விரைவில் பூஸ்டர் தடுப்பூசி இலவசம்..!? – அமைச்சர் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரமாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசி முகாம்களை தமிழ்நாடு சுகாதாரத்துறை நடத்தி வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “இன்று மாலை 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் 3 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்க கேட்டு வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்”என கூறியுள்ளார்.