அமெரிக்காவில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது உறுதி - டிரம்ப் திட்டவட்டம்

trumph
Last Modified சனி, 16 பிப்ரவரி 2019 (09:49 IST)
அமெரிக்கா - மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டுவதற்காக எனது அவசரகால அதிகாரத்தை பயன்படுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டுமொருமுறை உறுதி செய்துள்ளார்.
 
2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய பிரசாரத்திலிருந்தே அமெரிக்கா - மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டுவேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்து வரும் நிலையில், அதை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
 
அதைத்தொடர்ந்து, அமெரிக்க அரசுத்துறைகள் செயல்பாட்டுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் மசோதாவுக்கு அனுமதி கொடுக்காமல் டிரம்ப் முரண்டு பிடித்தார்.
 
அதாவது, தனது எல்லைச்சுவர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் இசைவு தெரிவித்தால் மட்டுமே அமெரிக்க அரசுத்துறைகளின் பகுதியளவு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
இந்நிலையில், டிரம்பின் எல்லைச்சுவர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே, அரசுத்துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கோபமடைந்த டிரம்ப், நாட்டில் அவசரநிலையை அறிவித்துவிட்டு, அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை கொண்டு எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதிக்கு தாமே ஒப்புதல் வழங்கவுள்ளதாக கூறி வருகிறார்.

இதில் மேலும் படிக்கவும் :