இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார். பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் அவர்.
அவரது மறைவு தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தனது நேசத்துக்குரிய கணவர், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப் இறந்து விட்டார் என்ற தகவலை மாட்சிமை பொருந்திய அரசி ஆழ்ந்த வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மேதகு இளவரசரின் உயிர் இன்று காலை வின்சர் கோட்டையில் அமைதியான முறையில் பிரிந்தது," என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தம்பதியின் முதல் மகனும் வேல்ஸ் இளவரசருமான சார்ல்ஸ், 1948இல் பிறந்தார். இவரைத் தொடர்ந்து இளவரசி ஏன் 1950இலும், யோர்க் கோமகன் ஆண்ட்ரூ 1960இலும், இளவரசர் எட்வர்ட் 1964இலும் பிறந்தனர்.
இளவரசர் ஃபிலிப், கிரேக்க தீவான கோர்ஃபுவில் 1921ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிறந்தார்.
இந்த தம்பதிக்கு நான்கு பிள்ளைகள், எட்டு பேரக்குழந்தைகள், 10 கொள்ளுப்பேரப்பிள்ளைகள் உள்ளனர்.