விண்வெளி பயணம்: அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் இந்தியா!
ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்காக விமானப்படையை சேர்ந்த 10 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துகொள்ள இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு 'ககன்யான்' விண்கலம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ககன்யான் திட்டத்துக்காக விமானப்படையில் பணியாற்றும் 10 பேர் தேர்வு செய்யப்படிருக்கிறார்கள். அவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் பொறுப்பு இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
பயிற்சியின் முதல் இரண்டு கட்டங்கள் பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவ நிறுவனம் (ஏரோஸ்பேஸ் மெடிக்கல் இன்ஸ்டிடியூட்) மற்றும் விமானப்படை நிறுவனத்தில் (இந்திய ஏர்போர்ஸ் இன்ஸ்டிட்யூட்) நடக்கும். அதன் பிறகு இறுதி கட்டமாக வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
அதில் இறுதியாக 3 பேர் தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். ரஷியா, பிரான்ஸ் போன்ற 23 நாடுகளிலும் இவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இஸ்ரோ விண்வெளி வீரர்கள் யாரும் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படப்போவதில்லை. விமானப்படையில் உள்ள வீரர்களே விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.