வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (15:36 IST)

விலங்கு: நடிகர் விமலின் வெப் சீரிஸ் எப்படி இருக்கிறது?

நடிகர்கள்: விமல், இனியா, முனீஸ்காந்த், பால சரவணன், ரேஷ்மா, நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, ஆர்என்ஆர் மனோகர்; ஒளிப்பதிவு: தினேஷ்குமார் புருஷோத்தமன்;இசை: அனீஸ்; இயக்கம்: பிரசாந்த் பாண்டிராஜ். வெளியீடு: Zee5
 
ப்ரூஸ் லீ படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜும் விமலும் இணைந்து உருவாக்கியிருக்கும் முதல் வெப் சீரிஸ்தான் இந்த 'விலங்கு'. Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த வெப் சீரிஸில் மொத்தமாக 7 எபிசோடுகள்.
 
திருச்சி மாவட்டத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தை மையமாக வைத்து நடக்கிறது கதை. அந்த காவல் நிலைய எல்லைக்குள் ஒரு அடையாளம் தெரியாத சடலம் கிடைக்கிறது. அதைப் பற்றி காவல்துறை விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, அதன் தலை காணாமல் போகிறது.
 
அதிர்ந்துபோகும் காவல்துறையினர் தலையைத் தேடிக்கொண்டிருக்கும்போது, அந்தப் பகுதி எம்எல்ஏவின் காணாமல் போன மைத்துனரின் சடலம் கிடைக்கிறது. எம்எல்ஏவின் மைத்துனரின் கொலையில் சம்பந்தப்பட்டவரை ஒரு கட்டத்தில் காவல்துறை கைதுசெய்கிறது. ஆனால், அதற்குப் பிறகுதான் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது.
 
காவல்துறைக்கு வெளியிலிருந்து ஒருவர் காவல்துறையைப் பார்க்கும் பார்வையிலிருந்தே பெரும்பாலான காவல்துறை திரைப்படங்கள் உருவாக்கப்படும் நிலையில், ஒரு காவல்நிலையத்திற்கு உள்ளிருப்பவர்களின் பார்வையில் இந்த வெப் சீரிஸை உருவாக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். ஸ்காண்டிநேவிய நாடுகளில் உருவாக்கப்படும் பல துப்பறியும் தொடர்களில், துப்பறியும் காவல்துறை அதிகாரிக்கு பல சொந்தப் பிரச்சனைகள் இருக்கும். அவற்றை மீறியே துப்பறியும் பணிகளில் ஈடுபடுவதாக கதை நகரும். அதே பாணியில், இந்தத் திரில்லரை உருவாக்கியிருக்கிறார் பிரசாந்த்.
 
மொத்தமுள்ள 7 எபிசோடுகளில் முதல் 3-4 எபிசோடுகளுக்கு விறுவிறுவென நகர்கிறது கதை. ஆனால், தொடரின் பிற்பாதியில் கொலைகாரன் என ஒருவரைக் கைதுசெய்த பிறகு, தொய்வடைந்து போகிறது திரைக்கதை. முதல் பாதி புலனாய்வில் இருந்த கச்சிதமான தன்மையும் காணாமல்போய், பரபரப்பான கொலை வழக்கை குழந்தை விளையாட்டு போல கையாளுகிறது காவல்துறை.
 
காவல் நிலையங்களுக்குள் நடக்கும் சித்ரவதைகள், காவலர்களின் பார்வையிலிருந்து மிகச் சாதாரணமான ஒரு விஷயமாகக் காட்டப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. வெப்சீரிஸ்களில் பொதுவாகவே கெட்ட வார்த்தைகள் சர்வசாதாரணமாகப் பயன்படுத்தபடுபவைதான் என்றாலும், இந்தத் தொடரில் அது உச்சகட்டத்திற்குச் சென்றிருக்கிறது.
 
இதில் காவல் நிலைய துணை ஆய்வாளராக வருகிறார் விமல். சில இடங்களில் காவல்துறை அதிகாரியைப் போலவும், சில இடங்களில் தனது முந்தைய படங்களின் சாயலிலும் நடித்திருக்கிறார். ஆனால், பிற காவல்துறை அதிகாரிகளாக வரும் ஆர்என்ஆர் மனோகர், சக்ரவர்த்தி ஆகியோருக்கு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது.
 
விமலின் மனைவியாக வரும் இனியாவின் பாத்திரமும் அவரது நடிப்பும் நன்றாகவே அமைந்திருக்கிறது. பால சரவணனுக்கு இந்தப் படத்தில் காவலர் வேடம். 'அடி நொறுக்கியிருக்கிறார்'. கிச்சா என்ற பாத்திரத்தில் வரும் நபரின் நடிப்பு குறிப்பிடத்தக்க ஒன்று.
 
இந்தத் தொடரில் தேவையற்ற பல காட்சிகள் கதைக்கு எந்த விதத்திலும் உதவாமல் நீண்டுகொண்டே போகின்றன. அவற்றைத் தவிர்த்து, முதல் பாதியில் காட்டிய கவனத்தை பிற்பாதியிலும் காட்டியிருந்தால், ஒரு நல்ல த்ரில்லர் தமிழுக்குக் கிடைத்திருக்கும்.