ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வெற்றி கண்டுள்ளது. ஐ.பி.எல்.லில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் மும்பை அணி கேப்டன் ரோகித்தின் கணக்குகள் தப்புக் கணக்குகளாகிப் போக, பெங்களூரு அணியோ வழக்கத்திற்கு மாறாக ஒருங்கிணைந்த சிறந்த அணியாக பரிமளித்துள்ளது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த முதல் போட்டி இதுவாகும். ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையே விளையாடிய அந்த அணி தொடக்கம் முதலே அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியில் பெங்களூரு பவுலர்கள் ஆதிக்கம்
பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி, பந்துவீச்சாளர்களின் கல்லறை என்றெல்லாம் வர்ணிக்கப்படும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு அணி முதல் பந்து முதலே முழுமையாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து, துரிதமாக ரன் சேர்க்க விடாமல் பார்த்துக் கொண்டதுடன் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள்.
குறிப்பாக, சர்வதேச அரங்கில் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக மெருகேறி வரும் முகமது சிராஜின் பந்துவீச்சில் அனல் பறந்தது. அவரது பந்துவீச்சில் ரன் எடுக்கவே மும்பை பேட்ஸ்மேன்கள் திணறிப் போயினர். இரண்டாவது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்து ரன் விகிதத்தை அதிகப்படுத்த முயன்ற இஷான் கிஷனை மூன்றாவது ஓவரிலேயே பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் சிராஜ்.
அடுத்து வந்த கேமரூன் கிரீனையும் பெங்களூரு பந்துவீச்சாளர்கள் நிலைக்க விடவில்லை. அடுத்த ஓவரிலேயே அவரை டோப்லே காலி செய்தார். இதற்கு அடுத்த 5-வது ஓவரில் ரோகித்தும் அவுட்டாகி இருக்க வேண்டும். முகமது சிராஜ் வீசிய அந்த பந்தில் ரோகித் 'புல் ஷாட்' ஆட, பந்து பேட்டின் விளிம்பில் பட்டு மேலெழும்பியது. அதனைப் பிடிக்க முகமது சிராஜூம், விக்கெட் கீப்பர் கார்த்திக்கும் ஒரே நேரத்தில் முயன்றதால் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டனர். பந்தை கேட்ச் செய்ய முடியவில்லை.
இதனால் கண்டம் தப்பிப் பிழைத்த ரோகித், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆகாஷ் தீப் வீசிய அடுத்த ஒவரிலேயே விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் யாரையும் பெங்களூரு பந்துவீச்சாளர்கள் களத்தில் செட்டிலாக விடவே இல்லை.
தனி ஒருவனாக மும்பையை கரை சேர்க்கப் போராடிய திலக் வர்மா
பெங்களூரு அணி பந்துவீச்சாளர்களின் அபார தாக்குதலை சமாளிக்க முடியாமல் மும்பை அணியே நிலைகுலைந்து போயிருந்த வேளையில், இளம் வீரர் திலக் வர்மா மட்டும் தனி ஒருவனாக களத்தில் நிலைத்து நின்று அணியை கரை சேர்க்க போராடிக் கொண்டிருந்தார். மும்பையின் மற்ற வீரர்கள் ரன் எடுக்கவே திணறிய அந்த ஆடுகளத்தில், 'இளம் கன்று பயமறியாது' என்பதை நிரூபிப்பது போல் திலக் வர்மா மட்டும் சர்வசாதாரணமாக சிக்சர், பவுண்டரிகளை விளாசிக் கொண்டிருந்தார்.
எதிர் முனையில் சூர்யகுமார், வதேரா, டிம் டேவிட் என விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும், திலக் வர்மாவின் ஆட்டத்தில் அது எந்த வகையிலும் சலனத்தை ஏற்படுத்தவே இல்லை. தான் சந்தித்த முதல் பந்து முதல் கடைசிப் பந்து வரை தனது இயல்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். 46 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னணி வீரர்கள் சொதப்பினாலும், திலக் வர்மாவின் அசத்தல் ஆட்டத்தால்தான் மும்பை அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது.
ஆர்.சி.பி. அபார பீல்டிங் - டுப்ளெஸ்ஸி அசத்தல் கேட்ச்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சைப் போலவே பீல்டிங்கிலும் அசத்தலாக செயல்பட்டது. எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த வேகப்பந்துவீச்சாளர் டோப்லே சிறப்பாக செயல்பட்டு சில பவுண்டரிகளை தடுத்தார். குறிப்பாக, பாயிண்ட் திசையில் சூர்யகுமார் அடித்த பந்தை டோப்லே தடுத்து நிறுத்தியது அபாரமாக இருந்தது.
பெங்களூரு அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் சிறப்பாக அமைந்ததால் பவுண்டரி, சிக்சர்களை விளாச முடியாமல் தவித்த இஷான் கிஷான், சூர்யகுமார் போன்ற மும்பை பேட்ஸ்மேன்கள் ரன் ரேட்டை அதிகரிக்கும் நெருக்கடியில் விக்கெட்டுகளை தாரை வார்த்தார்கள்.
ஹர்ஷல் படேல் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் மும்பை வீரர் ஹிருத்திக் ஷோகீன், லாங்ஆன் திசையில் அடித்த பந்தை பெங்களூரு அணி கேப்டன் பாப் டுப்ளெஸ்ஸி அந்தரத்தில் பாய்ந்து சென்று கேட்ச் செய்தது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
ரோகித் சர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் - முகமது சிராஜ் ஆகிய இருவரும் சரியான புரிந்துணர்வு இல்லாமல் கோட்டை விட்டது தவிர வேறு எந்த இடத்திலும் பீல்டிங்கில் பெங்களூரு அணி சோடை போகவில்லை.
டுப்ளெஸ்ஸி - கோலி அபார பேட்டிங்
மும்பை அணி வீரர்கள் ரன் சேர்க்க திணறிய அதே ஆடுகளத்தில் எப்படி ஆட வேண்டும் என்று பாடம் எடுப்பது போல் இருந்தது பாப் டுப்ளெஸ்ஸி - விராட் கோலி ஜோடியின் ஆட்டம். குறிப்பாக, டுப்ளெஸ்ஸி தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் மீது முழு ஆதிக்கம் செலுத்தினார். அவரது பேட்டில் இருந்து பவுண்டரிகளும், சிக்சர்களும் பறந்தபடியே இருந்தன.
டுப்ளெஸ்ஸியின் அதிரடியால் விராட் கோலி ரன் ரேட்டைப் பற்றி கவலைப்படாமல் எந்தவொரு அவசரமும் இன்றி நிதானமாக ஆட முடிந்தது. அவ்வப்போது ஏதுவான பந்துகளை விராட் கோலி எல்லைக்கோட்டிற்கு விரட்டவும் தவறவில்லை. 11-வது ஓவரிலேயே பெங்களூரு அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்துவிட்டது. கிட்டத்தட்ட இருவருமே களத்தில் நிலைத்து ஆடி பெங்களூரு அணியின் வெற்றியை உறுதி செய்துவிட்டனர். ஆட்டத்தின் எந்தவொரு கட்டத்திலும் மும்பை அணிக்கு வெற்றிவாய்ப்பு தென்படாமல் இருவரும் பார்த்துக் கொண்டனர்.
அணி சேர்க்கை சரியாக அமையாமல் தவிக்கும் மும்பை
மும்பை அணியைப் பொருத்தவரை, ஐ.பி.எல்.லில் 5 சாம்பியன் பட்டம் வென்ற வெற்றிகரமான அணி, சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி ஒரு காலத்தில் கோலோச்சியதைப் போல பிரமாண்ட அணியாக பார்க்கப்பட்ட அணி என்ற பெருமைக்குரியது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்ட கடந்த தொடருக்குப் பிறகு மும்பை அணியின் ஆட்டம் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை.
ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா ஆகிய சகோதர்களின் வெளியேற்றமும், சுமார் 10 ஆண்டுகளாக அந்த அணியின் மிடில் ஆர்டரில் முதுகெலும்பாக திகழ்ந்த கீரன் பொல்லார்ட்டின் ஓய்வும் மும்பை அணியை வெகுவாக பாதித்துள்ளது. பந்துவீச்சில் மும்பை அணியின் அஸ்திவாரமாக கருதப்படும் ஜஸ்பிரித் சிங் பும்ரா காயத்தால் அவதிப்படுவதும் மும்பை அணியை பலவீனப்படுத்தியுள்ளது.
பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பவர் பிளே ஓவர்களில் மும்பை அணியால் 3 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
டி20 கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டாராக வர்ணிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவின் மோசமான பார்ம் தொடர்வதும் மும்பை அணிக்கு கவலை அளிக்கும் விஷயம். சரியான அணிச் சேர்க்கை அமையாமல் அந்த அணி திணறி வருவது கடந்த தொடரிலேயே கண்கூடாக தெரிந்தது. அதன் விளைவாக கடந்த தொடரில் அந்த அணியால் கடைசி இடத்தையே பிடிக்க முடிந்தது. அந்த சோகம் இப்போதும் தொடர்கிறது. இந்த போட்டியில் தனி ஒருவனாக பேட்டிங்கில் போராடிய இளம் வீரர் திலக் வர்மா மட்டுமே மும்பை அணிக்கு ஆறுதல் தரும் விஷயம்.
பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் கோட்டை விட்ட ரோகித் சர்மா
பெங்களூரு அணிக்கு மட்டுமல்ல, அதன் பேட்டிங்கிற்கும் கம்பீரமாக தலைமை தாங்கி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முழுமையாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்க, அதற்கு நேரெதிராக ரோகித்தின் முடிவுகள் அமைந்துவிட்டன. சர்வதேச தரம் வாய்ந்த டுப்ளெஸ்ஸி - கோலி ஜோடி இன்னிங்சைத் தொடங்கும் போது, அவர்களுக்கு இணையானமுன்னணி பந்துவீச்சாளரான ஆர்ச்சரைக் கொண்டு முதல் ஓவரைத் தொடங்காமல் தவறிழைத்தார் ரோகித்.
பெஹரென்டார்ஃப், அர்ஷத்கான் ஆகியோரை முதல் 3 ஓவர்கள் வீசச் செய்தார் ரோகித். ஆனால், தொடக்கத்திலேயே அவர்களது பந்துவீச்சை அடித்து நொறுக்கிவிட்ட டுப்ளெஸ்ஸி - கோலி ஜோடி களத்தில் தங்களை நன்றாக நிலைநிறுத்திக் கொண்டுவிட்டது. இதனால், நான்காவது ஓவரை ஆர்ச்சர் வீச வருகையில் அவரை பவுண்டரி, சிக்சருடன் வரவேற்றார் கோலி. இதன் பிறகு பெங்களூரு அணிக்கு நெருக்கடி கொடுக்க மும்பை அணிக்கு வேறு பந்துவீச்சாளர்களே இல்லாத நிலை உருவாகிவிட்டது.
டுப்ளெஸ்ஸி - கோலி ஆகிய அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்களுக்கு முதல் ஓவரில் இருந்தே நெருக்கடி தராமல், களத்தில் செட்டிலாக அனுமதித்து ரோகித் பெரும் தவறிழைத்துவிட்டார். அந்த தவற்றில் இருந்து மும்பை அணியால் கடைசி வரை மீளவே முடியாமல் போய்விட்டது.
மும்பை அணிக்கு பலம் சேர்க்காத இம்பாக்ட் பிளேயர்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்பாக்ட் பிளேயர் விதி, இந்தப் போட்டியில் மும்பை அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையவில்லை. ஆடும் லெவனில் 3 வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியதால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்த பிறகு, பந்துவீச்சுக்கு பலம் சேர்க்க வேகப்பந்துவீச்சாளர் பெஹரெண்டார்ஃபை சூர்யகுமாருக்குப் பதிலாக இம்பாக்ட் பிளேயராக அணியில் சேர்த்துக் கொண்டது. ஆனால், அந்த அணி எதிர்பார்த்த தாக்கத்தை அவரால் களத்தில் ஏற்படுத்த முடியவில்லை.
பெஹரெண்டார்ஃப் வீசிய பந்துகளை டுப்ளெஸ்ஸி - கோலி ஜோடி எளிதாக எல்லைக்கோட்டிற்கு அனுப்பிவைத்தது. 3 ஓவர்களை வீசிய அவர் 37 ரன்களை விட்டுக் கொடுத்தும் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை.
அதேநேரத்தில் மறுபுறம், இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இம்பாக்ட் பிளேயரே தேவைப்படவில்லை. எந்தவொரு கட்டத்திலும் இம்பாக்ட் பிளேயரின் தேவை எழாததால் அந்த அணி இந்த விதியை பயன்படுத்திக் கொள்ளவே இல்லை.
ஆர்.சி.பி. அணியின் ஆதிக்கம் செலுத்தும் மனப்பாங்கு
பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என்று அனைத்து துறைகளிலும் பெங்களூரு அணி சிறப்பாக செயல்பட்டு, மும்பை அணியை தொடக்கம் முதல் இறுதி வரை கட்டிப் போட்டுவிட்டது. குறிப்பாக, பேட்டிங்கில் மும்பை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பெங்களூரு பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் எந்தவொரு கட்டத்திலும் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் சவால் அளிப்பதாக தோன்றவே இல்லை.
டுப்ளெஸ்ஸியும், கோலியும் மும்பை அணியின் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் தொடக்கத்திலேயே அடித்து நொறுக்கி நெருக்கடியில் தள்ளிவிட்டனர். இந்த ஆதிக்கத்தைத் தொடரும் பொருட்டு, டுப்ளெஸ்ஸி ஆட்டமிழந்ததும் முதல் பந்து முதலே அதிரடியாக ஆடும் தினேஷ் கார்த்திக்கை அந்த அணி களத்தில் இறக்கியது. அவர் ஏமாற்றம் அளித்தாலும் அடுத்து வந்த மேக்ஸ்வெல் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார்.
ஆர்.சி.பி. அணியின் முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் அணுகுமுறை சிறப்பான பலனைத் தந்தது. கிட்டத்தட்ட 4 ஓவர்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே அந்த அணி வெற்றிக்கனியைப் பறித்துவிட்டது. ஆட்டத்தின் எந்தவொரு தருணத்திலும் வலுவான மும்பை அணியை மீண்டெழவே அனுமதிக்காமல் பெற்ற இந்த அபார வெற்றி பெங்களூரு அணியின் இமேஜை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
தொடர்ந்து 11-வது சீசனாக முதல் போட்டியில் மும்பை அணி தோல்வி
ஐ.பி.எல்.லில் வெற்றிகரமான அணியாக வலம் வந்தாலும், மும்பை அணியைப் பொருத்தவரை முதல் போட்டியில் தோற்று விடும் வரலாறு தொடர்கிறது. பெங்களூரு அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தின் மூலம் அந்த வரலாற்றை மாற்ற முயன்ற மும்பை அணி மீண்டும் ஒருமுறை தோற்றுப் போயிருக்கிறது. ஆனாலும், இது வழக்கமான தோல்விகளில் ஒன்றுதான் என்று மும்பை அணி ரசிகர்களால் கடந்து போக முடியவில்லை.
ஏனெனில், அந்த அணியை கடந்த தொடரில் இருந்தே படுதோல்விகள் துரத்திக் கொண்டிருக்கின்றன. அது தற்போதும் தொடர்வதால், தங்களது அபிமான அணி மீண்டும் ஒரு சாம்பியன் அணியாக மீண்டெழும் நாளை அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். அதேநேரத்தில் ஐ.பி.எல்.லில் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்தாலும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இம்முறை அந்த வரலாற்றை மாற்றி எழுதும் என்று நம்பிக்கையை அந்த அணி ரசிகர்கள் பெற்றுள்ளனர்.