செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (14:45 IST)

ஆஸ்திரேலியாவில் நிறைவேறிய சட்டம்: செய்திகளை பகிர கூகுள் மற்றும் ஃபேஸ்புக் கட்டணம் செலுத்த வேண்டும்

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளத்தில் செய்திகளைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்கிற சட்டத்தை ஆஸ்திரேலியா நிறைவேற்றியது.

'நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்' என்கிற சட்டத்தை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்த சட்டம் தொடர்பான விவகாரத்தில், கடந்த வாரம் ஃபேஸ்புக் தன்னுடைய தளத்தில், ஆஸ்திரேலியாவில் இருக்கும் பயனர்களுக்கு செய்திப் பதிவுகள் வராத வண்ணம் தடை விதித்தது. ஆனால் அரசுடனான பேச்சு வார்த்தைக்குப் பிறகு இந்த வாரத்தில் தன் முடிவை பின் வாங்கிக் கொண்டது ஃபேஸ்புக்.

அப்பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, அச்சட்டத்தின் முக்கிய நோக்கங்கள் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்குப் பொருந்தாது என சில சட்டத் திருத்தங்களோடு நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஒரு கணிசமான தொகையைச் சில ஆஸ்திரேலியச் செய்தி நிறுவனங்களுக்கு, இந்தப் புதிய சட்டத்துக்கு உட்படாமல் கொடுக்க சம்மதித்திருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்து கொண்ட சமரசம் என்றே பார்க்கப்படுகிறது.

சட்டத் திருத்தத்துடன் கூடிய 'நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்' சட்டம் ஆஸ்திரேலியாவின் செனட்டில் நிறைவேற்றப்பட்ட பிறகு, பிரதிநிதிகள் சபையில் இன்று (பிப்ரவரி 25, வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் என்ன செய்யும்?

ஆஸ்திரேலியாவின் 'நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்' சட்டம் ஒரு செய்தியின் மதிப்பைக் குறித்து, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு நியாயமான முறையில் பேரம் பேசும் செயல்பாட்டை மேற்கொள்ள உதவும் என வாதிடுகிறது ஆஸ்திரேலிய அரசு.

ஒருவேளை, செய்திகளுக்கான மதிப்பை இரு தரப்பினரும் சம்மதிக்கும் விதத்தில் நிர்ணயித்துக் கொள்ள முடியவில்லை என்றால், அச்செய்தியின் மதிப்பு ஒரு தனியார் நடுவர் மூலம் நிர்ணயிக்கப்படும் எனக் கூறியுள்ளது.

இந்த இணைய யுகத்தில் தங்கள் லாபத்தை இழந்த செய்தி நிறுவனங்களுக்கு இந்தச் சட்டம் உதவுவதாக இருக்கும் என்கிறது ஆஸ்திரேலியா.

இதுவரை பத்திரிகை நிறுவனங்களுக்கு குறைந்த அளவிலேயே பேரம் பேசும் சக்தி இருந்தது. காரணம் இந்நிறுவனங்கள் அதிக அளவில் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கைச் சார்ந்து இருக்கின்றன என ஆஸ்திரேலியாவின் சந்தை நெறிமுறையாளரான ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் கூறுகிறது.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன், அரசு, ஏற்கனவே தொழில்நுட்பத் தளங்கள் ஊடகத் துறைக்கு வழங்கியிருப்பதையும் (உதாரணமாக ஊடக நிறுவனங்களுடனான வணிக ரீதியிலான ஒப்பந்தங்கள்) கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனச் சட்டம் கூறுகிறது.

அதாவது ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் இந்த நடுவர் செயல்பாடுகளிலிருந்து முழுமையாக தப்பிவிடுவார்கள்.

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் தரப்பு கூறுவது என்ன?

செய்தி வலைதளங்களுக்கு பயனர்களைத் தருவதன் மூலம், பத்திரிகை நிறுவனங்களுக்கு ஏற்கனவே உதவிக் கொண்டிருப்பதாக தொழில்நுட்ப நிறுவனங்கள் வாதிடுகின்றன.

மக்கள் செய்தியைத் தேடி தெரிந்து கொள்ள ஃபேஸ்புக் மற்றும் கூகுள் எளிமையாக உதவிக் கொண்டிருக்கின்றன என அந்நிறுவனங்கள் கூறுகின்றன.

உள்ளூர் செய்தி நிறுவனங்களோடு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் அதே நேரத்தில், நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர ஆஸ்திரேலிய அரசுக்கு அழுத்தம் கொடுத்தன.

கூகுள் தன்னுடைய முதன்மைச் சேவையான கூகுள் தேடுபொறியை ஆஸ்திரேலியாவில் இருந்து பின் வாங்கப் போவதாக அச்சுறுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. கூகுள் உள்ளூர் செய்தி நிறுவனங்களோடு சில ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கிறது. இதில் நைன் எண்டர்டெயின்மெண்ட், செவன் வெஸ்ட் மீடியா, ரூபர்ட் மர்டாக்ஸ் நியூஸ் கார்ப்பரேஷன் போன்றவைகளும் அடக்கம்.

ஃபேஸ்புக் நிறுவனம் தன் ஆஸ்திரேலிய பயனர்களுக்கு, செய்திப் பதிவுகளைப் பார்க்க முடியாத வண்ணம் தடை விதித்தது. அத்தடையை நான்கு நாட்களுக்குப் பிறகு நீக்கியது. ஃபேஸ்புக் செவன் வெஸ்ட் மீடியா நிறுவனத்தோடு ஓர் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டிருக்கிறது. மற்ற ஆஸ்திரேலிய செய்திக் குழுக்களுடனும் ஒப்பந்தம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறது.

கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளும் ஆஸ்திரேலியாவின் 'நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்' சட்டத்துக்கு தன் விருப்பத்தை தெரிவித்திருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

செய்தி வாசிக்கும் நுகர்வோர்கள் நிறைய பேர் இணையத்துக்கு மாறிவிட்டதால், தங்கள் தளத்தில் பகிரப்படும் செய்திகளுக்கு அதிகம் பணம் கொடுக்குமாறு சர்வதேச அளவில் தொழில்நுட்ப தளங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

செய்தி நிறுவனங்களின் அதிகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் செய்தி நிறுவனங்கள் நிறைய தவறான செய்திகளை எதிர்கொள்வதும் அடக்கம்.