புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (14:18 IST)

இமய மலையின் ரூப் குண்ட் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'

இந்தியாவில் இருக்கும் உயரமான இமயமலைப் பகுதி ஒன்றில், பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் ஓர் ஏரி அமைந்திருக்கிறது. அந்த ஏரியில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகள் சிதறிக்கிடக்கின்றன.

ரூப்குந்த் எனும் ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 5,029 மீட்டர் உயரத்தில், திரிசூல் என்கிற மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் உயரமான மலைத் தொடர்களில் ஒன்றான இது, உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கிறது.

ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பனிக்கட்டிகளுக்கு அடியிலும் எலும்புகள் சிதறிக் கிடக்கின்றன. இந்த ஏரியை கடந்த 1942-ம் ஆண்டு ரோந்துப் பணியில் இருந்த பிரிட்டிஷ் வன அதிகாரி ஒருவர் கண்டு பிடித்தார்.

காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து, பெரும்பாலும் உறைந்த நிலையில் இருக்கும் ஏரி சுருங்குகிறது அல்லது விரிவடைகிறது. இந்த ஏரியில் பனிக்கட்டி உருகும் போதுதான் எலும்புக் கூடுகள் தெரிகின்றன. சில நேரங்களில் தசையோடு அவ்வெலும்புகள் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இன்று வரை அந்த ஏரியில் சுமார் 600 - 800 பேரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உத்தராகண்ட் அரசு இந்த ஏரியை 'மர்ம ஏரி' என்றழைக்கிறது.
அரை நூற்றாண்டுக்கு மேல் மானுடவியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் இந்த எலும்புகளை ஆராய்ந்தனர். பல்வேறு கேள்விகளால் அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

யார் இந்த மக்கள்? அவர்கள் எப்போது இறந்தார்கள்? அவர்கள் எப்படி இறந்தார்கள்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

ஓர் இந்திய அரசர், அவரது மனைவி மற்றும் அரசப் பணியாளர்களுடன் 870 ஆண்டுகளுக்கு முன் பனிப்புயலில் சிக்கி இறந்து விட்டதாக ஒரு கதை இருக்கிறது.

இந்த ஏரியில் இருக்கும் சில எலும்புகள் இந்திய படையினர்களுடையது, 1841-ம் ஆண்டு திபெத்தை ஆக்கிரமிக்க நினைத்த இந்திய படையினர் தோற்கடிக்கப்பட்டார்கள். 70-க்கு மேற்பட்டவர்கள் இமய மலையிலேயே தங்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உண்டானது. அவர்கள் இமய மலையிலேயே இறந்துவிட்டார்கள் என மற்றொரு வாதம் இருக்கிறது.

ஒரு பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லறைப் பகுதியாக இந்த ஏரி இருந்திருக்கலாம் என மற்றொரு சாரார் கருதுகிறார்கள்.

இந்து கடவுளான நந்தா தேவி எப்படி இரும்பைப் போன்ற வலிமையான பனிப்புயலை உருவாக்கினார், அதனால் அந்த ஏரிப் பகுதியைக் கடந்து கொண்டிருந்தவர்கள் எப்படி இறந்தார்கள் என கிராம புறத்தில் ஒரு நாட்டுப் புறப் பாடல் இருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது உயரமான மலையான நந்தா தேவி, பெண் கடவுளராக கருதப்படுகிறார்.

ரூப் குண்ட் ஏரியில் இருக்கும் எலும்புகளை ஆராய்ந்தவர்கள், இப்பகுதியில் இறந்தவர்கள் பெரும்பாலும் உயரமானவர்கள், சராசரி உயரத்தை விட அதிக உயரமானவர்கள் எனக் கூறியது. அதோடு 35 - 40 வயது கொண்ட பெரும்பாலும் நடுத்தர வயதுடையவர்கள் எனக் கூறப்பட்டது. இந்த எலும்புகளில் குழந்தைகள் அல்லது சிறுவர்கள் இல்லை. சில எலும்புகள் வயதான பெண்களுடையது. அனைவருமே நல்ல உடல் நலத்தோடு இருந்தார்கள் எனக் கூறுகிறது.

இந்த ஒட்டுமொத்த எலும்புகளும் ஒரே இனக் குழுவைச் சேர்ந்த மக்களுடையவை எனவும், அவர்கள் ஒரே இயற்கைப் பேரழிவால் 9-ம் நூற்றாண்டில் இறந்ததாகவும் கருதப்பட்டது.

இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளின் 16 அமைப்புகளைச் சேர்ந்த 28 பேர் நடத்திய ஐந்து ஆண்டு கால நீண்ட ஆராய்ச்சி, மேலே குறிப்பிட்டவைகள் அனைத்தும் உண்மையாக இல்லாமல் போகலாம் எனக் கூறியுள்ளது.

அறிவியலாளர்கள் 15 பெண்கள் உட்பட 38 உடல்களில் மரபணு பரிசோதனையும், (இவற்றின் காலத்தைக் கண்டுபிடிக்க) 'கார்பன் டேட்டிங்' பரிசோதனையும் செய்தார்கள். அதில் சில எலும்புகள் 1,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கின்றன என்று தெரியவந்தது.

இந்த ஏரியில் இறந்து கிடப்பவர்கள் மரபணு ரீதியாக பன்முகத்தன்மை கொண்டவர்களாகவும், பல்வேறு காலகட்டங்களில் இறந்ததாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

"ரூப் குண்ட் ஏரியில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரே நிகழ்வில் மொத்த இறப்புகளும் நிகழவில்லை என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம்" என்கிறார் இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவரும் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்ட ஆய்வாளருமான இடாயின் ஹார்னே.

இந்த ஏரியில் இறந்து கிடப்பவர்களில் பல தரப்பட்ட மக்கள் இருப்பதாக, மரபணு ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. தெற்காசியாவில் இன்று வாழும் ஓர் இன மக்களின் மரபணுவை ஒத்து இருக்கிறது இந்த ஏரியில் இருக்கும் எலும்புகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஓரினம். அதே போல இந்த ஏரியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு இனத்தின் மரபணு, இன்றைய தேதியில் ஐரோப்பாவில் குறிப்பாக க்ரெடே என்கிற க்ரீக் தீவுகளில் இருப்பவர்களின் மரபணுவை ஒத்து இருக்கிறது.

தெற்காசியாவில் இருந்து வந்தவர்கள், ஒரே இனக் குழுவில் இருந்து வந்தது போல தெரியவில்லை.

"அதில் சிலரின் வம்சாவளி, வட இந்தியாவில் பொதுவாக காணப்பட்ட இனக் குழுவாகவும், மற்றவர்களின் வம்சாவளி, தெற்கில் வாழ்ந்த இனக் குழுக்களில் பொதுவாக காணப்பட்டதாகவும் இருக்கிறது" என ஹார்னே கூறுகிறார்.

ஆக, இந்த பலதரப்பட்ட இனக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், பல சிறு குழுக்கலாக இந்த ஏரிக்கு பல நூற்றாண்டு காலங்களில் பயணம் மேற்கொண்டார்களா? அதில் சிலர் ஒரே நிகழ்வில் இறந்தார்களா?

எந்தவித ஆயுதங்களோ, வணிக பொருட்களோ இந்த இடத்தில் காணப்படவில்லை. இந்த ஏரி வர்த்தக தடங்களில் இல்லை. இங்கு இருந்த எலும்புகளில் நடத்திய சோதனையில் நோய் உண்டாக்கும் பாக்டீரியா இருந்ததற்கான எந்த ஒரு சான்றும் கிடைக்கவில்லை என மரபணு சோதனை முடிவுகள் கூறுகின்றன. ஒருவேளை அது கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் நோய் வாய்ப்பட்டு இறந்தார்கள் எனக் கூறலாம்.

தற்போது அப்பகுதியில் இருக்கும் ஆன்மிகத் தளங்கள் 19-ம் நூற்றாண்டின் கடைசி வரை வெளியே தெரியவில்லை. ஆனால் உள்ளூர் கோயில்களில் இருக்கும் 8-வது மற்றும் 10-வது நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஆன்மிக தலங்கள் குறித்துக் கூறுகின்றன.

எனவே அந்த ஏரியில் இருக்கும் சில உடல்கள், ஓர் ஆன்மிக யாத்திரைப் பயணம் மேற்கொண்ட மக்களுடையதாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.

கிழக்கு மத்திய தரைக்கடலைச் சேர்ந்த மக்கள் எப்படி இந்தியாவின் உயரமான மலையில் இருக்கும் ரூப் குண்ட் ஏரிக்கு வந்திறங்கினார்கள்?

எதிர்பாராத விதமாக, ஐரோப்பிய மக்கள் இந்து ஆன்மிக தலங்களைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கலாம் அல்லது மரபணு ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட கிழக்கு தரைக்கடலைச் சேர்ந்த வம்சாவளி மக்கள் குழுவாக இருக்கலாம். அவர்கள் இந்தப் பிராந்தியத்தில் பல தலைமுறையாக வசித்து வந்தவர்களா? என பல கேள்விகள் இந்த விவகாரத்தில் எழுகின்றன.

"நாங்கள் இப்போதும் விடையைக் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் ஹார்னே.