திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 மே 2022 (14:33 IST)

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்காக ரகசியமாக நடத்தப்படும் பள்ளிகள் - நடப்பது என்ன?

பள்ளிக்கூடம் செல்லாமல் ஓடி ஒளியும் குழந்தைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு பள்ளிக்கூடமே ஒளிந்திருப்பதை கேள்விப்பட்டதுண்டா? தாலிபன்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் ஆப்கானிஸ்தானில் பெண்குழந்தைகளுக்காக நடைபெறும் ரகசிய பள்ளிக்கூடம் எப்படி இயங்குகிறது?
 
ஆப்கானிஸ்தானில், குடியிருப்பு பகுதிக்குள் ஒளிந்திருக்கும் இந்த இடம் ஒரு ரகசிய பள்ளிக்கூடம். தாலிபன்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அளவில் சிறிய அதேசமயம் சக்திவாய்ந்த நடவடிக்கை இது. இங்கு சுமார் 10க்கும் மேற்பட்ட பதின்பருவ பெண்கள் கல்வி பயில்கின்றனர். நாம் சென்றபோது அவர்கள் கணக்குப்பாடம் படித்துக்கொண்டிருக்கின்றனர்.
 
"இதைச் செய்வதில் இருக்கும் அபாயங்கள் எங்களுக்கு தெரியும். அதுகுறித்த கவலையும் உண்டு. ஆனால், பெண்களின் கல்விக்காக எவ்வளவு ஆபத்தையும் சந்திக்கலாம்" என்று பேசத்தொடங்குகிறார் அந்த பள்ளியை நடத்தும் ஒரே ஒரு ஆசிரியர். நாடு முழுக்க இருக்கும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளையும் பூட்டி தாலிபன்கள் உத்தரவிட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் நாம் சென்ற பள்ளியில், நம்மைக் கவரும்படியாக சில அம்சங்கள் இருந்தன. குறிப்பாக, வழக்கமான பள்ளிகளைப் போலவே மேஜைகளெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்தபடி, "சமூகத்துக்காக எங்களால் எவ்வளவு செய்யமுடியுமோ அதைச் செய்வோம். அதற்காக என்னை கைது செய்தாலும் அடித்தாலும் தாங்கிக்கொள்ளலாம்" என்கிறார் அந்த பெண் ஆசிரியர்.
 
கடந்த மார்ச் மாதம், பெண்களின் பள்ளிகள் திறக்கப்பட தயாராக இருந்தன. மாணவிகள் பள்ளிக்கு வரத்தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தாலிபன் தலைமை அவர்களது கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த ரகசியப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் உள்ளிட்ட பல பதின்பருவப் பெண்குழந்தைகளுக்கு இந்த வலி இன்னும் மாறவில்லை.
 
துணிவு இருந்தால் யாரும் தடுக்க முடியாது
இந்த தற்காலிக வகுப்பின் மாணவி ஒருவர் நம்மிடம் பேசும்போது, "2 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இது என்னை மேலும் மேலும் வருத்தப்படுத்துகிறது" என்று கண்ணீரை தடுக்கும் விதமாக தன் முகத்தை கைகளால் மறைத்தபடியே பேசினார், தாலிபன்களின் முடிவை எதிர்க்கும் மனநிலை அவர்களிடம் இருந்தது.
 
இந்த வரிசையில் 15 வயது சிறுமி ஒருவர் நம்மிடம் பேசியபோது " துணிவுடன் இருங்கள். நீங்கள் துணிவுடன் இருந்தால் யாரும் தடுக்க முடியாது" என்று ஆப்கானிஸ்தானில் வாழும் ஒட்டுமொத்த சிறுமிகளுக்கும் ஒரு செய்தியை கூறினார்.
 
ஏற்கனவே நாடு முழுக்க பள்ளிகள் பாலின வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது ஏன் என்பது யாருக்கும் விளங்கவில்லை. இந்த நிலையில், முதலில் சரியான "இஸ்லாமிய சூழலை" உருவாக்க வேண்டும் என்று தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
 
பெண்களுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தாலிபன் அதிகாரிகள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தாலும், பெண் கல்வி தங்களுக்கு ஒரு 'மிக முக்கியமான' பிரச்னை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளனர். 1990களில் முன்பு தாலிபான்களின் ஆட்சி நடைபெற்றபோது, `பாதுகாப்பு காரணங்கள்` என்று கூறி பெண் குழந்தைகள் பள்ளி செல்வது அப்பட்டமாக தடுக்கப்பட்டது.
 
பெண்களுக்கான பள்ளிகளை திறக்காமல் இருப்பது என்ற தாலிபன்களின் முடிவின் மீது தங்களுக்கு அதிருப்தி இருப்பதாக தாலிபன் உறுப்பினர்களே நம்மிடம் தெரிவித்தனர். மார்ச் மாதம் தாலிபன் அரசு இந்த முடிவை அறிவித்தபோது தாலிபன் கல்வி அமைச்சகமும் கூட அதிர்க்குள்ளாகியது. சில மூத்த தாலிபன் அதிகாரிகள் தங்கள் மகள்களை கத்தாரிலோ (அ) பாகிஸ்தானிலோ படிக்க வைக்கலாம் என்றும் கூட நினைத்துள்ளனர்.
 
பெண் கல்விக்கு அனுமதி உண்டு
தாலிபன்களுடன் தொடர்புடைய மத ஆய்வாளர்கள் சிலர், கடந்த சில வாரங்களில், பெண்களின் கல்விக்கு ஆதரவாக `ஃபத்வா`க்களை (இஸ்லாமிய சட்டப்படி வழங்கப்படும் ஆணை) வெளியிட்டுள்ளனர்.
 
ஆப்கானிய மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி, தாலிபன்களால் பெரிதும் மதிக்கப்படுபவர், பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பெஷாவரில் வசிக்கிறார். இவர் கடந்த மாதம் காபூல் சென்றபோது, அரசின் மூத்த அதிகாரிகளை சந்தித்தார்.
 
பள்ளிக்கூடங்களை மூடியது தொடர்பான தாலிபன்களின் முடிவு குறித்து ஏதும் விமர்சித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த இவர், பெஷாவரில் உள்ள தனது மதரசாவில் வைத்து தன் அலைபேசியின் சிலவற்றைக் காட்டியபடி பேசினார்.
 
குறிப்பாக, "பெண்கல்வி அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு ஷரியாவில் எந்தவிதமான சான்றும் இல்லை" என்று பேசியவர், "எல்லா மத நூல்களும் பெண் கல்வியை அனுமதிக்கின்றன. உதாரணமாக, ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய சூழல் இருக்கும் இடங்களில் ஒரு பெண் நோய்வாய்ப்பட்டால் அவருக்கு சிகிச்சை அளிப்பவர் ஒரு பெண்ணாக இருப்பது சிறந்தது" என்று தெரிவித்தார்.
 
இதே போன்ற ஃபத்வாக்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மற்றும் பாக்டியா மாகாணங்களில் உள்ள மதகுருக்களால் வெளியிடப்பட்டுள்ளன. பெண்களின் கல்விக்கு இப்போது நாட்டில் எவ்வளவு பரவலான ஆதரவு உள்ளது என்பதன் அடையாளமாகவே இந்த ஃபத்வாக்கள் பார்க்கப்படுகின்றன. ஆனால், பழமைவாத வட்டாரங்களிடையே இந்த ஆணைகள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
கடந்த ஆகஸ்டில் ஆட்சியை கைப்பற்றிய தொடக்கத்தில் ஆரம்பத்தில் மிகவும் நெகிழ்வான அணுகுமுறையைக் கடைப்பிடித்த தாலிபன்கள், சமீபகாலமாக பெண்களுக்கு முகத்திரையை கட்டாயமாக்குவது மற்றும் வீட்டிலேயே இருக்க ஊக்குவிப்பது உள்ளிட்ட கடுமையான ஆணைகளை பிறப்பித்து வருகிறது.
 
இது என் கடமை
சமூக ஊடகங்களில் அதிகப் பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு தாலிபன் உறுப்பினர், பெண்களுக்கான பள்ளிகளை மூடுவது மற்றும் அரசாங்க ஊழியர்களின் தாடியை வளர்க்கும் புதிய விதிகள் குறித்து விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். அவர் தலிபான் புலனாய்வுத் துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார், பின்னர் அவரது ட்வீட்களை நீக்கிவிட்டு தாடி குறித்த அவரது முந்தைய கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டார்.
 
மொத்தத்தில், ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கான எதிர்ப்பு மிகக் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. அதேசமயம், சில தாலிபன் பிரமுகர்கள், இன்னொரு பிரச்னை குறித்த கவலையையும் வெளிப்படுத்துகின்றனர். அதாவது பெண்கள் பள்ளிகள் திறக்கப்பட்டால், இஸ்லாமிய அரசுக் குழு அதனை ஒரு ஆட்சேர்ப்புக் கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதுதான் அவர்களது கவலையாக இருக்கிறது.
 
அதேபோல, மேற்கத்திய அதிகாரிகள், பெண்களின் உரிமைகளில் முன்னேற்றம் என்பது தலிபான்கள் உறைந்து கிடக்கும் பில்லியன் கணக்கான டாலர் வெளிநாட்டு கையிருப்புகளில் சிலவற்றை அணுகுவதற்கு முக்கியமானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.
 
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் ஒரு தலைமுறை மொத்தமும் பெண்கள் பின்தங்கிவிடக்கூடாது" என்பதற்காக பெண்கள் உரிமை ஆர்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். நாங்கள் பார்வையிட்ட இரகசியப் பள்ளியில், கணிதம், உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் பாடம் நடத்துகிறார்கள்.
 
இன்னும் பல பெண்கள் இதில் கலந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பது இந்த பள்ளியை நடத்தும் பொறுப்பாசிரியருக்கு தெரியும். ஆனால் இடமின்மை உள்ளிட்ட காரணங்க்களாலும் ரேடாருக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற காரணத்தாலும் அவர்கள் வருவதில்லை.
 
வழக்கமான பள்ளிகள் எந்த நேரத்திலும் திறக்கப்படும் என்ற நம்பிக்கை அவளுக்கு இப்போது இல்லை. ஆனால் தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். "எப்படியாயினும் ஒரு படித்த பெண்ணாக, இது என் கடமை. கல்வி இந்த இருளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.