1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 12 மே 2021 (10:23 IST)

இஸ்ரேல் - பாலத்தீன மோதல்: டெல் அவிவ் மீது ஹமாஸ் ஏவிய 137 ராக்கெட்டுகள்: காசா தாக்குதலுக்கு பதிலடி

காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று வீழ்த்தப்பட்ட பின்பு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி தாங்கள் சுமார் 130 ராக்கெட்டுகளை ஏவித் தாக்குதல் நடத்தியதாக பாலத்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த கட்டடத்தில் குடியிருப்பவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் உடனே வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்த ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு அதன் மீது  தாக்குதல் நடத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
 
காசாவில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர்கள் குடியிருக்கும் ஹானாடி டவர்ஸ் எனும் அடுக்குமாடி கட்டடம் இஸ்ரேல் வான் தாக்குதலால் அழிக்கப்பட்ட  பின்பு இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.
 
இந்த கட்டடம் தகர்க்கப்பட்ட பல மணி நேரங்களுக்கு பிறகும் அங்கிருந்து காயமடைந்தவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் எதுவும்  வெளியாகவில்லை.
 
தங்களை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசாவில் உள்ள தீவிரவாதிகளை நோக்கி நாங்கள் தாக்குதல் நடத்தினோம் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
 
ஹமாஸ் ஏவிய 90% ராக்கெட்டுகளை நடுவானில் இடைமறித்து அழித்து விட்டோம் என்கிறது இஸ்ரேல்.
 
இஸ்ரேல்-பாலத்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ்ந்து வரும் மோதல் காரணமாக இதுவரை குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
ஜெருசலேமில் பதற்ற நிலை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இரு தரப்பினரும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி  வருகிறது.
 
பாலத்தீன ஹமாஸ் போராளி குழுவைச் சேர்ந்தவர்கள் டெல் அவிவ் மற்றும் பிற பகுதிகளை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இதுவரை இஸ்ரேல் தரப்பில் மூவரும் பாலத்தீன தரப்பில் 28 பேரும் கொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
 
கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த முறை ராக்கெட் தாக்குதல் நடத்தியதன் மூலம் ஹமாஸ் அமைப்பு எல்லையை மீறி விட்டது என்று  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
 
ஆனால் இஸ்ரேலின் ஆதிக்கம் மற்றும் தீவிரவாதத்தில் இருந்து ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியை பாதுகாப்பதற்காகவே தாங்கள் இவ்வாறு செயல்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவிக்கிறது.
 
2017ஆம் ஆண்டுக்குப் பின்பு மிகவும் மோசமான வன்முறையை ஜெருசலேம் நகரம் தற்போது சந்தித்து வருகிறது.
 
சமீபத்திய நிலவரம் என்ன?
 
டெல் அவிவ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
 
மக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டடங்களை எதிரிகள் தாக்கியதால் அதற்கு பதிலடியாக இதை செய்துள்ளோம் என்கிறது அந்த அமைப்பு.
 
இந்த தாக்குதலின் காணொளிகளும் வெளியாகியுள்ளன. டெல் அவிவ் நகரில் இரவு வானில் ராக்கெட்டுகள் கடந்து செல்வதைப் பார்க்க முடிகிறது.
 
இஸ்ரேலால் ஏவப்பட்ட ராக்கெட்டுகளை தடுத்து அழிக்கும் ஏவுகணைகளை நடுவானில் வெடித்து சிதறுவதையும் அந்தக் காணொளிகள் காட்டுகின்றன.
 
டெல் அவிவ் அருகே உள்ள ரிஷான் லேசியான் எனும் இடத்தில் நடந்த தாக்குதலில் 50 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய காவல்துறை  தெரிவிக்கிறது.
 
புறநகர்ப் பகுதியான ஹோலோன் எனும் இடத்தில் யாரும் இல்லாத பேருந்து ஒன்றில் மீது ராக்கெட் வந்து விழுந்தது என இஸ்ரேலியக் காவல் துறையின் செய்தித்  தொடர்பாளர் மிக்கி ரோஷன்ஃபெல்டு ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
 
ஹோலோன் நகரில் 5 வயதாகும் ஒரு குழந்தையும் இரண்டு பெண்களும் காயமடைந்துள்ளனர்.
 
ராக்கெட் தாக்குதல் நடந்த சமயத்தில் பாதசாரிகள் மற்றும் உணவகங்களில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பாதுகாப்பு தேடி ஓடியதாகவும், வேறு சிலர் நடைபாதைகளில் பாதுகாப்புக்காகத் தட்டையாகப் படுத்திருந்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
 
பென் குரியோன் விமான நிலையத்தின் சேவைகள் சற்றுநேரம் முடக்கப்பட்டன. எய்லாத் மற்றும் ஆஷ்கேலோன் ஆகிய நகரங்களுக்கு இடையே எரிபொருள் கொண்டு செல்லும் குழாயும் தாக்குதலுக்கு உள்ளானது.
 
ஹனாடி டவர்ஸ் தவிர, இன்னொரு அடுக்கு மாடி கட்டடம் அங்கு குடியிருப்போர் மற்றும் அங்கிருப்பவர்கள் வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்பு தாக்கப்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன.
 
'90% ராக்கெட்டுகளை தடுத்து அழித்துவிட்டோம்'
முன்னதாக செவ்வாயன்று இஸ்ரேலின் ஆஷ்கேலோன் நகரில் 60 வயதாகும் பெண் ஒருவரும் 80 வயதாகும் பெண் ஒருவரும் ராக்கெட் தாக்குதலில்  கொல்லப்பட்டதாகவும் ஒருவர் தீவிரமாக காயமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஆஷ்கேலோன் மற்றும் அதன் அருகிலுள்ள ஆஸ்டோத் எனுமிடத்தில் மீதும் ஐந்து நிமிடத்தில் 137 ராக்கெட்டுகளை தாங்கள் ஏவியதாக ஹமாஸ் அமைப்பு  தெரிவிக்கிறது.
 
ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளில் குறைந்தது 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
ஹமாஸால் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட 90% ராக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டன என இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கிறது.
 
காசாவில் இஸ்ரேலுடனான எல்லை அருகே தாக்குதல் நடத்துவதற்காக தோண்டப்பட்ட 2 சுரங்கங்களில் தாங்கள் அளித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
 
இஸ்லாமிய ஜிகாதியவாத குழுவின் ராக்கெட் பிரிவின் தலைவர் சமத் அபேத் அல் -மக்லோத் மற்றும் ஹமாஸ் அமைப்பின் டாங்கிகளை அழிக்கும் பிரிவின்  தலைவரும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
 
காசாவில் 10 குழந்தைகள் உட்பட குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.
 
உயிரிழந்தவர்களில் 59 வயதாகும் பெண் ஒருவரும் அவரது மாற்றுத்திறனாளி மகனும் அடக்கம் நகரில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7  பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
 
'இது வெறும் தொடக்கம்தான்' - இஸ்ரேல்
 
இந்த தாக்குதல்கள் வெறும் தொடக்கம்தான் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரேல் பதற்றத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு தாங்களும் தயார் என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியே  தெரிவித்துள்ளார்.
 
அவர்கள் நிறுத்த விரும்பினால் நாங்களும் நிறுத்திக்கொள்ள தயார் என்று தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட உரையில் அவர் தெரிவித்தார்.
 
இஸ்ரேல்-பாலத்தீன பிரச்னை குறித்து விவாதிக்க இன்று புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சில் இன்று கூட உள்ளது.
 
இஸ்ரேல் - பாலத்தீன தரப்புகள்: சமீபத்திய வன்முறை ஏன்?
 
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜெருசலேம் நகரில் சமீப நாட்களாக வன்முறை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
 
திங்களன்று ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதிக்கு வெளியே இஸ்ரேலிய காவல்துறையினருடன் நடந்த மோதலில் 300க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள்  காயமடைந்தனர்.
 
கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள இஸ்லாமியர்கள் வாழும் பகுதி வழியாக இஸ்ரேலிய தேசியவாதிகள் கொடி அணிவகுப்பு ஒன்றை, திங்களன்று நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனும் அச்சத்தின் காரணமாக கைவிடப்பட்டது.
 
ஆண்டுதோறும் ஜெருசலேமில் நடக்கும் ஜெருசலேம் தின கொடி அணிவகுப்பின் போது இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் வழியாக ஜியனிச (zionism)  கொள்கையுடைய யூதர்கள் செல்வார்கள்.
 
1967ஆம் ஆண்டு ஜெருசலேம் பழைய நகரம் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியதை கொண்டாடும் நிகழ்வாக இந்த அணிவகுப்பு  நடைபெறுகிறது.
 
ஆண்டுதோறும் ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் நடைபெறும் இந்தக் கொடி அணிவகுப்பு, தங்களை வேண்டுமென்றே தூண்டிவிடும் செயல் என்று பாலத்தீன  தரப்பு கருதுகிறது.
 
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் உள்ள தங்கள் வாழ்விடங்களில் இருந்து, யூத குடியேறிகளால் பாலத்தீன குடும்பங்கள் வெளியேற்றப்பட  வாய்ப்புள்ள சூழல் உருவானது பாலத்தீனர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது. இதனால் அங்கு சமீப நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது.
 
யூத குடியேறிகளுக்கு ஆதரவாக தங்களது சொந்த இடத்திலிருந்து பாலத்தீன குடும்பத்தினர் வெளியேற்றப்படுவதை, எதிர்த்து 70க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள்  தொடர்ந்த வழக்கு பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.
 
ஆனால் திங்கட்கிழமை இஸ்ரேலிய அரசின் தலைமை வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நடக்கும் வன்முறைகளை காரணம் காட்டி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. விசாரணை தள்ளி வைக்கப்பட்ட முப்பது நாட்களுக்குள் புதிய தேதி முடிவு செய்யப்படும்.
 
கிழக்கு ஜெருசலேம் - ஏன் முக்கியம்?
 
இஸ்ரேல் - பாலத்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.
 
1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின்பு கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
 
1980-ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு கிழக்கு ஜெருசலேமை தங்களுடன் இணைத்துக் கொண்டது.
 
ஜெருசலேம் நகரம் தங்களது தலைநகரம் என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் சர்வதேச நாடுகள் பலவும் இதை அங்கீகரிக்கவில்லை.
 
எதிர்காலத்தில் அமையக் கூடும் என்று தாங்கள் நம்பும் சுதந்திர நாட்டுக்கு கிழக்கு ஜெருசலேம்தான் தலைநகராக அமையும் என்று பாலத்தீனர்கள் கூறுகிறார்கள்.
 
கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ளது அல்-அக்சா மசூதி. இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தலமாக கருதப்படும் அல்-அக்சா மசூதி இஸ்லாமியர்களால் ஹரம் ஷெரிப் என்று அழைக்கப்படுகிறது. மலைக் குன்றின் மேல் அமைந்துள்ள இந்த இடத்தை யூதர்களும் புனிதத் தலமாக கருதுகின்றனர்.
 
அவர்கள் இதை 'டெம்பிள் மவுன்ட்' (கோயில் மலை) என்று அழைக்கின்றனர். தங்களின் இரண்டு விவிலிய புனித இடங்களில் ஒன்றாக யூதர்கள் இதைக்  கருதுகிறார்கள்.