வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (11:42 IST)

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக தமிழ்நாடு முழுவதும் மோசடி - நடந்தது என்ன ?

"எங்களை விமான நிலையத்துக்கு ஏற்றிச்செல்ல வண்டி வரும் என்றார்கள். ஆனால், ஏமாற்றம்தான் வந்தது" என்கிறார்கள், சிங்கப்பூர் வேலைக்காக சென்னை வருவதற்குத் தயாராக காத்திருந்த தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்து வந்த சொற்கள் இவை. நடந்தது என்ன?

சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளியில் அஃபார்ட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்கிற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் வேலைக்கு செல்பவர்கள், சமீபத்தில் கல்லூரி படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் அடங்குவர்.

"விளம்பரத்தை நம்பி ஏமாந்தோம்"

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவைச் சேர்ந்த பலரும் இந்த நிறுவனத்தில் வேலைக்காக பதிவு செய்து பணம் செலுத்தியுள்ளனர். கேரளா, பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில், "சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக அஃபார்ட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் பல இடங்களில் விளம்பரம் செய்திருந்தனர். தினசரி நாளிதழ்களில் கூட விளம்பரங்கள் வந்திருந்தன. அதை நம்பி தான் நான் உட்பட பலரும் விண்ணப்பித்திருந்தோம்.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் எல்.எஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்கிற கட்டுமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள். விண்ணப்பித்தவர்களின் தகுதிக்கேற்ப பொறியாளர், மேற்பார்வையாளர் எனப் பல வேலைகள் தருவதாக கூறியிருந்தார்கள்.

இதற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும், ரூ.1.5 லட்சத்தை முதல் தவனையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை சிங்கப்பூர் சென்ற பிறகு செலுத்திக் கொள்ளலாம் என்றார்கள். அஃபார்ட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனர் ராமமூர்த்தி, மேலாளர் மோகன், அலுவலக பணியாளர்கள் சரண்யா மற்றும் ஜோதி ஆகியோர் தான் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரை பலரும் கொடுத்திருந்தனர். சிலர் இணைய வழியாகவும், சிலர் ரொக்கமாகவும் பணம் செலுத்தியிருந்தனர். சரண்யா மற்றும் ஜோதி தான் அனைவருக்கும் தொடர்ந்து அழைத்துப் பேசினார்கள். ஆனால், கடந்த 6-ம் தேதியிலிருந்து ராமமூர்த்தி தான் அனைவரிடமும் பேசினார்.

சிங்கப்பூரில் என்.எஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனம் நிஜமாகவே உள்ளது. இணையத்தில் பார்த்து உறுதி செய்தோம். அந்த நிறுவனத்தின் சார்பில் வில்லியம் ஜார்ஜ் என்பவர் தான் விண்ணப்பித்தவர்களை சிங்கப்பூர் எண்ணில் தொடர்பு கொண்டு நேர்காணல் நடத்தினார். வாட்ஸ் ஆப் மூலமாக தான் அனைவரிடமும் பேசினார். அவர் எப்படி இருப்பார் என யாருக்கும் தெரியாது. சிங்கப்பூர் எண்ணாக இருந்ததால் உண்மையான எண்ணாக தான் இருக்கும் என நம்பினோம்.

என்.எஸ்.கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் சார்பில் வேலை உத்தரவாதம் செய்த கடிதம் கூட வழங்கினார்கள். எல்லாம் முறையாக நடப்பதை போலத்தான் இருந்தது. ஜுலை 15-ம் தேதி சிங்கப்பூர் செல்ல விமான டிக்கெட் கூட பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளையும் விட்டுவிட்டோம். ஆனால், விசா யாருக்கும் வழங்கப்படவில்லை. கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்தால் தான் விசா வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்கள்.

"பெயரைத் தவிர அனைத்தும் போலி"

சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக மூன்று நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் 10-ம் தேதி சென்னையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 8-ம் தேதி எங்களை அழைத்துச் செல்ல வாகனம் வரும் என்றிருந்தார்கள். ஆனால், எந்த வாகனமும் வரவில்லை. ராமமூர்த்தி மற்றும் அலுவலக எண்களை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் ஏற்பட்டு அவர்களுடைய அலுவலகம் சென்று பார்த்தபோது மூடப்பட்டிருந்தது. நால்வரும் தங்களுடைய செல்போன் எண்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். அப்போது தான் என்னைப் போல நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் பிறகு தான் அனைவரும் இணைந்து வந்து தற்போது புகார் அளித்துள்ளோம். காவல்துறையினர் இரண்டு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளனர். என்.எஸ்.கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் பெயரிலே போலியாக கடிதம், மின்னஞ்சல் முகவரி என அனைத்தும் தயார் செய்துள்ளனர்" என்றார்.

கவனம் தேவைமாவட்ட எஸ்.பி

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், "இந்த வழக்கை விசாரிக்க துணை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. புகார் அளித்தவர்கள் போக வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை.

முழுமையான தகவல்கள் கிடைத்த பிறகு தான் எத்தனை பேரிடம், எவ்வளவு தொகை மோசடி நடைபெற்றுள்ளது என்பது தெரியவரும். வேலைவாய்ப்பு மோசடிகள் பெரும்பாலும் பணம் பெற்று அரசு வேலை வாங்கி தருவது, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதை அடிப்படையாக வைத்து தான் நடைபெறுகின்றன.

வெளிநாட்டு நிறுவனங்கள் உண்மையிலே வேலைக்கு ஆட்கள் எடுக்கின்றவா என்பதை அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உறுதி செய்துகொள்ள வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் இது போன்ற மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பார்கள். அவ்வாறு இல்லையென்றால் சம்மந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு தகவல்களை உறுதி செய்து கொள்ளலாம்.

வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் தான் வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள். வேலை வாங்கி தருவதாக கூறும் முகவர்களிடம் உரிமம் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவற்றை செய்தாலே வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகளை தவிர்க்கலாம்" என்றார்.