஜீயுன் பேக்கும் லீ சோ இயோன் சொன்ன வாக்குமூலங்கள் தப்பி வந்த மற்றவர்கள் சொன்னவற்றோடு ஒத்துப் போவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், வட கொரியாவில் இருந்து தப்பி வந்த பலர் தங்களுக்குத் தரப்படும் சன்மானத்துக்காக மிகைப்படுத்தப்பட்ட கதைகளை ஊடகங்களுக்கு இட்டுக்கட்டிக் கூறுகின்றனர் எனவே, தப்பி வந்தவர்களின் கதைகளை பதிவு செய்யும்போது எச்சரிக்கை தேவை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதே நேரம் அதிகாரபூர்வ வடகொரியத் தகவல்கள் வெறும் பிரசாரமாக மட்டுமே இருக்கின்றன.