1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (08:23 IST)

சொந்த ராக்கெட்டில் விண்வெளி சென்று திரும்பிய பிரிட்டன் வணிகர் ரிச்சர்ட் பிரான்சன்!

விண்வெளியின் எல்லைக்கு சென்று திரும்ப வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை 71 வயதில் நனவாக்கிக்கொண்டுள்ளார் பிரிட்டன் வணிகர் சர் ரிச்சர்ட் பிரான்சன். அதுவும் சொந்த பணத்தில் உருவாக்கிய ராக்கெட் மூலம்.
 
விர்ஜின் கேலக்டிக் என்ற அவரது நிறுவனம் உருவாக்கிய யுனிட்டி என்ற ராக்கெட் விமானம் தனது ஒன்றரை மணி நேர விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிவிட்டது.
 
புவியின் காட்சி மறைகிற, வானம் இருண்டு கிடக்கிற, ஈர்ப்பு விசை மிகவும் குறைந்துபோய் தானாய் மிதக்கிற உயரத்துக்கு சென்று திரும்பியிருக்கிறார் பிரான்சன்.
 
நியூ மெக்சிகோவில் இருந்து...
 
அடுத்த ஆண்டு பணம் கொடுத்து பறக்க விரும்புகிறவர்களை இட்டுச் செல்வதற்கு முன்பு இந்த பயணத்தை தாம் அனுபவித்துப் பார்க்க விரும்பியதாக பிரான்சன் கூறினார். பிரிட்டன் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் இருந்து இந்தப் பயணம் புறப்பட்டது.
 
விண்வெளிக்குச் செல்லும் தனது விருப்பத்தை 2004ல் தெரிவித்தார் பிரான்சன். பல தடைகளைக் கடந்து இப்போது நனவாகியிருக்கிறது அந்தக் கனவு.
 
"குழந்தைப் பருவத்தில் இருந்தே விண்வெளிக்கு செல்ல விரும்பினேன். அடுத்த நூறாண்டில் பல்லாயிரம் பேர் விண்வெளிக்கு செல்ல உதவி செய்யவேண்டும் என்றும் நினைத்தேன்," என்று பிபிசியிடம் தெரிவித்தார் ரிச்சர்ட்.
 
அவரது ராக்கெட் விமானம் எப்படி வேலை செய்தது?
யுனிட்டி' என்ற அவரது ராக்கெட்டை மிகப்பெரிய இரண்டு விமானங்கள் சுமந்துகொண்டு சுமார் 15 கி.மீ. உயரத்தை, அதாவது 50 ஆயிரம் அடி உயரத்தை, அடையும் என்றும், அங்கே விமானங்கள் கழற்றிக்கொள்ள, ராக்கெட்டின் மோட்டார் கிளப்பப்பட்டு அங்கிருந்து விண்வெளி நோக்கிப் பயணம் தொடங்கும் என்றும் திட்டமிடப்பட்டது.
 
60 விநாடிகளுக்கு அந்த மோட்டார் இயக்கப்படும். அப்போது கீழே பூமி அழகான காட்சியை வழங்கும். அதிகபட்சமாக 90 கி.மீ. உயரத்தை எட்டும் வகையில் இந்தப் பயணம் வடிவமைக்கப்பட்டது. அதாவது 2 லட்சத்து 95 ஆயிரம் அடி உயரம். உச்சத்தை அடையும் நிலையில் எடை அற்றுப் போய் ராக்கெட்டிலேயே ரிச்சர்ட் பறக்கத் தொடங்குவார் என்பது திட்டம்.
 
அதிகபட்ச உயரத்தை அடைந்தபிறகு அங்கிருந்து அவர் தனது இருக்கைக்குத் திரும்பி தம்மை பூட்டிக் கொண்டு, கிளைடர் முறையில் பூமியை நோக்கித் திரும்பவேண்டும் என்று திட்டமிடப்பட்டது.
 
பெண் விண்வெளி வீரரின் கட்டளைப்படி...
ரிச்சர்டின் விர்ஜின் கேலக்டிக் விண்வெளிப் பயண நிறுவனத்தைச் சேர்ந்த, பெத் மோசஸ் என்ற பெண் விண்வெளி வீரர், பிரான்சனின் பயணம் முழுவதையும் தரையில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருப்பார் என்று திட்டமிடப்பட்டது.
 
யுனிட்டி ஓர் அரை சுற்றுவட்டப் பயண வாகனம். அதாவது, புவியை சுற்றி வருவதற்குத் தேவையான திசைவேகத்தையோ, உயரத்தையோ இந்த வாகனத்தால் அடையமுடியாது.
 
விண்வெளியின் விளிம்பு
கடல் மட்டத்தில் இருந்து 80 கி.மீ. உயரத்தை விண்வெளியின் விளிம்பு என்று வரையறுத்திருக்கிறது அமெரிக்கா. பிரான்சனின் வாகனம் இந்த உயரத்தைக் கடந்து சென்று திரும்புவதாகத் திட்டம். எனவே, இந்த தனியார் விண்வெளிப் பயணத்தை விண்வெளியின் விளிம்புக்குப் பயணம் என்று பலரும் வருணிக்கிறார்கள். விளிம்பு என்றால் வெளி விளிம்பு என்று பொருள் கொள்ளக்கூடாது.
 
(பிபிசி அறிவியல் செய்தியாளர் ஜொனாதன் அமோஸ் செய்தியைத் தழுவி எழுதப்பட்டது)